ஐயையோ..தொப்பி போட்ட பேய்..! (பேய் சிறுகதை) நடுங்கவைக்கும் நடுநிசி..!
Pei Story in Tamil
Pei Story in Tamil-சிறுகதையில் பேய்க்கதை என்பது நாம் சிறுவயதில் கேட்டிருப்போம். தாத்தா,பாட்டி பல கதைகள் கூறுவதில் இந்த பேய்க்கதையும் இருக்கும். அப்போவெல்லாம் பேய்க்கதை சொல்லும்போது மட்டும் தாத்தா,பாட்டி கிட்டக்கா உக்காந்துக்குவோம். எல்லாம் பேய் பயம்தான். இங்கே உங்களுக்காக கற்பனையில் உதித்த பேய்க்கதை படிங்க. ரசிங்க.
ஐயையோ.. தொப்பி போட்ட பேய்..! (பேய் சிறுகதை) க.சு.பூங்குன்றன்
அந்த ஊரில் விவசாயம் சிறப்பாக நடந்து வந்தது. காரணம், காவிரி ஆற்றுப்பாசனப்பகுதில் உள்ளது அந்த கிராமம். ஊருக்கு ஒதுக்குப்புறமாக இருப்பதால், விவசாய நிலங்களில் பயிரிடப்பட்டிருக்கும் விவசாய அறுவடைப்பொருட்களை திருடர்கள் அவ்வப்போது வந்து களவாடி சென்றுவிடுவார்கள்.
இப்படி தோட்டத்தில் பல வாழைக்குலைகள் காணாமல் போய்விடும். நெல்வயலில் ஒரு பாத்தி அளவில் நெல் அறுவடை செய்யப்பட்டிருக்கும். சிலரது தோட்டத்தில் காய்த்துகிடக்கும் மஞ்சள் பூசணிக்காய்கள் காணாமல் போயிருக்கும். இதையெல்லாம் பார்த்த அந்த ஊர் மக்கள் ஒரு காவல்காரனை இரவு நேரத்தில், போடலாம் என்று யோசித்தனர். பலரும் 'இது நல்ல ரோசனியா(யோசனை) இருக்கே' என்றனர்.
அதன்படி ஊர் பெரியவர்கள் ஒன்று கூடி நாச்சியப்பன் என்பவரை இரவு நேரக் காவலாளியாக வேலைக்கு வைத்தனர். அவரும் இரவு நன்றாக சாப்பிட்டுவிட்டு கையில் ஒரு தடி மற்றும் டார்ச் லைட் சகிதமாக வாயில் சுருட்டு, தலையில் தலைப்பாகை என வீறு நடைபோடுவார்.
ஒரு அரைமணிக்கு ஒருதரம் கூச்சல் போடுவார். அப்போதான் திருடன் வந்தாலும் ஆள் இருக்கிறார்கள் என்று ஓடிப்போய்விடுவார்களாம். இது அவரது அப்பாவியான நம்பிக்கை. திருட வருகிறவன் பாதுகாப்பு ஆயுதங்கள் இல்லாமலா வருவான் என்கிற அடிப்படை ஞானம் கூட இல்லாத நாச்சியப்பனை ஊரார் முன்மொழிந்து காவலாளியாக்கிவிட்டனர்.
நாச்சியப்பனும் சாதாரண பேர்வழியல்ல. ஊருக்குள் இருக்கும் பெண்பிள்ளைகளிடம் கிண்டலாக பேசுவது. என் திறமைக்கு இந்த ஊரில் யாரும் ஈடாக முடியாது. நான் வேறு ஊரில் பிறந்து இருந்தால் நாட்டுக்கு கவுரனார் (கவர்னர்) ஆகியிருப்பேன் என்றல்லாம் பீற்றுவார்.
இளைஞர்கள் அவரை சீண்டி விளையாடுவதே வேலை. 'நாச்சி..சின்ன வயசிலே எத்தனை பேரை காதலிச்சிருக்கே..?' என்பார்கள்..அவருக்கு இளைஞர்கள் காதல் குறித்துக்கேட்டால் குஷியாகிவிடுவார்.
'அட.. நானெங்கப்பா காதலிச்சேன்..? என்னைய காதலிச்ச பொண்டுங்கதான் ஏராளம். என்னைய சுத்திச் சுத்தி வருவாங்க..! நாந்தான் எதையுமே வேணான்னுவிட்டுட்டேன்..' என்பார் ஏதோ பெருந்தன்மையாக விட்டதுபோல.
இளைஞர்கள் அதைக்கேட்க சகிக்காது, 'அண்ணே..உங்க வீட்டுக்காரம்மா வருதாங்க.." என்றால் போதும். நாச்சி காணாமல் போய்விடுவார். ஒருநாள்..இளைஞர்கள் நாச்சியுடன் இரவு அவர் காவலுக்கு போன நேரத்தில் சீண்ட வேண்டும் என்று முடிவு எடுத்தனர்.
அதன்படி அன்று இரவு நாச்சி தோட்டத்துக்கு காவலுக்கு செல்லும் முன்னரே ஊர் இளசுகள் அவர் நடந்துவரும் பாதைக்கருகில் செடிக்குள் மறைந்து இருந்தனர். அண்ணன் நாச்சி போர்வையை போர்த்தியபடி டார்ச் அடித்தவாறு சுருட்டையும் இழுத்துக்கொண்டு ஜாலியாக நடந்தார். அப்போது செடிக்குள் மறைந்திருந்த ஒரு இளைஞன் பின்னால் இருந்து அவரது போர்வையை ஒரு இழு.. இழுத்துவிட்டு மறைந்துகொண்டான்.
சற்று பயந்த நாச்சி..நின்று டார்ச் அடித்துப்பார்த்தார். அமைதியாக இருந்தது. 'க்கும்..சும்மாவே பயந்துட்டோம்' என்று அவரே வாய்திறந்து பேசிக்கொண்டு மீண்டும் நடைபோட்டார். 10 அடி தூரம் போனதும் அடுத்தவன் செடிக்குள் இருந்து வெளியே கையை நீட்டி அவரது போர்வையை பின்னால் இருந்து இழுத்தான்..'ஹாய்... ஏய்.. யாருடா..நான் மோசமானவன்..?' என்றார்..மூச்சுவாங்க. தடியை ஓங்கியவாறு..'திருட்டு பயலே வாடா பார்க்கலாம் ' என்றார் சத்தமாக.
சிறிது நேரம் வரை எந்த சத்தமும் இல்லாததால்..' நாமதான் பயத்துல ஒளறுகிறோம் போல..' என்று மீண்டும் பேசினார். சரி..சரி.. நாம போவோம்..வேலையைப்பாக்கணுமில்ல..?' என்று வாய்க்குள் பேசியபடி நடையைக்கட்டினார். இன்னும் 10 அடி நடந்தபோது அதேபோல அடுத்தவன் இழுக்கவே..'ஐயையோ பேய்..ஐயையோ பேய்' என்று கத்தியவாறு ஊருக்குள் ஓடினார்.
ஏதோ சத்தம் வருகிறதே என்று ஊரில் கூடிவிட்டனர். மூச்சு வாங்க ஓடிவந்த நாச்சியைப்பார்த்து,'என்னாச்சி சத்தம் போட்டீங்க..? திருடன் வந்துட்டானா..?' என்று ஊர்க்காரர்கள் மாற்றி மாற்றி கேட்டபோதும் நாச்சிக்கு பேச்சி வரவில்லை.
'அட என்னய்யா..' என்றதும்..நாச்சி 'பேய்..பேய்.'.என்று விழித்தார்.
'பேயா..வாங்கடா.. எல்லோரும் போவோம்' என்று ஊரில் எல்லோரும் சேர்ந்து தோட்டப்பக்கம் சென்றனர். பயம்காட்டிய பயலுகளும் சேர்த்துக்கொண்டனர். மனசுக்குள் சிரித்துக்கொண்டனர்.
பின்னொருநாள் இரவு காவல் முடிந்து அதிகாலை நேரத்தில் வீடு திரும்பிக்கொண்டிருந்தார் நாச்சி. தூரத்தே விடிந்தும் விடியாமல் இருட்டு கம்மியிருந்தது. அவர் போகும் பாதைக்கு எதிரே ஒரு பெரிய பொம்மைபோல ஒரு உருவம் தெரிந்தது. அதன் தலையில் ஒரு வெள்ளைக்காரன் தொப்பி வைத்ததுபோல ஒரு தொப்பி வேறு இருந்தது.
அந்த பொம்மை காற்றில் ஆடியது. நாச்சியின் பார்வைக்கு அந்த பொம்மை காற்றில் ஆடியது..'வா..வா ' என்று அழைப்பதுபோல இருந்திருக்கும்போல. சற்று பயந்த, நாச்சிக்கு மூசசு அடைத்தது..அந்த நேரம்பார்த்து காற்றும் கொஞ்சம் வேகமாக வீசவே..பொம்மையின் ஆட்டம் வேகமாக இருந்தது..காற்றின் ஊ..ஊ..சத்தம்வேறு சூழ்நிலையை பாதகமாக்கியது..பொம்மையும் வேகமாக ஆடியது.
உடனே நம்ம ஆள்..பிடித்தார் ஓட்டம்..'ஐயையோ..தொப்பி வச்ச பேய்..தொப்பி வைச்ச பேய்..'என்று கத்திக்கொண்டு ஓட..நாச்சியின் அலறல் சத்தம் கேட்டு அந்த அதிகாலை நேரத்தில் ஊரே திறண்டுவிட்டது.
மூச்சு வாங்க ஓடிவந்த நாச்சி..'தொப்பி வச்ச பேய்..இருக்கு..என்று தோட்டப்பக்கம் கையைக் காட்டினார். அதற்கும் ஊரே திரண்டு தோட்டப்பக்கம் போனது. 'எந்த இடத்தில பேயைப்பார்த்தப்பா..?" என்று கேட்டனர்.
'இதோ இங்கதான்' என்று காட்டினார். அப்போது பொழுது கொஞ்சம் விடிந்து வெளிச்சம் வந்திருந்தது. அவர் காட்டிய இடத்தில் ஊர் மக்கள் பார்த்தார்கள். யாரோ சோளக்காட்டு பொம்மை செய்து அதற்கு தொப்பி வைத்திருந்தனர். அது காற்றில் ஆடியதைப்பார்த்து நாச்சி அண்ணன் பயந்துபோனார் என்பது ஊருக்கே வெளிச்சமானது. ஊரே சிரித்து சிரித்து வயிறு வலி எடுத்துப்போனது. தொப்பி போட்ட பேயாம்..!
பின்ன..? பின்ன என்னா..? நாச்சி அண்ணனுக்கு வேலை போச்சி..!
('எவனாவது காவல் வேலைக்குன்னு கூப்பிடுங்க..அப்புறம் பாருங்க'-நாச்சி அண்ணனின் மைண்ட் வாய்ஸ்...)
(முற்றும்)
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu