உச்சத்தில் காய்கறி விலை - கருவாடு, பயறு வகைகளுக்கு மாறிய மக்கள்

தோட்டக்கலை மாவட்டமான தேனி மாவட்டத்தில், சுமார் 25 ஆயிரம் ஏக்கருக்கும் அதிக பரப்பில் காய்கறிகள் விளைகின்றன. தேனி, தேவாரம், கம்பம் மார்க்கெட்டுகளில் இருந்து தினமும் கேரளாவிற்கு சுமார் 200 டன் காய்கறிகளும், மதுரை, திண்டுக்கல், திருச்சி மார்க்கெட்டுகளுக்கு இதே அளவு காய்கறிகளும் கொண்டு செல்லப்படும். உள்ளூர் தேவைக்கும் அதிகமாகவே காய்கறிகள் இருக்கும். கடந்த மூன்று மாதங்களாக பெய்து வரும் பலத்த மழையால், புதியதாக காய்கறிகளை நடவு செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. தவிர சாகுபடி செய்யப்பட்ட காய்கறிகளி்ல பெரும்பாலானவை மழையால் நிலத்திலேயே அழுகி விட்டன.
தற்போதைய நிலையில், தேனி மார்க்கெட்டில் கிலோவிற்கு 140 ரூபாய் கொடுத்தாலும் தக்காளி கிடைக்கவில்லை. அதேபோல், சுமார் 10 ரக காய்கறிகளின் விலை கிலோ நுாறு ரூபாயினை தாண்டி வி்ட்டன. மீதம் உள்ள காய்கறிகளின் விலை 70 கிலோ 90 ரூபாய்க்கு மேல் தான் விற்கப்படுகின்றன. இதற்கு கீழ் உள்ள விலைகளில் கீரை வகைகள் மட்டுமே கிடைக்கும். கடந்த இரண்டு நாட்களாக அதுவும் சந்தையில் இல்லை.
இதனால் சைவ ஓட்டல்களின் நிலை படுதிண்டாட்டமாக உள்ளது. பள்ளி சத்துணவுக்கு காய்கறிகள் வாங்க முடியாமல் அமைப்பாளர்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி உள்ளனர். நடுத்தர குடும்பங்கள் கூட இன்று காய்கறிகளை வாங்கி சாப்பாட்டிற்கு பயன்படுத்த முடியாத நிலை காணப்படுகிறது.
எனவே, பெரும்பாலான நடுத்தர மற்றும் சாதாரண குடும்பத்தை சேர்ந்த மக்கள் கருவாட்டுக்குழம்பு, பயறு வகை குழம்புகளுக்கு மாறி விட்டனர். 20 ரூபாய்க்கு கருவாடு வாங்கினால், நான்கு பேர் கொண்ட குடும்பத்தி்ற்கு காலை, மதியம் உணவு தேவைக்கு குழம்பு வைத்து விடலாம். தவிர கருவாட்டு குழம்பிற்கு மட்டுமே சைடிஷ் தேவைப்படாது.
அதேபோல் பயறு வகை குழம்பு வைத்தால், பயறு வகைகளையே சைடிஷ் ஆக பயன்படுத்தலாம். இந்த காரணங்களால் தேனியில் கடந்த 10 நாட்களாகவே கருவாடு மற்றும் பயறு வகை குழம்புகளை மக்கள் அதிகம் பயன்படுத்த தொடங்கி உள்ளனர். இதனால் பலசரக்கு கடையிலும், கருவாட்டு கடைகளிலும் இவற்றின் விற்பனை அதிகரித்துள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu