மக்களவை தேர்தல்: தமிழ்நாட்டில் பாஜக - பாமக கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்து
திண்டிவனத்தில் உள்ள தைலாபுரம் தோட்டத்தில் பாமக நிறுவனம் ராமதாஸ், தலைவர் அன்புமணி ராமதாஸை, இன்று காலை பாஜக தலைவர் அண்ணாமலை, மத்திய இணை அமைச்சர் எல். முருகன் உள்ளிட்டோர் சந்தித்தனர். அப்போது இரு கட்சிகள் இடையே தொகுதிப்பங்கீடு இறுதியானது.
இதுதொடர்பான ஒப்பந்தத்தில் பாஜக சார்பில் அண்ணாமலை, பாமக சார்பில் அன்புமணி ஆகியோர் கையெழுத்திட்டனர். அதில், பாஜக கூட்டணியில் உள்ள பாமகவிற்கு 10 மக்களவை தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, தர்மபுரி, அரக்கோணம், திண்டுக்கல், ஆரணி, கடலூர், ஸ்ரீபெரும்புதூர் மற்றும் மத்திய சென்னை உள்ளிட்ட தொகுதிகள் பாமகவிற்கு ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதன்மூலம், 2014ம் ஆண்டு மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு மீண்டும் பாஜக கூட்டணியில் பாமக இணைந்துள்ளது. முன்னதாக 1998ம் ஆண்டும் பாஜக கூட்டணியில் பாமக தேர்தலில் களம் கண்டது குறிப்பிடத்தக்கது.
பாஜக உடனான கூட்டணி ஒப்பந்தம் இறுதியானதை தொடர்ந்து அன்புமணி மற்றும் அண்ணாமலை ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.
அப்போது பேசிய அன்புமணி, “தேசிய ஜனநாயக கூட்டணியில் கடந்த 10 ஆண்டுகளாக பாமக அங்கம் வகித்து வருகிறது. வரும் நாடாளுமன்ற மக்களவை தேர்தலிலும் சேர்ந்து போட்டியிட முடிவு செய்துள்ளோம். நாட்டின் நலன் கருதி, பிரதமர் மோடியின் நல்லாட்சி தொடர, தமிழ்நாட்டில் மாற்றங்கள் வரவேண்டும் என்ற நோக்கில் இந்த கூட்டணி முடிவை எடுத்து இருக்கிறோம்.
இந்த முடிவுக்கு பிறகு 60 ஆண்டுகளாக தமிழகத்த ஆட்சி செய்து கொண்டிருப்பவர்கள் மீது, மக்களுக்கு வெறுப்பான ஒரு சூழலை கொண்டுள்ளனர். மாற்றம் வேண்டும் என்ற எண்ணம் ஆழமாக உள்ளது. அதற்காகவே இந்த கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது. இதில் தமிழ்நாடு மட்டுமின்றி நாடு முழுவதும் பெரும் வெற்றி பெறும்” என அன்புமணி கூறினார்.
தொடர்ந்து பேசிய அண்ணாமலை, “பாமகவிற்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகள் தொடர்பான விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும்” என தெரிவித்தார். பாமகவிற்கு மாநிலங்களை பதவி வழங்கப்படுமா என்ற கேள்விக்கு, அதுகுறித்து விரைவில் பேசுவோம் என அண்ணாமலை தெரிவித்தார்.
பாஜக மற்றும் பாமக இடையேயான சமீபத்திய கூட்டணி, தென் மாநில திராவிட அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வன்னியர்களை மையமாகக் கொண்ட பா.ம.க., மாநிலத்தின் பல நாடாளுமன்றத் தொகுதிகளில் வெற்றி வாய்ப்பை தீர்மானிக்கும் கணிசமான செல்வாக்கைக் கொண்டுள்ளது. பாமகவை தனது பக்கம் ஈர்ப்பதன் மூலம், காவி கட்சி இந்த தேர்தல்களில் அ.தி.மு.க.வுக்கு பலமான ஆட்டத்தை வெளிப்படுத்துவது கடினமான பணியாக மாறியுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu