2 வருடம் சிறை தண்டனை எதிரொலி: ராகுல் காந்தியின் எம்.பி. பதவி பறிப்பு

இரண்டு வருடம் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதால் மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி ராகுல் காந்தி எம்.பி. பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டு இருப்பதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
கடந்த 2019 நாடாளுமன்ற தேர்தலின்போது காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி எம்.பி. கர்நாடக மாநிலத்தில் தனது கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் நிரவ்மோடி மற்றும் சில குற்ற சம்பவங்களில் ஈடுபட்டவர்களின் பெயரை பிரதமர் நரேந்திர மோடி பெயருடன் ஒப்பிட்டு மோடி என்ற பெயரில் இருப்பவர்கள் இதுபோன்ற திருடர்கள் தான் என பொருள்படும் வகையில் பேசினார்.
ராகுல்காந்தியின் இந்த பேச்சு குறிப்பிட்ட மோடி என்ற சமுதாய பெயருக்கு களங்கம் ஏற்படுத்துவதாகவும், பிரதமர் மோடி மீதும் அவதூறாக பேசி இருப்பதால் அவர் மீது அவதூறு வழக்கினை பா.ஜ.வை சேர்ந்த எம்.எல்.ஏ. புர்னேஷ் மோடி என்பவர் சூரத் மாவட்ட நீதிமன்றத்தில் தொடர்ந்தார். இந்த வழக்கின் விசாரணை முடிந்து நேற்று தீர்ப்பு அளிக்கப்பட்டது.
இந்த வழக்கில் ராகுல் காந்தி எம்.பி.க்கு 2 வருடம் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பு அளிக்கப்பட்டது. மேலும் இந்த தீர்ப்பினை எதிர்த்து அவர் 90நாட்களுக்குள் மேல் முறையீடு செய்து கொள்ளலாம் என்றும் அது வரை அவர் சிறைக்கு செல்லாமல் பிணையில் செல்லலாம் என்று தீர்ப்பில் குறிப்பிட்டு இருந்தார். இந்த தீர்ப்பின் அடிப்படையில் ராகுல்காந்தி தண்டனையை அனுபவிக்க சிறைக்கு செல்லாமல் உரிய பிணை தொகையை செலுத்தி விட்டு வெளியில் வந்தார்.
இந்த நிலையில் இன்று நாடாளுமன்ற மக்கவை சூரத் கோர்ட்டு தீர்ப்பின் அடிப்படையில் ராகுல் காந்தி மீது நடவடிக்கை எடுத்து உள்ளது. கேரள மாநிலம் வயநாடு மக்களவை தொகுதியில் இருந்து லோக்சபா எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ராகுல் காந்தி அவதூறு வழக்கில் 2 வருடம் சிறை தண்டனை பெற்று இருப்பதால் இந்திய அரசமைப்பு சட்டம் 102 (1) (e) மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி அவர் மீது மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 1951 பிரிவு 8 ன்படி நடவடிக்கை எடுக்கப்பட்டு அவர் மக்களவை எம் பி பதவில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்படுகிறார் என மக்களவை இணை செயலாளர் பி சி திரிபாதி இன்று அறிவித்து உள்ளார்.
இந்த அறிவிப்பின் நகல்கள் இந்திய தேர்தல் ஆணையம் மற்றும் தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் அனைத்து துறை அதிகாரிகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது.
2 வருடம் சிறைத்தண்டனையின் எதிரொலியாக ராகுல் காந்தியின் மக்களவை உறுப்பினர் பதவி பறிக்கப்பட்டு இருப்பது இந்திய அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதுமே நாடு முழுவதும் போராட்டம் நடத்தி வரும் காங்கிரஸ் கட்சியினருக்கு மக்களவை சபாநாயகர் சார்பில் எடுக்கப்பட்டுள்ள இந்த தகுதி நீக்க நடவடிக்கை மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu