வழிகாட்டி (சிறுகதை)..! நம்பிக்கைக்கு கைகொடுக்கும் சிறுகதை..!

Short Stories in Tamil
X

Short Stories in Tamil

Short Stories in Tamil-மதிப்பெண் என்பது அறிவுக்கு மட்டுமானதா என்பதை விளக்கும் சிறுகதை இது. படிங்க.

வழிகாட்டி (சிறுகதை) எழுதியவர் : க.சு.பூங்குன்றன்

Short Stories in Tamil-வீட்டைவிட்டு வர்ஷா கிளம்புவதற்கு முன் அம்மா,அப்பா, தங்கச்சி எல்லோரையும் ஒரு முறை நன்றாகப் பார்த்துக்கொண்டாள்.

மனசு கனத்தது. கண்ணீர் முட்டிக்கொண்டு வந்தது.

சிரமப் பட்டு அடக்கிக்கொண்டாள். வீட்டை விட்டு வெளியேறிவள், வீட்டையும் கடைசியாக ஒரு முறை பார்த்துக்கொண்டாள்.

படங்கள் - சிறுகதைக்கான மாதிரி படங்கள்.

இந்த உலகத்தை விட்டே போகப்போறேன். எல்லாம் வெறும் மார்க் விவகாரம்தான். வர்ஷா,பிளஸ் 2 தேர்வில் குறைந்த மதிப்பெண் மட்டுமே எடுத்தாள். ஆனால், நல்ல அறிவுள்ள பெண்தான். அறிவை அளக்கும் அளவுகோள் மதிப்பெண் அல்ல என்பதை எத்தனை பேர் ஏற்றுக்கொள்கிறார்கள்?

அப்பாவும்,அம்மாவும் மற்ற மாணவிகள் பெற்ற மதிப்பெண்ணை ஒப்பிட்டு பேசுகிறார்களே தவிர தனது அறிவை,தனக்கிருக்கும் திறனை கணிக்கத்தவறி விட்டார்கள். 98 மதிப்பெண் எடுத்த என்னை பாராட்டாமல், மீதி 2 மதிப்பெண் ஏன் எடுக்கவில்லை என்று கேட்பது எவ்வளவு தவறானது என்பதை படித்த என் பெற்றோர்கூட உணரவில்லை என்பதுதான் எனக்கு ஏற்பட்டிருந்த மிகப்பெரிய வேதனை.

வர்ஷா, நன்றாகப் பேசுவாள். மேடையில் ஏறி மடை திறந்த வெள்ளம் போல அழகு தமிழில் அனைவரையும் மயக்குவாள். பள்ளிக்கூடத்தில் ஆசிரியர்களின் நன்மதிப்பை பெற்றவள்.

'ஏய்..நீ டிவில செய்தி வாசிக்க போலாம்டி' என்று சிநேகிதிகள் சிலாகித்து கூறுவதும் உண்டு.

வர்ஷா இப்போது இப்படி ஒரு முடிவுக்கு வர அம்மாவும்,அப்பாவும் செய்த அலப்பறைகள்தான் காரணம். பக்கத்து வீட்டுக்காரர்கள் கூட வந்து மதிப்பெண் பற்றியே விசாரிக்கத் துவங்கிவிட்டனர், ஏதோ துக்கம் விசாரிப்பதுபோல. வர்ஷாவுக்கு அவமானமாகப்போய்விட்டது. அந்த கணநேர முடிவுதான் இது.

படங்கள் - சிறுகதைக்கான மாதிரி படங்கள்.

மனது இறுக்கமாக இருந்தது. எடுத்த முடிவில் பின்வாங்கிவிடக்கூடாது என்று மனம் உறுதி எடுத்துக்கொண்டது.

எதற்கு இந்த பை? ஏதோ பள்ளிக்கூடத்திற்கு போவதுபோல? யாரை ஏமாற்ற இந்த பையை எடுத்துவந்தேன்? தன்னையே கேள்வி கேட்டுக்கொண்டாள்,வர்ஷா.

மெயின் ரோட்டைத்தாண்டி ஒரு குறுக்குத்தெருவில் வேகமாக நடைபோட்டாள்.

வேறு எதைப்பற்றியும் சிந்தனை ஓடவில்லை. கடல் மட்டுமே கண்களில் தெரிந்தது. ஒருவித அவசரம் தொற்றிக்கொண்டதுபோல வேக நடை போட்டாள். அந்த தெருவின் கடைசியில் ஒரு பெரியவர் சைக்கிளை பிடித்துக்கொண்டு நின்றார். தரையில் உட்கார்ந்தவாறே வந்த ஒரு சிறுமி அந்த சைக்கிளில் ஏறுவதற்கு பிரயத்தனம் பட்டாள்.

ஸ்டாண்டை பிடித்துக்கொண்டு, சைக்கிள் கேரியரை எட்டிப்பிடித்து ஜம்ப் செய்ய முயற்சித்தாள்,அந்த சிறுமி.

படங்கள் - சிறுகதைக்கான மாதிரி படங்கள். நன்றி -ஸ்மைல் பவுண்டேஷன்

இதைக்கண்ட வர்ஷா கடைசியாக இந்த சிறுமிக்கு உதவிச்செல்லலாமே என்ற எண்ணத்துடன் சிறுமிக்கு உதவ கையை நீட்டினாள்.

'வேண்டாம்க்கா..இன்னிக்கி நீங்க உதவி பண்ணுவீங்க? நாளைக்கு யார் எனக்கு உதவ வருவாங்கன்னு எதிர்பார்க்கிறதை நான் விரும்பலக்கா. நீங்க உதவி செய்யணும்னு நினைக்கிறது தப்பில்லைக்கா. ஆனா,நான் என்னைச்சார்ந்தே வாழணும்னு நினைக்கிறேன். எனக்கு எங்கப்பா மட்டும்தான். அவர் இருக்கிறவரை இந்த சைக்கிளை பிடிக்கறதை செய்வார். அதையும் நானே செய்து பழக முடிவெடுத்திருக்கிறேன்க்கா. அதனால்தான் எங்க அப்பா கூட உதவி பண்ணலை.' என்று கூறியவாறு, மூன்று முறை முயற்சி செய்து சைக்கிள் கேரியரில் தாவி உட்கார்ந்தாள், அந்த சிறுமி. வர்ஷாவை ஏறிட்டுப்பார்த்த அந்த சிறுமி, சிறிய புன்னகையை வீசினாள்.

சிரித்தவாறே, 'ஒவ்வொருத்தருக்குள்ளயும் ஒரு 'நான்' என்பது இருக்கு அக்கா. அது ஒரு தீப்பொறி. அது பத்திக்கிட்டா போதும்க்கா..அது பிழம்பா எரிஞ்சு நமக்குள்ள உள்ள நம்பிக்கையை தீபமாக்கிடும். அந்த ஒளியே நமக்கு வழிகாட்டியா இருக்கும்க்கா' என்றாள்,அந்த சிறுமி சர்வசாதாரணமாக.

வர்ஷா கன்னத்தில் யாரோ ஓங்கி அறைந்தது போல் இருந்தது.

படங்கள் - சிறுகதைக்கான மாதிரி படங்கள்.

'எனக்கு நல்லா ஓவியம் வரைய வரும்க்கா. அதில் சாதிச்சிக்காட்டுவேன்' என்ற அந்த சிறுமியின் வார்த்தை வர்ஷாவின் காதுகளில் ஓங்கி ஒலித்துக்கொண்டிருந்தது.

தற்கொலை செய்துகொள்ள எடுத்த முடிவை தூக்கி தூரத்தில் எறிந்துவிட்டு, தன்திறமையை தோளில் சுமந்தவாறு பீடு நடை போட்டாள்,வர்ஷா, வீட்டைநோக்கி.

(முற்றும்)


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2


Tags

Next Story
ai and future cities