அறிவியல் கண்டுபிடிப்புகளால் ஆரோக்யம் இழந்த மனிதர்கள்..!
world bicycle day 2024-கிணற்றில் நீர் இறைக்கும் பெண்கள் (கோப்பு படம்)
World Bicycle Day 2024
நன்றாக யோசித்துப் பார்த்தால் அறிவியல் வளர்ச்சி நம்மை ஆச்சர்யப்பட வைப்பதில் ஒன்றும் ஆச்சர்யம் இல்லை. ஆனால் மனிதர்களை சோம்பேறிகள் ஆக்கிவிட்டதோ என்ற எண்ணம் தோன்றுகிறது. ஆமாம், நம் தமிழகத்தையே ஒரு முன்னுதாரணமாக எடுத்துக்கொள்வோம்.
World Bicycle Day 2024
தண்ணீர் இறைத்தோம்
நாம் சிறு வயதாக இருந்த 70களில் நம் அம்மா கிணற்றில் இருந்து தண்ணீர் இறைப்பார். கூடவே நாமும் நம் அக்கா, தம்பி, தங்கை என்று போட்டிபோட்டு அம்மாவுக்கு உதவிகள் செய்தோம். சமையலுக்கு குழம்பு வைப்பதற்கு அம்மா அம்மியில் அரைத்தார். இட்லி செய்வதற்கு ஆட்டுக்கல்லில் மாவு அரைத்தார். இப்படியாக அம்மாவுக்கே உடல் உழைப்பு இருந்தது.
வயலில் உழைத்தோம்
அப்பாவுக்கு வயலில் நாள் முழுவதும் வேலை. உழவு ஓட்டுவது மாடுகட்டி ஏற்றம் இறைத்து வயலுக்கு நீர் பாய்ச்சுவது என அவரது உடலும் கருங்காலிபோல வைரம் பாய்ந்து இருந்தது. பிள்ளைகள் பள்ளியில் விளையாடுவதுடன் மாலை வீட்டுக்குத் திரும்பியதும் தெருவில் பிள்ளையார் பந்து, ஒடிப் பிடித்து விளையாடுதல் , அம்மாவுக்கு வீட்டு வேலைகளில் உதவுதல், மாட்டுக்குத் தண்ணீர் வைத்தல், அப்பாவுக்கு வயலில் உதவி செய்தல் என்று உடல் உழைப்பு இருந்தது. உடலும் ஆரோக்யமாக இருந்தது.
World Bicycle Day 2024
ஆரோக்ய உணவு உண்டோம்
கம்பு இடித்து களி கிண்டினோம். சோள சோறு சாப்பிட்டோம். வரகு அரிசி, தினை அரிசி சோறு உண்டோம். செக்கில் எண்ணெய் ஆட்டினோம். நெல் அரிசி சோறு என்றால் வீட்டில் திருவிழாக் கோலம்தான். அட..ஆமாங்க..அமாவாசை என்று நெல்லு சோறு. பொங்கல், தீபாவளி என்றால் நெல்லு சோறு. ஊர் த்ரிவிழா என்றால் நெல்லு சோறு. வருஷத்தில ஒரு 20 தடவை மட்டுமே நெல்லு சோறு சாப்பிட்டு இருப்போம்.
இசையை மட்டும் கேட்டோம்
இரவு நேரங்களில் விவித பாரதியின் வர்த்தக ஒலிபரப்பில் பாடல்கள் கேட்டு ரசிப்போம். ஞாயிறு விடுமுறையில் இலங்கை வானொலியில் கே.எஸ்.ராஜாவின் விரைவுக்குரலை ரசிப்போம். வருசத்துக்கு ஒரு சினிமா அல்லது இரண்டு. அதுவும் சாமி படம் என்றால் கொட்டகைக்கு அழைத்துச் செல்வார்கள். ஊர் ஓரமாக இருந்த சினிமா கொட்டகைக்கு வண்டிகட்டி செல்லுவோம்.
கோடை முகாம்
எங்கு சென்றாலும் சைக்கிள் ஒட்டிச் செல்வோம். கோடை விடுமுறையே எங்களுக்கு சைக்கிள் ஒட்டிக் கற்றுக்கொள்ளும் முகாம் நாட்கள்.சீமைக்கருவேல முள்ளின் மீது சைக்கிளோடு விழுந்து உடம்பெல்லாம் காயமுற்றாலும் சைக்கிள் கற்றுக்கொள்வதை நிறுத்தமாட்டோம். காயங்கள் எல்லாம் மாயமாகும் காலமது.
உச்சி பகல்பொழுதில் நுங்கு தின்று மகிழ்ந்தோம். முரட்டு நுங்கு காயில் வண்டி செய்தி ஒட்டி மகிழ்ந்தோம்.
World Bicycle Day 2024
அறிவியல் திருடிக்கொண்ட ஆரோக்யம்
90களில் வீடுகளில் இருந்த கிணறுகள் பூதம் கொண்டுபோன கதையாக காணாமல் போயின. மனித செயல்பாடுகளால் நிலத்தடி நீர் வற்றிப்போனது. அதனால் பூமியை ஓட்டைப்போட்டு ஆழ்துளை கிணறுகள் அமைத்தனர். அம்மாவுக்கு நீர் இறைக்கும் வேலை பறிபோனது.
பாட்டன் பாட்டியான அம்மி,ஆட்டுக்கல், உரல்
மெல்ல மெல்ல வீட்டில் இருந்த அம்மிக்கல், ஆட்டுக்கல்,உரல் எல்லாம் வயதான பாட்டன் பாட்டியை ஓரமாக படுக்க வைத்ததுபோல் மூலைக்குள் முடங்கிப்போயின. பளபளப்பாக மிக்ஸி வந்தது. மாவு ஆட்ட கிரைண்டர் வந்தது. பாட்டனைத்தட்டினால் வேலை முடிந்தது. உடலுக்கு உழைப்பும் குறைந்தது. உடல் உழைப்பு குறைந்ததால் ஊளைச்சசதையும் வளர்ந்தது.
மாறிப்போன உணவுப்பழக்கம்
நித்தம் நித்தம் நெல்லுச் சோறு..எண்ணெய் மணக்கும் புரோட்டா..பிசுபிசுப்பாய் பீசா, அவசரத்துக்கு அள்ளித்தின்ன வெந்தும் வேகாத துரித உணவுகள் என்று உணவு முறைகள் மாறிப்போயின. இன்று பத்து வயதில் நூறு கிலோ எடையில் நடக்க முடியாது அவதியுறும் சிறு குழந்தைகள்.
World Bicycle Day 2024
நோய்க்கோழியான மனிதர்கள்
அறிவியல் கண்டுபிடிப்புகள் அத்தனையும் மனிதர்களை சோம்பேறிகளாக்கி ஆரோக்யத்தை திருடிக்கொண்டது என்பது உண்மைதானே..! அதனால் உடல் முழுதும் நோய்கள். இதயநோய், சிறுநீரகங்கள் பாதிப்பு, இரத்த அழுத்தம், சர்க்கரை என பட்டியல் நீள்கிறது.
இன்று அதற்கேற்ப வணிகள் முறைகள் மாறிப்போயின. தெருவெங்கும் மருத்துவமனைகள். மருந்து விற்க மருந்து கடைகள். உடல் மெலிய உள்ளூரில் படித்த நிபுணர்கள், அதை சாப்பிடாதீர், இதை சாப்பிடாதீர் என்று அறிவுரை வழங்க ஆயிரங்கள் செலவு. காலையில் எழுந்து வாக்கிங் போங்க. உடம்பை ஸ்லிம்மாக வைத்துக்கொள்ள ஜிம்முக்கு போங்க. இப்படி காசுகொடுத்து சூனியம் வாங்க பழகிக்கொண்டோம்.
World Bicycle Day 2024
படிக்கிறதே படிக்கற டாக்டருக்குப்படி. அப்பதான் சம்பார்த்தனை அதிகமாக இருக்கும். இதுவும் ஒரு நூதனக் கொள்ளையே. நோயாளிகளின் அச்சமே மருத்துவர்களுக்கான பலம். அதுவே பணமாகிறது. இப்படி அறிவியல் நம்மை ஆரோக்யமற்றவர்களாகத்தானே ஆக்கி இருக்கிறது?
அதனால் மீண்டும் சைக்கிள் ஓட்டுவோம் வாங்க. "இன்று உலக சைக்கிள் தினம்".
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu