விடியல் ( சிறுகதை ) காதலின் உன்னதம் தெரியும்..!

Romantic Story Tamil
X

Romantic Story Tamil

Romantic Story Tamil-சின்னச் சின்ன சம்பவங்களே சிறுகதையின் கருவாக இருக்க முடியும். அப்படியான ஒரு சிறு சம்பவத்தின் அடிப்படையே இந்த சிறுகதை. படிங்க.

Romantic Story Tamil-சிறுகதைன்னா ரொமான்ஸ் இருந்தால்தான் வாசகர்கள் படிக்கிறார்கள். ஆனால், இது காதலைத் தொலைத்த இரு மனங்களின் வேதனை வெளிப்பாடு. முடிவு எப்படி இருந்தது? படிச்சிப்பாருங்க.

விடியல் (சிறுகதை) க.சு. பூங்குன்றன்


2010ம் ஆண்டு. அப்போது நான் ஒரு பிரபல பத்திரிகையில் உதவி ஆசிரியராக பணியாற்றிக்கொண்டிருந்தேன். அதனால், மதுரையில் தங்கி இருந்தேன். வாரம் ஒருமுறை வீட்டுக்கு வந்து செல்வது வழக்கம். வாரவிடுப்பு எனக்கு புதன்கிழமை. அதனால், ஒவ்வொரு செவ்வாய் நள்ளிரவில் பணிமுடித்து, மதுரையில் இருந்து திருச்சிக்கு பேருந்து ஏறுவேன்.

நள்ளிரவுப்பயணத்தில் இரவை கிழித்துக்கொண்டு ஒளிபாய்ச்சியபடி செல்லும் பேருந்து பயணம் ஒருவித மகிழ்ச்சியை ஏற்படுத்தும். எல்லோரும் பேருந்து ஏறியதும் உறங்கிப்போவார்கள். ஆனால், எனக்கு எப்போதுமே பேருந்து பயணத்தில் உறக்கம் வராது. ஒருவேளை, குடும்பத்தை காணப்போகிறோம் என்கிற மகிழ்ச்சியாக கூட இருக்கலாம்.

அது உண்மையாக கூட இருக்கலாம். வீட்டுக்கு போகும்போது பள்ளிவிட்டு வரும் குழந்தைபோல மகிழ்ச்சியாக செல்லும் எனக்கு , விடுப்பு முடிந்து பணிக்கு புறப்படும் அடுத்தநாள் பள்ளிக்குப் போகும் குழந்தைபோல அடம்பிடித்து மனது இறுக்கமாக இருக்கும்.

ஆனால், பேருந்து ஏறும் வரைதான் மனது அடம்பிடிப்பதெல்லாம். தானாகவே மாறிவிடும். இப்படி என் பயணம் வாராவாரம் தொடர்ந்து கொண்டிருந்தவேளையில் வழக்கம்போல அன்றும் மதுரையில் இருந்து திருச்சிக்கு செவ்வாய் நள்ளிரவில் பேருந்து ஏறினேன்.

எனக்கு வசதியான ஜன்னலோர இருக்கையில் அமர்ந்துகொண்டேன். அந்த நேரத்தில் இளையராஜாவின் இசையில் 'நிலவு தூங்கும் நேரம்..' பாடல் ஒலித்துக்கொண்டிருந்தது. அந்தப் பாடல் காதுக்கு இனிமையாக இருந்தது. எனக்கு முன்னிருக்கையில் ஒரு பெரியவரும், அவரது மனைவியும் அமர்ந்து அந்த நேரத்தில் குழந்தைகள் போல எதையோ சாப்பிட்டுக்கொண்டிருந்தார்கள்.

எனக்கு வலப்புறமாக 3 பேர் அமரும் இருக்கை காலியாக இருந்தது. பேருந்து புறப்படும் நேரம் ஆகிவிட்டதால் நடத்துனர் விசில் ஊதி ஓட்டுனரை பேருந்தை எடுக்க உத்தரவிட்டார். பேருந்து ஒளியை பாய்ச்சியபடி மெதுவாக ஊர்ந்து பேருந்து நிலையத்தை விட்டு வெளியேறும்போது, கையில் சூட்கேசுடன் ஒரு பெண் கையசைத்து பேருந்தை நிறுத்துவது தெரிந்தது.

பேருந்து நின்றதும் அவசர அவசரமாக அந்தபெண் பேருந்துக்குள் ஏறினாள். நேராக வந்து எனக்கு வலப்புறமாக காலியாக இருந்த அந்த 3 பேர் அமரும் இருக்கையில் உட்கார்ந்தாள். அவளது முகத்தை நான் கவனிக்கவில்லை. அவள் தலையை குனிந்தபடியே இருந்தாள். எதையோ பறிகொடுத்தவள்போலவே சேலையை இழுத்துப் போர்த்தியிருந்தாள்.

பேருந்து மெல்ல ஊர்ந்து நகரின் எல்லையைத்தாண்டியதும், நடத்துனர் பயணச் சீட்டு கொடுக்கத்தொடங்கினார். மீண்டும் எஸ்பிபி 'தேனே தென்பாண்டி மீனே..' பாடலை பாடிக்கொண்டிருந்தார். ஓட்டுனரும் நடத்துனரும் இளையராஜாவின் நல்ல ரசிகர்கள் போல. இரவு நேரத்துக்கு ஏற்ப பாடல்களை தேர்வு செய்துள்ளனர் என்று மனதுக்குள் எண்ணிக்கொண்டேன். இறங்கும்போது இரண்டுபேரையும் பாராட்டவேண்டும் என்றும் எண்ணியவாறு இருந்தபோது என்னிடம் சீட்டு கேட்டார் நடத்துனர்.

'திருச்சி ஒன்னு' என்று நான் கேட்ட அதேநேரத்தில் அந்தப்பெண்ணும் 'திருச்சி ஒன்னு' என்றாள். அப்போதுதான் அவள் முகத்தை நான் பார்த்தேன். என் நெஞ்சுக்குள் பெரிய இடி ஒன்று விழுந்ததுபோல அதிர்ந்து நின்றேன். இருக்கையில் இருந்து எழுந்துவிட்டேன்.

நான் எழுந்த வேகத்தைப்பார்த்த நடத்துனர், 'என்னாச்சி சார்? என்றார். அவர் கேட்டபோது அந்த பெண்ணும் என் முகத்தைப் பார்த்து அதிர்ந்து எழுந்தாள்.

############################################################

..........ஃபிளாஷ் பேக்

2000ம் ஆண்டு. துவாக்குடி அரசு கலைக்கல்லூரியில் எம்.ஏ. தமிழ் இறுதியாண்டின் இறுதி நாள். என்னருகே அமுதா. ஆம். அவளும் நானும் உண்மையாக காதலிப்பவர்கள். இன்று கடைசி நாள் என்பதால், என் தோளில் சாய்ந்து தாரை தாரையாக கண்ணீர் விட்டுக்கொண்டிருந்தாள். எனக்கும் பிரிவதின் வலி இருந்தாலும் வெளியே காட்டிக்கொள்ளாமல் 'நான் ஆம்பிளை. அழக்கூடாது என்ற ஆழ்மனது எண்ணம் என் அழுகையை கட்டுப்படுத்தி வைத்திருந்தது.

எதுக்கு இப்போ அழற? ஒரு நல்ல வேலையில் சேர்ந்ததும் உன்னை பெண் பார்த்து கல்யாணம் பண்ணிக்கப்போறேன்..பின்ன எதுக்கு அழற? என்றேன் ஆதரவாக. ஆனாலும் அவள் சமாதானம் அடையவில்லை. பெண்ணல்லவா? நான் சொன்னதும் முன்பைவிட கூடுதலாக அழுதாள்.

அவளது தாடையைத் தூக்கிப்பிடித்து நேராக அவள் கண்களைப் பார்த்தேன். கண்ணீருடன் என்னை ஏறெடுத்துப்பார்த்தாள். நேர் பார்வையில் எனக்கும் சங்கடங்கள் சொல்லிக்கொள்ளாமல் வரவே செய்தது.

என்னம்மா..நீ என்னா தூரத்திலயா இருக்கிற..? சிறுகனூர்ல இருந்து திருப்பட்டூர் எவ்ளோ தூரம். இங்க இருக்கிற திருப்பட்டூருக்கு... பைக்கில வந்தால் 5 நிமிஷம்..' என்று கூறி சமாதானப்படுத்தினேன். இருவரும் ஒன்றாகவே கல்லூரியில் இருந்து திரும்பினோம். அதுதான் நான் அவளை கடைசியாகப் பார்த்தது.

என் காதலுக்கும் ஒரு வில்லன் இருந்தான். அவன் அமுதாவின் ஊர்க்காரன். அவனும் எங்கள் கல்லூரியில் வேறு துறையில் படித்துவந்தான். அவன் அமுதாவை ஒருதலையாக காதலித்துள்ளான். ஆனால், அமுதா முடியாது என்று மறுத்திருக்கிறாள்.

பின்னர் எங்கள் காதலை தெரிந்துகொண்டு அமுதாவின் பெற்றோரிடம் கூறிவிட்டான். ஆமாம், எங்கள் காதல் விவகாரம் அமுதாவின் பெற்றோருக்குத் தெரியவரவே, அவர்கள் அவளைவிட 10 வயது பெரியவர் ஒருவருக்கு அவசர அவசரமாக திருமணம் முடித்துவிட்டனர். அவருக்கு ஏகப்பட்ட சொத்து இருக்குதாம்.

பெற்ற மகள் எப்படிப் போனால் என்ன? சொத்துமட்டுமே முக்கியம் என்று திருமணம் செய்துவிட்டனர். அமுதா அழுதிருப்பாள். மறுத்து அடம்பிடித்திருப்பாள். எப்படி அவளால் என்னை விட்டு விட்டு நிம்மதியாக வாழமுடியும்?

அவளுக்கு திருமணம் நடந்ததே என் நண்பன் ஒருவன் சொல்லித்தான் எனக்குத் தெரிய வந்தது. அவன்தான் எல்லா விபரங்களையும் என்னிடம் கூறினான். அதிர்ச்சியில் நானும் ஆறுமாதம் திக்கற்று நின்றேன். என் அம்மாதான் எனக்கு ஆறுதலாக இருந்தார்.

'தம்பி, எதுவும் நம்ம கையில் இல்லை. உனக்கு கடவுள் என்ன கொடுக்கணும்னு நினைக்கிறாரோ அதைத்தான் தருவார். அதனால் உன் வாழ்க்கையை வீணாக்கிக்காத. படிச்சிட்ட..ஒரு வேலையைத் தேடு' என்று கூறிய வார்த்தைகள் என்னை யோசிக்க வைத்தது.

நான் ஒருவன் மட்டுமே என் பெற்றோருக்கு. நான்தான் அவர்களை கவனித்துக்கொள்ளவேண்டும். விவசாயத்தில் கிடைக்கும் குறைந்த வருமானத்தை வைத்து என்னை முடிந்த வரை படிக்கவைத்தார்கள். அவர்களுக்கு மேலும் நான் சுமையாக இருக்கக்கூடாது என்பதில் தெளிவாக இருந்தேன்.

tamil romantic stories

அப்போதுதான், மதுரையில் பிரபல பத்திரிகையில் வேலைக்கு ஆள் எடுத்தார்கள். நானும் விண்ணப்பித்தேன். என்னிடம் இருந்த தமிழ் மொழியறிவு எனக்கு வாய்ப்புக்கான கதவைத் திறந்தது. வேலை செய்துகொண்டே பகுதிநேரமாக பி.எட்., படித்தேன்.

எனக்கு வேலை கிடைத்ததும் மாங்குடியில் என் மாமா மகள் ஆனந்தியை திருமணம் செய்துகொண்டேன். 6 வயதில் ஒரு மகன், 4 வயதில் ஒரு மகள் என அழகான குடும்பமாக மகிழ்ச்சியாக போய்க்கொண்டிருந்தது. என் மனைவி ஆனந்தி, என் மீது டன் கணக்கில் அன்பைப் பொழிந்து பழைய நிகழ்வுகளை மறக்கச் செய்துவிட்டாள்.

இப்படி நிம்மதியாக, மகிழ்ச்சியாக போய்க்கொண்டிருந்த இந்த தருணத்திலா நான் அமுதாவை பார்க்கவேண்டும்?

மீண்டும் பேருந்துக்குள்....வந்துட்டோம்..

நானும் அமுதாவும் அதிர்ந்து நின்றதைப்பார்த்த நடத்துனரும் பயணிகளும் என்னாச்சு..என்னாச்சு என்று விசாரிக்கத் தொடங்கிவிட்டார்கள்.

ஒண்ணுமில்லிங்க..எனக்குத் தெரிஞ்சவங்க..திடீர்னு பார்த்ததில் அதிர்ச்சி ஆகிட்டோம் என்று நிலைமையை சமாளித்தேன்.

அமுதா நெற்றியில் பொட்டு இல்லை என்பதைக் கவனித்தேன். அதனால்தான் அவளது முகம் எதையோ இழந்ததுபோல இருக்கிறது என்பதையும் உணர்ந்தேன். 'அண்ணா ரெண்டு சீட்டா கொடுத்திடுங்க' என்று நான் சீட்டு கேட்டபோது, 'வேணாம்..வேணாம்..' என்று அமுதா தடுத்ததை பொருட்படுத்தாமல் 2 சீட்டு வாங்கிக்கொண்டேன்.

நான் அமர்ந்திருந்த இருக்கையில் இருந்து எழுந்து அவள் அருகில் ஒரு ஆள் இடைவெளியில் தள்ளியே அமர்ந்தேன். அவள் அழுதிருப்பது தெரிந்தது. சிறிது நேரம் மௌனமாக இருந்தேன். அழுது தீர்த்தால் அவளுக்கும் கொஞ்சம் ஆறுதல் கிடைக்கும் என்பதால் சிறிது இடைவெளிவிட்டு பேசுவதற்கு காத்திருந்தேன்.

இந்த நேரம் பார்த்து 'காத்திருந்து காத்திருந்து காலங்கள் போகுதடி' என்று ஜெயச்சந்திரன் பாடியது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. அமுதாவோடு கல்லூரியில் குதூகலமாக சுற்றிய நாட்கள் நினைவில் வந்து சென்றன.

காதலோடு கல்யாணம் பண்ணி ஒன்றாக வாழவேண்டிய எங்கள் வாழ்க்கையை அமுதாவின் பெற்றோரே கெடுத்துவிட்டனர். இன்று அவள் கண்ணீரில்.


மெதுவாக அவளிடம் பேச்சு கொடுத்ததில் அவள் அழுது, அழுது சொன்னதின் சாராம்சத்தை உங்களுக்கு சுருக்கமாக சொல்கிறேன். அவளது கணவன் குடித்துவிட்டு பைக் ஒட்டியபோது விபத்தில் இறந்துவிட்டாராம். கணவர் அவளைவிட வயதில் பெரியவர் என்பதால் குழந்தையும் பிறக்கவில்லை.

அவர் இறந்ததும், திருநெல்வேலியில் ஒரு பள்ளிக்கூடத்தில் ஆசிரியர் பணிக்குச் சேர்ந்திருக்கிறாள். விடுதியில் தங்கி இருக்கும்போது பள்ளியின் உரிமையாளர் தவறாக நடக்க முயற்சி செய்துள்ளார். அதனால், ஒருவரிடமும் சொல்லாமல் ஊருக்குப் புறப்பட்டிருக்கிறாள்.

இதையெல்லாம் கேட்ட எனக்கு தாங்க முடியாத சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. எனது மனம் அமுதாவின் பெற்றோரை நினைத்து கோபம் வரச் செய்தது. அந்த பள்ளிக்கூட உரிமையாளரை நினைத்து இன்னும் கூடுதல் கோபம் வந்தது. இந்த சமூகத்தில் ஒரு பெண் தனிமையாக வாழமுடியாத நிலையை எண்ணி வேதனை வெடித்தது.

தனித்து நிற்கும் பெண்ணை அடைய நினைக்கும் இந்த பணக்கார திமிர் பிடித்தவர்கள் கல்வித் தந்தை என்று பட்டம் வேறு போட்டுக்கொள்கிறார்கள். வெட்கம் கெட்டவர்கள். ஆத்திரம் என் கண்களில் கொப்பளித்தது.என்ன செய்வது? நான் கோபமுற்று என்ன பயன்? இப்போது அமுதாவுக்கு ஏதோ ஒரு தீர்வு காண வேண்டும் என்பதே இப்போதைய பெரிய கவலையாக இருந்தது.

வேண்டும் என்று இருவருமே பிரியவில்லை. அவளது சூழ்நிலையில் அப்போது அவளால் தடுத்துக்கொள்ள முடியவில்லை. எனக்கும் எனது அம்மா, அப்பாவை காப்பாற்றவேண்டிய சூழல். இப்படி ஒருவருக்குத் தெரியாமல் இருவரும் சூழ்நிலைக்கைதிகள் ஆனோம்.


இப்போது எனது நிலை அவளுக்குத் தெரியும்.அவளது நிலை எனக்குத் தெரியும். தீர்வு அமுதாவுக்குத்தான் கிடைக்கவேண்டும். அதனால் நான் சொன்ன எதற்கும் அவள் மறுப்புக் கூறவில்லை. நான் அவளுக்கு நல்லதே செய்வேன் என்று முழுமையாக நம்புகிறாள்.

அதனால், தடுமாறி நிற்கும் அவளுக்கு நான் ஏதாவது செய்யவேண்டும் என்று முடிவெடுத்தேன். நேராக என் வீட்டுக்கே அழைத்துச் சென்றேன். எனது மனைவி ஆனந்தியிடம் எல்லா விபரங்களையும் சொன்னேன். அவள் சிறிதும் தயங்கவில்லை.

'என்னங்க நீங்க ஒருத்தருக்கு உதவணும்னு முடிவெடுத்திருக்கீங்க. எனக்கு சந்தோஷம்ங்க. அதிலயும் எங்கிட்ட மறைக்கக்கூடாதுன்னு நீங்க நினைச்சப்பவே என் மனசில ஒசந்து நிக்கிறீங்க. இப்ப என்ன அவங்க எனக்கு அக்கா மாதிரிதான். நீங்க நினைக்கிற மாதிரியே, அவங்களுக்கு ஒரு வேலையை வாங்கிக்கொடுங்க. கொஞ்ச நாள் போனதும் ஒரு நல்ல மாப்பிள்ளையைப் பார்த்து நாமளே மறுபடியும் கல்யாணம் பண்ணி கொடுத்திடலாம்.' என்று என் மனைவி ஆனந்தி கூறியதும் அமுதாவும் என் அம்மாவும் நிற்பதைக்கூட மறந்து என் மனைவி ஆனந்தியைக் கட்டிப்பிடித்து முத்தமிட்டேன்.

(முற்றும் )


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2


Tags

Next Story
ஈரோடு: வயதான தம்பதி மீது மோட்டார் சைக்கிளில் மோதிய கூலி தொழிலாளி பலி