ஆப் மூலம் 2 கோடி புதிய உறுப்பினர் சேர்க்கை: நடிகர் விஜய் திட்டம்

ஆப் மூலம் 2 கோடி புதிய உறுப்பினர் சேர்க்கை: நடிகர் விஜய் திட்டம்
X

தமிழ்நாடு வெற்றிக்கழக தலைவர் விஜய்.

ஆப் மூலம் 2 கோடி புதிய உறுப்பினர் சேர்க்க நடிகர் விஜய் திட்டமிட்டு உள்ளார்.

நடிகர் விஜய் புதிதாகத் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியைத் தொடங்கியுள்ள நிலையில், அவர் புதிய பிளான் ஒன்றை பின்பற்றப் போவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் விஜயின் அரசியல் கனவு யாருக்கும் ரகசியமானது எல்லாம் இல்லை. பல ஆண்டுகளாகவே விஜய் அரசியலுக்கு வரலாம் என்றே கூறப்பட்டது. அவரது நடவடிக்கைகளும் அதை நோக்கியே இருந்தது.

அதன்படி சமீபத்தில் தான் நடிகர் விஜய் அரசியல் கட்சியையும் ஆரம்பித்தார், தமிழக வெற்றி கழகம் என்று அவரது கட்சிக்குப் பெயர் வைக்கப்பட்டது. சினிமாவை விட்டு மிக விரைவில் முழு நேரம் அரசியல்வாதியாக உள்ளார் விஜய். தமிழக வெற்றி கழகம்: வரும் லோக்சபா தேர்தலில் போட்டி இல்லை என்று விஜய் அறிவித்துள்ள நிலையில், சட்டசபைத் தேர்தலில் தான் அவரது கட்சி களமிறங்க உள்ளது. இதற்கிடையே விஜயின் தமிழக வெற்றிக் கழகத்தின் பொறுப்பாளர்கள் நியமனம் விரைவில் தொடங்கும் என்று கூறப்பட்டது. விஜய் மக்கள் இயக்கத்தில் ஆக்டிவாக இருந்த நபர்களுக்கே கட்சியில் பொறுப்புகள் வழங்கப்படும் எனக் கூறப்பட்டது. இதற்கிடையே பொறுப்பாளர்கள் நியமனம் தொடர்பாக சில முக்கிய தகவல்கள் இப்போது வெளியாகியுள்ளது. உறுப்பினர் சேர்க்கை அடிப்படையில் தான் பதவிகள் வழங்கப்படுமாம்.

தமிழ்நாடு முழுக்க மிக விரைவில் தமிழக வெற்றிக் கழகத்திற்கு உறுப்பினர் சேர்க்கை நடக்க உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகிகளின் உடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதில் மாநிலம் முழுக்க 2 கோடி பேரைக் கட்சியில் சேர்க்க வேண்டும் விஜய் உத்தரவிட்டதாக புஸ்ஸி ஆனந்த் கூறியிருந்தார். 2 கோடி பேர் என்பது இணையத்தில் பேசுபொருளும் ஆகி இருந்தது.

திமுக, அதிமுகவுக்கே 2 கோடி உறுப்பினர்கள் தான் இருப்பார்கள்.விஜய் எப்படி ஒரேயடியாக 2 கோடி பேரைச் சேர்க்க முடியும் என்று பலரும் கேட்னர். இருப்பினும், அதையெல்லாம் கண்டுகொள்ளாமல் உறுப்பினர் சேர்க்கையில் விஜய் கட்சியினர் கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளனர். அதன்படி விரைவில் தமிழகம் முழுக்க உறுப்பினர் சேர்க்கையை ஆரம்பிக்க விஜய் கட்சியினர் முடிவு செய்துள்ளனர்.

அதன்படி உறுப்பினர் சேர்க்கை முடிந்த பிறகே பொறுப்பாளர்கள் நியமனம் செய்யப்படுவார்கள் என்று கூறப்படுகிறது. அதாவது மக்கள் மன்றத்தில் இருந்து இருந்தாலே மட்டும் உடனடியாக பொறுப்புகள் வழங்கப்படாதாம். எந்த நிர்வாகி கட்சியில் அதிகப்படியான உறுப்பினர்களைச் சேர்க்கிறாரோ அவர்களுக்குத் தான் தமிழக வெற்றிக் கழகத்தில் புதிய பொறுப்பு வழங்கப்படுமாம். எந்த நிர்வாகி எத்தனை பேரை உறுப்பினராகச் சேர்க்கிறார் என்பதையும் கண்காணிக்க முடிவு செய்துள்ளனராம். இந்த உறுப்பினர் சேர்க்கைக்கு விஜய் கட்சியினர் தனி செயலி ஒன்றை உருவாக்கி உள்ளனர். அதன் அடிப்படையிலேயே கட்சியில் உறுப்பினர் சேர்க்கை நடைபெறுமாம்.

ஒவ்வொரு நிர்வாகிக்கும் தனி எண் கொடுக்கப்பட்டுள்ள நிலையில், அந்த எண்ணை வைத்துத் தான் செயலியில் உறுப்பினர் சேர்க்கையை நடத்த வேண்டும். அதன்படி எந்த நிர்வாகி அதிக உறுப்பினர்களைச் சேர்க்கிறாரோ அவர்களுக்கே கட்சியில் பொறுப்புகள் வழங்கப்படுமாம். மக்கள் மன்ற நிர்வாகிகள் கட்சியை வளர்க்க எந்தளவுக்குத் தீவிரமாக இருக்கிறார்கள் என்பதைக் கண்டறியவே இந்த நடவடிக்கை. இதன் மூலம் தமிழகம் முழுக்க புதிய உறுப்பினர்கள் சேர்க்கப்படுவார்கள். எந்த ஊரும் மிஸ் ஆகாது. ஒவ்வொரு ஊரிலும் அதிக அளவில் உறுப்பினர்களைச் சேர்க்க வேண்டும் என்பதில் விஜய் கட்சியினர் மிகத் தீவிரமாகவே உள்ளனர்.

Tags

Next Story