கூட்டணி ஆட்சி கிடையாது - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திட்டவட்டம்

கூட்டணி ஆட்சி கிடையாது - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திட்டவட்டம்
தமிழகத்தை பொறுத்த வரை கூட்டணி மந்திரி சபையை மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்பது அதிமுகவின் நிலைப்பாடு - எடப்பாடி பழனிச்சாமி

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று மாலை செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது நாமக்கல், திருச்சி மாவட்டங்களில் பல்வேறு நிகழ்வுகள் பிரச்சாரத்தில் கலந்து கொள்ள வந்துள்ளத்காக தெரிவித்தார். முன்னாள் திமுக மேயர் சுப்பிரமணியம் இன்று அறிக்கை கொடுத்து இருப்பதாகவும் அந்த அறிக்கையின் வாயிலாக தவறான தகவல்களை அவர் சொல்லி இருப்பதாக கூறிய முதலவர் அவரது தலைவரை திருப்திபடுத்த இவ்வாறான அறிக்கையை கொடுத்துள்ளதாக தெரிவித்தார்.

திமுக ஆட்சியில் எந்த திட்டங்களும் முழுமையாக நடைபெறவில்லை என கூறிய முதல்வர் சென்னையில் அதிமுக ஆட்சியில் பல பாலங்கள் கட்டப்பட்டு உள்ளது எனவும் சென்னை மாநகராட்சியில் மட்டும் 86 சிறிய பாலங்கள் கட்டப்பட்டு இருக்கின்றது எனவும் தெரிவித்தார்.

இதே போல திமுக பொது செயலாளர் துரைமுருகனும் பொய்யான அறிக்கையினை வெளிட்டுள்ளார் என கூறிய அவர் அதிமுகவினர் ஊழல்வாதிகள் என்று துரைமுருகன் விமர்சனம் செய்துள்ளார் ஆனால் ஊழலுக்கு சொந்தகார்களே திமுகவினர்தான் எனவும் தெரிவித்த முதல்வர் பழனிச்சாமி துரைமுருகன் சட்டமன்ற உறுப்பிராக இருந்த போது இருந்த சொத்து விபரத்தையும் இப்போது இருக்கும் சொத்து விபரத்தையும் வெளியிடுவாரா? என கேள்வி எழுப்பினார்.துரைமுருகனின் கல்லூரி சுவரை தட்டினாலே ஊழல்,ஊழல் என்று சொல்லும் என்றம் அந்தளவிற்கு ஊழல் செய்து கட்டப்பட்டது அவர் கல்லூரி என தெரிவித்தார். துரைமுருகன் தங்கள் மீதான ஊழல் குற்றசாட்டுகளை மறந்து பேசுகிறார், ஊழலுக்கு ஊற்றுகண்ணாக இருப்பதே திமுகதான் என முதல்வர் குற்றம்சாட்டினார்.

1991 ல் அனைத்து மகளிர் காவல் நிலையம்,மகளிர் நீதிமன்றம் போன்றவை அதிமுக ஆட்சியில் உருவாக்கபட்டது. பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகளில் ஈடுபடுபவர்கள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்தது என பெண்கள் குழந்தைகள் நலனில் இந்த அரசு அக்கறையுடன் செயல்படுகின்றது. கேன்சலான டெண்டர்களை ஊழல் என கூறி திமுக தலைவர் கவர்னரிடம் புகார் அளித்து உள்ளார் எனவும் அதிமுக ஆட்சி கலைந்து விடும் என எதிர்பார்த்தது அது நடக்கவில்லை என்ற எரிச்சல் காரணமாகவே இந்த புகார் அளிக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

நடிகர் கமலஹாசனுக்கு தமிழகத்தை பற்றி என்ன தெரியும் ? 70 வயது வரை நடித்து விட்டு ரிட்டயர்டு ஆகும் நேரத்தில் வந்து அரசியல் செய்கின்றார் என கூறிய முதலவர், நான் 46 ஆண்டு காலம் அரசியலில் இருப்பதாக கூறிய கமல் நடிப்பில் பெரிய ஆளாக இருக்கலாம் ஆனால் அவர் அரசியலில் பூஜ்ஜியம்தான் என தெரிவித்தார். தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி தொடர்ந்து கொண்டு இருப்பதாகவும் நாங்கள் முதல்வர் வேட்பாளரை அறிவித்து விட்டோம் எங்களது கூட்டணி தொடர்கிறது என்றும் எங்களது தலைமையில் கூட்டணி அமைக்கப்படும் என தெரிவித்தார்.

பா.ஜ.க இன்னும் உங்களை முதல்வர் வேட்பாளராக அறிவிக்கவில்லையே என்ற கேள்விக்கு இன்னும் தேர்தலே அறிவிக்கவில்லையே என பதில் அளித்தார். எங்கள் கட்சியில் தேர்தல் பணிகள் நடந்து வருவதால் எங்கள் கட்சியின் சார்பில் முதல்வர் வேட்பாளர் அறிவிக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தார்.தமிழகத்தில் 13 பேருக்கு உரு மாறிய கொரொனா அறிகுறிகள் கண்டறியப்பட்டுள்ளது எனவும் அந்த 13 நபர்களின் மாதிரிகள் பூனேவிற்கு அனுப்பி வைக்கபட்டு உள்ளது , அந்த ஆய்வு முடிவு வந்தவுடன்தான் உறுதி செய்ய முடியும் என்றார்.

நடிகர் விஜய் முதல்வரை சந்தித்தது குறித்த கேள்விக்கு திரை அரங்குகள் முழுமையாக திறக்கப்படாமல் இருக்கின்றது அது தொடர்பாக நடிகர் விஜய் என்னை சந்தித்தார் என தெரிவித்தார்.

திமுகவில் ஸ்டாலின் கூட ஓரளவிற்கு போராட்டங்களில் கலந்துள்ளார் ஆனால் உதயநிதி அந்த கட்சிக்காக என்ன உழைத்தார் என கேள்வி எழுப்பிய முதல்வர் கட்சிக்காக உழைத்தவர்களை முன்னிறுத்தாமல் குடும்பத்தினரை முன்னிறுத்துவதால் திமுகவை கார்ப்பரேட் கட்சி என்கிறோம் , அதிமுகவில் தலைமைக்கு விசுவாசமாக உழைத்தால் என்னை போல் உள்ளவர்கள் உயரலாம் எனவும் தெரிவித்தார்.மேலும் தமிழகத்தை பொறுத்த வரை கூட்டணி மந்திரி சபையை மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் , அது அதிமுகவின் நிலைப்பாடு எனவும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.

Tags

Next Story