tamil love story-'நுவழினி' (சிறுகதை)..! வாசிங்க..!
tamil love story-நுவழினி (சிறுகதை) -(கோப்பு படம்)
நுவழினி (சிறுகதை) - க.சு.பூங்குன்றன்.
அவளை திருச்சி, சத்திரம் பேருந்து நிலையத்தில்தான் முதன் முதலாக சந்தித்தேன். இருவரும் ஒரே பேருந்துக்காத்தான் நிற்கிறோம் என்பது அப்போது அவளுக்கும் தெரியாது;எனக்கும் தெரியாது. கையில் சான்றிதழ்கள் வைக்கும் ஒரு ஃபைல் வைத்திருந்தாள். 'என்னைப்போலவே நேர்காணலுக்குப் போகிறாள் போலும்' என்று நானே எண்ணிக்கொண்டேன்.
இதோ சிறுகனூர் என்று பெயர்தாங்கிய அந்த பேருந்து வந்தது. அடித்துப் பிடித்து ஏறுவதில் எனக்கு உடன்பாடில்லை. அதனால் ஓரமாக நான் ஒதுங்கி நின்றேன். ஒதுங்கி நின்ற என்னை அவள் ஓரக்கண்ணால் பார்ப்பதை நானும் ஓரக்கண்ணால் கவனித்தேன். ஏனோ எனக்குள் என்னையறியாமல் ஒரு சிலிர்ப்பு ஏற்பட்டது. அவள் கண்கள் உறுத்தாத அழகு. சாதாரண ஆடை கூட அவளுக்கு எளிமையாக அவளது அழகை கூட்டியிருந்தது. அவள் கண்களில் அப்படி ஒரு சாந்தம்.
நான் ஒதுங்கி நின்றதால் அவளும் முண்டியடித்து ஏறவில்லை. அவளும் ஒதுங்கி நின்றாள். எல்லோரும் பேருந்தில் ஏறியவுடன் அவள் ஏறுவதற்காக வழிவிட்டு நின்றேன். வெளியே தெரியாத சிறு புன்னகையை வீசிவிட்டு பேருந்துக்குள் ஏறினாள்.
tamil love story
அவளுக்கு, ஒரு பெண் அருகே இடம் கிடைத்திருந்தது. அவள் அமர்ந்துகொண்டாள். சிறிது நேரம் நின்ற பேருந்தில் கூட்டம் அதிகமானது. நிற்பதற்குக்கூட சிரமமாக இருந்தது. கூட்டத்தின் சிறிய இடைவெளியில் அவள் என்னைப்பார்ப்பது தெரிந்தது. பார்த்த நொடி சிறிதும் தாமதிக்காமல் நான் கையில் வைத்திருந்த ஃபைலை தரும்படி சைகையில் கேட்டாள்.
பரவாயில்லை என்பதுபோல சிநேகத்துடன் தலையாட்டினேன். ஆனாலும் மீண்டும் அவள் கேட்கவே ஃபைலை நின்றுகொண்டிருந்த ஒருவரை விலக்கிவிட்டு நீட்டினேன். வாங்கி மடியில் வைத்துக்கொண்டாள். என்னுடைய ஃபைல் அவளிடம் இருப்பது இனம்புரியாத ஒரு மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
ஏதோ முன் ஜென்மத்து உறவு என்பார்களே, அதைப்போல அவள்மீது எனக்கு ஒரு பற்று ஏற்பட்டது. அது நீடித்து இருக்கவேண்டும் என்று உள்ளுக்குள் மனசு அடித்துக்கொண்டது. மறுபுறம் என் பகுத்தறிவு, 'என்னடா..நீ..இப்போதுதான் அந்த பெண்ணை முதல் முறை பார்க்கிறாய். அதற்குள் என்னென்னவோ கனவில் மிதக்கிறாய்..?' என்று என்னை சீண்டுவது போல இருந்தது.
நான் இறங்கும் இடம் வந்ததும் ஃபைலை வாங்கிக்கொண்டு நன்றிகூறி விடைபெற்றேன். ஃபைலை வாங்கும் அந்த தருணத்தில் அவளது முகத்தில் ஏதோ ஒரு தேடல் இருந்தது. அது என்னை யார் என்று அறிந்துகொள்வதற்கான தேடலாகத்தான் இருக்கும் என்று எனக்குள் ஏதோ ஒன்று கூறியது. ஆனாலும் எதையும் பகிர்ந்துகொள்ள முடியவில்லை. பகிர்ந்துகொள்ளும் அளவுக்கு நேரமும் இல்லை.
நான் இறங்கியவுடன் பேருந்து புகையை கக்கிவிட்டு அவ்விடத்தில் இருந்து மறைந்தது. ஆனால், அவளைப்பற்றிய எண்ணம் என் இதயத்திற்குள் இளம் செடி ஒன்றை வளர்ந்திருந்தது. அன்றில் இருந்து அவள் என்னை முழுமையாக ஆக்கிரமித்துக்கொண்டாள். அவளைப்பற்றிய எண்ணங்களே பெரும்பாலான நேரங்களில் எனக்குள் வந்துபோனது.
தூக்கம் மறந்தேன். உணவு மறந்தேன்.
என் தாயார் கூட 'என்னடா..எதையோ பறிகொடுத்தது போல இருக்கற..?' என்று கேட்டார். 'அது ஒண்ணுமில்லைம்மா. இன்டர்வியூக்கு படிக்கிறதால அப்படி இருக்கேன்மா' என்று சமாளித்தேன்.
காரண காரியமின்றி அடிக்கடி சத்திரம் பேருந்து நிலையம் சென்றேன். அடிக்கடி அங்கும் இங்கும் நோட்டமிடச் செய்தேன். ஆறு மாதங்கள் நான் வேலைதேடி நேர்காணலுக்குச் சென்ற போதெல்லாம் சத்திரம் பேருந்து நிலையத்தில் இறங்கி அவளை தேடாமல் சென்றதில்லை. அதிர்ஷ்டவசமாக அவள் என் கண்களில் பட்டுவிடமாட்டாளா என்று மனம் ஏங்கியது.
tamil love story
அன்றும் ஒரு இன்டர்வியூ பொன்மலையில் இருந்தது. ஏற்கனவே ரயில்வே வேலைக்குச் செல்லவேண்டும் என்ற ஆர்வத்தில் விண்ணப்பித்திருந்தேன். அந்த நேர்காணலுக்குச் சென்றுவிட்டு மகிழ்ச்சியோடு திரும்பினேன். ஆமாம், எனக்கு பொன்மலை ரயில்வேயில் வேலை கிடைத்திருந்தது. இந்த மகிழ்ச்சியோடு அவளை சந்தித்துவிடமாட்டோமா என்று மனதுக்குள் படபடப்பு ஏற்பட்டது.
ஒருவேளை எனக்கு ஏற்பட்ட இதே அனுபவம் அவளுக்கும் ஏற்பட்டிருக்குமா..? அவளும் என்னை நினைத்து தேடிக்கொண்டு இருப்பாளா..? அவள் எங்கு இருக்கிறாளோ? பைத்தியக்காரன்போல இப்படி தேடுகிறேன்? அவள் எந்த ஊர்? அவள் பெயர் என்ன? இப்படி எதுவும் தெரியாமல் எப்படித் தேடுவது? அன்று பேருந்தில் பார்த்தபோது பேர், ஊரையாவது கேட்டிருக்கலாமோ? என்று இப்போது எனக்குள் வருத்தம் ஏற்பட்டது.
இப்படி ஒரு கலவையான உள்ளுணர்வோடு கண்களை தூரத்திலும் அருகிலுமாக அவள் உருவத்தை உள் வாங்கி பார்வையை வீசித் தேடினேன். அப்படியான ஒரு தேடுதலோடு அருகில் நிமிர்ந்தபோது அவள் என் முன்னால் நின்றிருந்தாள். எனக்குள் உயிரின் ஜீவ நதிகள் எல்லாம் ஊற்றெடுத்தது போல உணர்ந்தேன். ஏதோ ஆகாயத்தில் பறப்பது போல இருந்தது. இன்னும் நம்ப முடியாமல் தவித்து நின்றேன்.
அவளும் அதேநிலையில்தான் இருந்திருப்பாள் போல. அவளும் என்னைப்பார்த்தவாறு ஆச்சர்யத்தில் திகைத்து நின்றிருந்தாள். அவள் கண்களில் லேசாக கண்ணீர் எட்டிப்பார்ப்பது எனக்குத் தெரிந்தது. என்னை அறியாமல் அவள் அருகே சென்று அந்த கண்ணீர் விழுவதற்குள் துடைத்துவிட்டேன். அவள் எந்த எதிர்ப்பையும் காட்டவில்லை. மாறாக என் கைகளை இறுகப்பற்றிக்கொண்டாள்.
அந்தப்பற்றுதலில் 'என்னைக் கைவிடமாட்டாயே' என்பதுபோல இருந்தது, அந்த தொடு உணர்வு. அந்த தொடுதலில் இருந்தே அவளும் என்னைப்போலவே என்னைத் தேடியிருப்பது தெரிந்தது. அவளுக்குள் நானும், எனக்குள் அவளும் இருப்பது இருவருக்கும் புரிந்ததால்.. எப்படி..? இப்படி..? ஒரு மாற்றம் என்று இருவரும் கண்களால் கேட்டுக்கொண்டோம். 'தெரியவில்லை' என்பதுபோல ஆனந்தக்கண்ணீரோடு அவள் புன்னகை ததும்ப தலையாட்டினாள். எனக்கும் புரியாத புதிராக நானும் தலையை ஆட்டி நின்றேன். விழிகள்தான் பேசிக்கொண்டனவே தவிர, வார்த்தைகளில் அல்ல.
'வேலை கிடைத்த இன்றே எனக்கு நீயும் கிடைத்தாய்' என்று வாய் திறந்து முதல் வார்த்தைப் பேசினேன்.
tamil love story
டெலிபதி என்பார்களே அதுபோல இருவருக்குள்ளும் ஒரே சிந்தனை, ஒரே எண்ணம், ஒரு அலைக்கற்றை இணைப்பை போல இருவரையும் பிணைத்து வைத்திருந்துள்ளது. ஒருவரை ஒருவர் காணாமல் இருவருமே தவித்துக் கிடந்துள்ளோம். எத்தனை நாட்கள்..நரக வேதனைகளாக கழிந்து சென்றன. அந்த வேதனைகள் எல்லாம் அடித்து நொறுக்கப்பட்டு துவம்சம் ஆகிவிட்டன, இந்த ஒரே நொடியில்.
5 ஆண்டுகளுக்குப் பின்...
நான் முகிலன், எனது மனைவி கார்குழலி. அட ஆமாங்க. பேருந்து நிலையத்தில் சந்தித்து ஒருவருக்கு ஒருவர் அறியாமலேயே காதல் ஏற்பட்ட வித்தியாச காதலர்கள். இப்போது நாங்கள் தம்பதிகள். இப்போ எங்களுக்கு 2 வயதில் ஒரு பெண்குழந்தை இருக்கிறாள். அவள் பெயர் 'நுவழினி'. எங்கள் காதலின் அடையாளமாக.
'நுவழ்' என்றால் முகில் என்பது பொருள். 'கார்' என்றால் மேகம் என பொருள்படும். முகிலன் என்ற என் பெயரும், கார்குழலி என்ற என் மனைவியின் பெயரையும் தாங்கி நிற்பதுதான் 'நுவழினி' ஓகேவா..ரீடர்ஸ்.
இந்த காதல் சிறுகதை உங்களை மகிழ்ச்சியடையச் செய்திருக்கும் என்று எண்ணுகிறேன். வாசித்தமைக்கு நன்றி.
Tags
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu