14 அமைச்சர்கள் தோல்வி: பா.ஜ. விற்கு கர்நாடக மக்கள் அளித்த தேர்தல் பரிசு

14 அமைச்சர்கள் தோல்வி: பா.ஜ. விற்கு கர்நாடக மக்கள் அளித்த தேர்தல் பரிசு
X

தோல்வியை தழுவிய கர்நாடக அமைச்சர்கள்.

14 அமைச்சர்கள் தோல்வி அடைந்து இருப்பது பாரதீய ஜனதா கட்சிக்கு கர்நாடக மக்கள் அளித்த தேர்தல் பரிசாக தான் கருதப்படுகிறது.

கர்நாடக தேர்தல் களத்தில் 14 அமைச்சர்கள் தோல்வியை தழுவி இருப்பது கர்நாடக மக்கள் பாரதிய ஜனதாவிற்கு அளித்த தேர்தல் பரிசாக வர்ணிக்கப்படுகிறது.

224 சட்டமன்ற தொகுதிகளை கொண்ட கர்நாடக மாநில சட்டசபை தேர்தலில் கடந்த பத்தாம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கி முதலில் முன்னிலை நிலவரங்களும் பின்னர் கட்சிகள் பெற்ற வெற்றி விவரங்களும் அறிவிக்கப்பட்டன. இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி அறுதி பெரும்பான்மைக்கு தேவையான 113 இடங்களை விட கூடுதலாக பெற்று ஆட்சி அமைக்க உள்ளது.

இதுவரை ஆளுங்கட்சியாக இருந்த பாரதிய ஜனதாவிற்கு இந்த தேர்தலில் பலத்த அடி விழுந்து உள்ளது. கடந்த சட்டமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி கர்நாடக மாநிலத்தில் தனிப்பெருங்கட்சியாக ஆட்சி அமைக்க முடியவில்லை என்றாலும் 103 தொகுதிகளை பெற்று இருந்தது. ஆனால் அவர்கள் ஆட்சி அமைக்கவில்லை. காங்கிரஸ் ஆதரவுடன் குமாரசாமி கவுடா முதலமைச்சர் ஆனார். பின்னர் அந்த அரசு கவிழ்ந்ததும் எடியூரப்பா முதல்வர் ஆனார்.

பாரதிய ஜனதா கட்சிக்குள் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக எடியூரப்பா முதல்வர் பதவியில் இருந்து இறக்கப்பட்டு அதன் பின்னர் பசவராஜ் பொம்மை முதலமைச்சர் ஆனார். இந்த தேர்தலில் கடந்த தேர்தலில் பெற்ற தொகுதிகளை கூட பெற முடியாமல் பாரதிய ஜனதா கட்சி படுதோல்வியை சந்தித்து இருக்கிறது. இதுவரை முதலமைச்சராக இருந்த பசவராஜ் பொம்மை வெற்றி பெற்று எதிர்க்கட்சித் தலைவர் ஆனாலும் அவரது அமைச்சரவையில் இருந்த 14 அமைச்சர்கள் தோல்வியை தழுவி உள்ளார்கள்.

அவர்கள் யார் யார் என்பதை பார்ப்போமா.

பொம்மை அமைச்சரவையில் வருவாய் துறை அமைச்சராக இருந்த ஆர். அசோக் சன்னபத்னா தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் டி கே சிவக்குமாரிடம் தோல்வியை தழுவியுள்ளார். ஆனால் இவர் பத்மநாபநகர் எனப்படும் இன்னொரு தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார்.

போக்குவரத்துறை அமைச்சராக இருந்த பி. ஸ்ரீராமுலு பெல்லாரி ஊரகம் தொகுதியில் தோல்வியை தழுவியுள்ளார். தொழில்துறை அமைச்சராக இருந்த முகேஷ் நிவாரணி பீளகி தொகுதியில் தோல்வியை தழுவியுள்ளார்.

சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த டாக்டர் சுதாகர் சிக்கபல்லாபுரம் நகர் தொகுதியில் தோல்வியை தழுவியுள்ளார் வீட்டு வசதி துறை அமைச்சராக இருந்த சோமன்னா வருணா, சாம்ராஜ்நகர் ஆகிய இரண்டு தொகுதிகளிலும் தோல்வியை தழுவியுள்ளார்.

சுரங்கம் மற்றும் புவியியல் துறை அமைச்சராக இருந்த காலப்பா ஆச்சார் எல்புர்கா தொகுதியில் தோல்வியை தழுவியுள்ளார். சிறு குறு தொழில் துறை அமைச்சராக இருந்த எம். டி. பி .நாகராஜ் ஒசக்கோட்டை தொகுதியில் தோல்வியை தழுவியுள்ளார்.

விளையாட்டு துறை அமைச்சராக இருந்த கே சி நாராயண கவுடா கிருஷ்ணராஜ் பேட் தொகுதியில் தோல்வி அடைந்து உள்ளார் விவசாயத்துறை அமைச்சராக இருந்த டி.சி. பாட்டில் கிரேகரு தொகுதியில் தோல்வியை தழுவியுள்ளார் .

சட்டத்துறை அமைச்சர் ஆக இருந்த ஏ.சி. மாதுசாமி சித்த நாயகன ஹள்ளி தொகுதியில் தோல்வியை தள்ளியுள்ளார். சபாநாயகர் விஸ்வேஸ்வர் ஹெக்டே காகேரி சிர்சி தொகுதியில் தொகுதியிலும் கல்வித்துறை அமைச்சராக இருந்த பி .சி. நாகேஷ் திப்தூர் தொகுதியிலும், துணி நூல் துறை அமைச்சராக இருந்த சங்கர் முனனே குப்பா நாவல் குண்ட் தொகுதியிலும் தோல்வியை தழுவி உள்ளார்கள்.

கர்நாடக மாநிலத்தில் நடைபெற்ற தேர்தலில் பிரதமர் மோடி தீவிர கவனம் செலுத்தினார். மாநிலம் முழுவதும் பல்வேறு இடங்களில் ஊர்வலமாக சென்றும் பேரணி நடத்தியும் மக்களை சந்தித்தார் காங்கிரஸ் கட்சி மீதும் ராகுல் காந்தி மீதும் கடுமையான விமர்சனங்களை வைத்தார்.


அப்படி இருந்தும் கர்நாடக மாநிலத்தில் பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகளுக்குள் இருந்த ஈகோ பிரச்சனை மற்றும் யார் பெரியவர் என்ற போட்டிகளின் காரணமாக கட்சி படுதோல்வியை சந்தித்து இருக்கிறது. மோடியின் பிரச்சாரம் கர்நாடக மாநில மக்கள் மத்தியில் எடுபடவில்லை என்று தான் தேர்தல் முடிவு வெளிப்படுத்தி உள்ளது. 14 அமைச்சர்கள் தோல்வியை தழுவி இருப்பது கர்நாடகா பாரதிய ஜனதா கட்சிக்கு அம்மாநில மக்கள் கொடுத்த தேர்தல் பரிசாகவே அரசியல் நோக்கர்களால் கருதப்படுகிறது.

Tags

Next Story