'கரையை உடைத்து கண்ணீர் நிரப்பிய கவலைகள்..!' நெஞ்சை உருக்கும் சிறுகதை..!

கரையை உடைத்து கண்ணீர் நிரப்பிய கவலைகள்..! நெஞ்சை உருக்கும் சிறுகதை..!
X

காய்கறி விற்பவர் -கோப்பு படம் 

நான் ஒண்ணும் வாக்குறுதி கொடுத்திட்டு மறந்திட்டு போற அரசியல்வாதி இல்லை' என்று சொன்னபோதே அவரது உயர்ந்த குணம் தெரிந்தது.

'கரையை உடைத்து கண்ணீர் நிரப்பிய கவலைகள்..!' (சிறுகதை)

-லதாமாதவன்

2வது மாடி குடியிருப்பு வீட்டில் நின்றுகொண்டிருந்த மாலாவைப் பார்த்து,

'அம்மா காய்கறி வாங்கலியா..? எல்லா காய்கறிகளிலும் எவ்ளோ எடை போடணும்னு சொல்லுங்க. நீங்க கீழ இறங்கி வர்றதுக்குள்ள எடை போட்டிடறேன். ஏம்மா எங்கிட்ட காய்கறி வாங்கி ரொம்ப நாளாச்சே..? வேற யாருக்கிட்டயும் காய்கறி வாங்கறீங்களா..?' என்று இடைவிடாமல் தள்ளுவண்டியில் காய்கறி விற்கும் காய்கறி வியாபாரி கேட்டார். அவருக்கு இருந்தால் ஒரு 45 வயது இருக்கலாம்.

இப்படி மாலாவிடம் உரிமையாக கேட்பதைப் பார்த்தாலே வழக்கமாக இந்த பகுதியில் காய்கறி விற்பவர் என்பது தெரிந்தது.

'அதெல்லாம் ஒண்ணும் இல்லண்ணா. நீங்க கொஞ்சம் அங்கேயே நில்லுங்க. நான் கீழே வர்றேன்.' என்று கூறிய மாலாவின் முகம் வாடி இருந்தது.

இரண்டாவது மாடியில் வாடகைக்கு குடியிருக்கும் மாலா கீழே இறங்கி வரும்வரை காய்கறி காரர் காத்து இருந்தார்.

காய்கறிகாரர் அருகே வந்த மாலா, 'அண்ணே..எங்க வீட்டுக்கு அருகே வரும்போது மணி அடிக்காதீங்க. எங்களுக்கு காய்கறிகள் தேவையில்லை.' என்று கவலை கலந்த குரலில் கூறினாள். மாலாவுக்கு 30 வயது இருக்கலாம். 10 வயதில் ஒரு ஆண், 8 வயதில் ஒரு பெண் என 2 குழந்தைகள் உள்ளனர்.

"என்னம்மா சொல்ற? காய்கறி தேவை இல்லையா..? காய்கறி சாப்பிடுவது உடம்புக்கு ஆரோக்கியம்மா. ஏன்மா வேறு யாராவது காய்கறி தர்றாங்களா? ' என்றார் காய்கறிகாரர் சாதாரணமாக.

'பரவாயில்லைம்மா..யாருகிட்ட வாங்கினால் என்ன? சரிம்மா நான் வர்றேன்' என்று புறப்படத் தயாரான காய்கறி காரரிடம்,

'இல்லண்ணா..உங்களைவிட்டா வேறு யார்ட்ட காய் வாங்கப்போறேன்...இப்போ கொஞ்சம் வீட்டில் சரியா இல்லண்ணா. வீட்டுக்காரருக்கு வேலை இல்லைண்ணா. வீட்டு வாடகை கொடுக்கிறதே பாடாக இருக்கு. பிள்ளைங்க படிக்கிறாங்க. அதனால செலவை குறைத்து குடும்பம் பண்ணவேண்டிய கட்டாயம். நீங்கள் மணி அடிக்கும்போது வீட்டில் பிள்ளைங்க என்னைய சங்கடமாக பார்க்கிறாங்க.

இருக்கற கொஞ்சம் காசில இன்னும் ஒரு பத்து நாளைக்கு சமாளிக்கலாம். அப்புறம் என்ன பண்றதுன்னு தெரியலை. அதுக்குள்ள என் வீட்டுக்காரருக்கு வேலை கிடைச்சுடும்னு நெனைக்கிறேன். அதுக்கு அப்புறமா காய்கறி வாங்கிக்கிறேன். அதுகூட உங்ககிட்டத்தான் வாங்குவேண்ணா' என்றாள், மாலா சங்கடமாக.

இதை சொல்லிவிட்டு திரும்பிச் செல்ல எத்தனித்தபோது,

'தங்கச்சி..கொஞ்சம் நில்லும்மா.. எத்தனை வருஷமா இந்த ஏரியாவுல காய்கறி வித்திட்டு இருக்கேன்மா. நீங்க நல்லா இருந்த காலத்துல எங்கிட்ட நிறைய காய்கறிகள், பழங்கள் வாங்கி இருக்கீங்க.. இப்போ உங்களுக்குன்னு ஒரு சின்ன பிரச்சனை வந்தா நான் கை விட்டுடுவேனாம்மா ? நான் காய்கறி மட்டும் விற்கிறவன் இல்லைம்மா. எனக்கும் ஒரு குடும்பம் இருக்கு. எனக்கும் குடும்ப கஷ்டம் தெரியும்மா.

நான் கஷ்டப்பட்டப்பதான் இந்த தள்ளுவண்டில காய்கறி விக்கத் தொடங்கினேன். இப்போ ஓரளவு சம்பாதிச்சும் இருக்கேன். அதுக்கு யார் காரணம்மா.நீங்கெல்லாம் தான். அப்படின்னா..நான் சம்பாதிச்சதுல உங்க பங்கும் இருக்குது. நான் ஒண்ணும் வாக்குறுதி கொடுத்திட்டு போற அரசியல்வாதி இல்லைம்மா. நீ எனக்கு தங்கச்சி உறவு. ஒரு ரெண்டு நிமிஷம் பொறு'

என்று கூறிய காய்கறிகாரர் அவசர அவசரமாக தக்காளி, உருளைக்கிழங்கு, வெங்காயம், சுரைக்காய், பூசணிக்காய், பாகற்காய் ஆகியவற்றை ஒரு பையில் போட்ட பிறகு, காய்கறிகாரர் அதில் கொத்தமல்லி, மிளகாய் ஆகியவற்றையும் வைத்தார்.

பின்னர் 'இந்தாம்மா..இதை எடுத்திட்டுப்போ..' என்று பையை நீட்டினார். மாலா ஆச்சரியப்பட்டாள்.

"அண்ணே காய்கறிகளை கடனாகத்தான் கொடுக்கிறீங்க. குறைந்தபட்சம் அதை எடையப் போட்டு விலையையும் சொல்லுங்கண்ணே உங்க கணக்கை எழுதி வச்சிக்கிறேன்' என்றாள் மாலா.

"என்னது...எடை போடறதா..? இது என்னம்மா கொடுமையா இருக்கு? எந்த மாமனாவது தன் மருமகள்ட்டயும் மருமகன்ட்டயும் பணத்தை எதிர்பார்ப்பானா..? என் மருமகள், மருமகன் ஆரோக்கியமா சாப்பிடணும் இல்லியா..? அதனால்தான்மா நான் அதை எடைபோடலை. நீ எனக்கு தங்கச்சி இல்லையா..? நான் உனக்கு ஒண்ணும் பெரிய உதவி செய்யலைம்மா. உங்க கிட்ட இருந்துதான் சம்பாதிச்சேன். அதை இப்போ திருப்பித் தாரேன்.' என்று கூறிவிட்டு மீண்டும் இரண்டு மாம்பழங்களை எடுத்து,

'இதை என் மருமகளுக்கும், மருமகனுக்கும் குடும்மா." என்று மாலாவிடம் நீட்டினார்.

'அப்புறம் நாளைக்கும் மணி அடிப்பேன்மா. தயங்காம வந்து வாங்கிக்கோ.' என்ற காய்கறிகாரரை கண்ணீரோடு பார்த்து நின்றாள், மாலா.

வறுமையின் இயலாமை மனதுக்குள் இருந்தபோதிலும் பாசத்தில் கண்ணீர் நிறைந்து கவலை கொஞ்சம் காணாமல் போயிருந்தது.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!