'ஏ.டி.பி .எம்' பற்றி கேள்விப்பட்டிருக்கீங்களா..? இனிமே தெரிஞ்சுக்கங்க
நெருங்கிய நண்பருக்கிட்ட பேசிக்கொண்டிருந்தேன். தொடக்கத்தில் கொரோனா ஊரடங்கால் அவரது பிசினஸ் பாதிக்கப்பட்டது. குடும்பத்தில் மாறி மாறி ஒவ்வொருத்தருக்கும் கொரோனா பாசிட்டிவ் வந்தது பற்றி வருத்தமுடன் பேசினார்.
நாம கஷ்டப்படும்போது உதவ யாரும் இல்லாம போயிடறாங்க என்று வருத்தப்பட்டார். ஏன் நண்பா? என்னை மறந்துவிட்டீரா? ஏதாவது பிரச்னை என்றால் என்னிடம் சொல்லி இருக்கலாமே என்று உதவி பற்றி கூறாமல் கூறினேன். என்னிடம் உதவி கேட்காமல் இருந்ததால் அவரை தர்ம சங்கடத்துக்கு ஆளாக்க வேண்டாம் என்பதால் அப்படி கூறினேன்.
ஞாபகம் இருந்தது நண்பரே. உங்களுக்கும் வீட்டில் மருத்துவ செலவு, அப்பா தவறியது என்று ஏகப்பட்ட பிரச்னை இருக்கும்போது நான் எப்படி கேட்பது? அதனால் கேட்கவில்லை என்றார் வருத்தமுடன்.
மீண்டும் அவரே தொடங்கினார். நான் உதவி செஞ்சவங்களே என்னை கண்டுகொள்ளவில்லை. போன் அடிச்சால் எடுப்பதில்லை. அவங்கள்லாம் ஏ.டி.பி .எம் என்றார். ஏ.டி.பி .எம்;ஆ ? அப்படி என்றால் என்ன நண்பா என்றேன்?
எதையுமே கண்டுகொள்ளாமல், உதாசீனப்படுத்துவதற்கு இது ஒரு வகையில் ஏமாற்று வேலை தான் நண்பா என்று சொன்னாரே தவிர ஏ.டி.பி .எம் என்றால் என்ன என்று அவர் சொல்லவில்லை. அவர் கவலையில் இருப்பதால் கேட்கவும் தோன்றவில்லை. அதனால், அமைதியாக வீட்டுக்கு திரும்பிவிட்டேன்.
ஆனாலும் அந்த ஏ.டி.பி .எம் என் மனசை உறுத்திக்கொண்டிருந்தது. வீட்டில் என் மனைவி மற்றும் பிள்ளைகளிடமும் கேட்டுப்பார்த்தேன். ஏ.டி.பி .எம்-ஆ என்று அவர்களும் விழித்தனர்.
சில நண்பர்களிடமும் கேட்டுப்பார்த்தேன். அவர்களும் தெரியவில்லை என்றனர். சரி அந்த நண்பரிடம் கேட்போம் என்று என் நண்பனுக்கே போன் செய்து கேட்டேன். அட.. இதுக்குத்தானா.. இத்தனை பூடகம்..? ஏ.டி.பி .எம் என்றால் எனி டைம் பிசி மேன் (Any Time Busy Man).
நாம எதோ சும்மா இருக்கற மாதிரி சில பேருக்கு போன் செய்தால், 24 மணி நேரமும் பிசி ஆக இருப்பது போல போன் அடிச்சா எடுக்கறதே இல்ல. என்னிக்காவது வேற நம்பர்ல இருந்து நாம கூப்பிட்டால் விடுற கதை இருக்கே..? ஐ.ஏ.எஸ் கலெக்டர் தோற்றுப்போவார். அவ்வளவு நீளமா வேலை பற்றி கதை சொல்வாங்க. கடைசிக்கு நம்மகிட்ட உதவி பெற்றவங்களா இருப்பாங்க. ஆனா, நாம கஷ்டத்தில் இருக்கும்போது நாம உதவி கேட்டிடுவோமோன்னு அவங்க எந்நேரமும் பிஸியாவே இருப்பாங்க.. அவங்க பேர் தான் ஏ.டி.பி .எம் என்றார் சர்வ சாதாரணமாக, அந்த நண்பர்.
யோசித்தபோது தான் இப்படி சிலர் இருப்பது எனக்கும் தெரிய வந்தது. நாம கூப்பிட்டா.. ஆமா தலைவா..பயங்கர பிசி. தூங்க கூட நேரம் இல்லை என்று கூறுவதை நானும் அனுபவிச்சு இருக்கேன். உங்களுக்கு அந்த ஏ.டி.பி .எம் அனுபவம் உண்டா பாஸ்..?
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu