திமுக கூட்டணியிலும் சலசலப்பு: மதிமுக இன்று மாலை அவசர ஆலோசனை
வைகோ, துரை வைகோ.
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான தேர்தல் வரும் 19ல் நடைபெற உள்ளது. தற்போது வேட்புமனு தாக்கல் தொடங்கி, நடைபெற்று வருகிறது. மனு தாக்கலுக்கான அவகாசம் குறைந்து வரும் நிலையில், பிரதான கட்சிகளான திமுக - அதிமுக அணியில் இன்னமும் கூட்டணி பேச்சு வார்த்தையில் இழுபறி நீடிக்கிறது.
அதிமுக அணியில் இருந்து பாமக விலகிச் சென்று தனித்து களமிறங்க, பாஜக, தாமக உள்ளிட்ட கட்சிகள் அதிமுக தலைமையுடன் பேச்சு நடத்தி வருகின்றன. இதில் கேட்ட இடங்களை அதிமுக தராததால் பாஜக அதிருப்தியில் உள்ளது. அதிமுக - பாஜக கூட்டணி முறியும் சூழல் உள்ளது.
மறுபுறம் திமுக கூட்டணியிலும் சலசலப்பு உள்ளது. காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் தாங்கள் கேட்ட தொகுதிகள் ஒதுக்க தயங்கும் திமுக மீது வருத்தத்தில் உள்ளன. மதிமுக நிலையோ இன்னும் மோசமாக உள்ளது. கவுரமான இடங்கள் ஒதுக்கப்பட வேண்டுமென்று மதிமுக கேட்க, திமுக ஒதுக்குவதாக கூறும் இடங்கள் மிகச் சொற்பகாக உள்ளதால், கடும் அதிருப்தியில் மதிமுக உள்ளதாக கூறப்படுகிறது.
மாவட்ட அளவில் திமுக நிர்வாகிகளுடன் பேச்சு மதிமுகவினர் நடத்திய பேச்சு வார்த்தையில் எந்த முன்னேற்றமும் இல்லை என்றும், அதனால்தான் இதுவரை எந்த உடன்பாடு எட்டப்படவில்லை என்றும் மதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சென்னை திருவள்ளூர் மாவட்டம் சார்பில் திமுகவுடன் நடந்த பேச்சுவார்த்தையில் மதிமுகவினருக்கு 5 வார்டுக்கும் குறைவாக ஒதுக்க திமுக மூத்த தலைவர்கள் முன் வந்ததால், பாதியிலேயே மதிமுகவினர் வெளிநடப்பு செய்ததாக தெரிகிறது.
இந்த சூழலில், ம.தி.மு.க பொது செயலாளர் வைகோவின் மகன் துரை வைகோ தலைமையில் இன்று மதியம் 4 மணிக்கு, தாயகத்தில் அவசர ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. இதில் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து, ஆலோசித்து முடிவு எடுக்கப்படுகிறது. மதிமுகவின் இந்த நடவடிக்கை, திமுக கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu