தீபாவளிக்கு..இதெல்லாம் நிச்சயம் பின்பற்றுங்க..!

தீபாவளிக்கு..இதெல்லாம் நிச்சயம் பின்பற்றுங்க..!
X

தீபாவளி கொண்டாட்டம்-கோப்பு படம் 

நாளை நாமெல்லாம் தீபாவளி கொண்டாடப்போறோம். பாதுகாப்புக்கு இதெல்லாம் பின்பற்றினால் மாசற்ற தீபாவளி கொண்டாடலாம்.

பொதுவாகவே அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்கள் மழையும் குளிரும் மாறி மாறி வரும் காலமாகும். குளிர்காலத்தில் காற்றின் தரம் குறைந்து காணப்படுவது வழக்கம். அதனால்தான் தீபாவளிக்கு பட்டாசு வெடிப்பதற்கு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் சில கட்டுப்பாடுகளை விதித்துளளது. தீபாவளி பண்டிகை காலத்தில் குளிர் மற்றும் மழை சேர்ந்து வருகிறது.

தீபாவளி என்றாலே புது துணி இருக்கிறதோ இல்லையோ பட்டாசு இருந்தால் போதும். பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை பட்டாசு வெடித்துத் தள்ள தயாராகிவிடுவார்கள். இதனால் காற்று மாசுபாடு சாதாரண நாட்களை விட அதிகமாக இருக்கும்.

ஏற்கனவே குளிர்காலத்தில் காற்றின் தரம் குறைந்து காணப்படும். இதில் பட்டாசுவெடித்து காற்று மாசாகி மிக மோசமாக இருக்கும். இந்தக் காலக்கட்டத்தில் மாசுபாட்டிலிருந்து நம்மைப் பாதுகாத்துக் கொள்ள சின்னச் சின்ன விஷயங்களை பின்பற்றினால் போதுமானது. அவைகள் என்னென்ன என்று பார்க்கலாம் வாங்க.

மாசுபாட்டிலிருந்து நம்மைப் பாதுகாத்துக் கொள்ள இதெல்லாம் செய்யணும் :

கண்ணாடி போட்டுக்கொள்ளலாம் :

காற்று மாசு (Air Pollution) முதலில் கண்களையும் தோலையும்தான் நேரடியாக பாதிக்கிறது. எனவே வெளியே செல்லும்போது கண்டிப்பாக கண்ணாடி அணியுங்கள். சன்கிளாஸ் போட்டுக்கொள்வது மிகவும் பாதுகாப்பானதாக இருக்கும்.

வாய் வழியாக காற்றை சுவாசிக்கக் கூடாது :

வெளியே செல்லும் போது தற்செயலாகக் கூட வாய் வழியாக சுவாசிக்க வேண்டாம். காற்றில் கலந்துள்ள மாசு எளிதாக வாய்வழியாக சுவாசப்பாதைக்குள் சென்றுவிடும். ஏனெனில் வாய்வழி சுவாசத்தின்போது காற்று எந்த வடிகட்டியும் இல்லாமல் நேரடியாக நுரையீரலுக்குள் செல்கிறது. இது உங்கள் ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல.

மாஸ்க் அணிந்துகொள்வது சிறப்பு :

நீங்கள் வெளியே செல்வதற்கு திட்டமிட்டால் அப்போது கண்டிப்பாக மாஸ்க் அணியுங்கள். ஒருமுறை மாஸ்க் அணிந்தால், அதை மீண்டும், மீண்டும் கைகளால் தொடுவதை கட்டாயம் தவிர்க்க வேண்டும். ஏனெனில் இதனால் தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். மீண்டும் பயன்படுத்தக் கூடிய மாஸ்காக இருந்தால், ஒவ்வொரு முறை வெளியே செல்லும் போதும் நன்றாக துவைத்து சுத்தம் செய்து அணியுங்கள்.

வீட்டை சுத்தமாக வையுங்கள்:

வெளியே போய்விட்டு வீட்டுக்குள் வரும்போது கால்களை சுத்தமாக கழுவிவிட்டு வீட்டுக்குள் வரவேண்டும். மேற்கண்ட அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் பின்பற்றுவதுடன் வீட்டையும் சுத்தமாக வைத்துக்கொள்ளுங்கள். ஏனெனில் குளிர்காலத்தில் இயற்கையாகவே காற்றில் தூசி அதிகமாக இருக்கும். அதனால் மாசுபட்ட தூசிகள் வீடுகளிலும் படியும். எனவே தீபாவளிக்கு முன்னதாகவே ஒரு முறையாவது வீட்டை சுத்தமாக துடைத்து அல்லது மாப் போட்டுவிடுங்கள்.

கதவுகளை மூடி வைக்கலாம் :

பட்டாசு என்னவோ வெளியில் வெடிப்போம். ஆனால் அதன் புகை என்னவோ வீட்டுக்குள்தான் பரவும். எனவே வெளியில் யாராவது பட்டாசு வெடித்தால் அல்லது நீங்கள் பட்டாசு வெடித்தால் வீட்டின் கதவுகள் மற்றும் ஜன்னல்களை மூடிவையுங்கள். நீங்களும் வீட்டிலேயே இருக்க முயற்சி செய்யுங்கள்.

வாசலை ஈரமாக வைத்திருங்கள்:

குறிப்பாக நகரங்களில் அல்லது சாலையை ஒட்டி உள்ள வீடுகளில் வசிக்கும் மக்களுக்கு அதிக மாசு ஏற்படுவதற்கான வாய்ப்புகளை அதிகம் உள்ளது. தூசிகள், பட்டாசு வெடித்தபின்னர் ஏற்படும் புகை மாசு, வாகங்களின் புகை போன்றவை வீட்டிற்குள் பரவும். வாகனங்கள் வேகமாக செல்லும்போது, புழுதி எழுந்து வீட்டிற்குள் நுழையம். வெளிப்புறத்தில் நீண்ட நேரத்திற்கு ஈரமாக இருந்தால் தூசி பரவுவது குறையும். அதனால் அவ்வப்போது சாலையில் தண்ணீர் தெளித்துவிடுங்கள்.அதன் மூலம் தூசி அல்லது மாசு பரவுவது குறையும்.

மழைக்காலம் என்பதால் மழை பெய்தால் இந்த சிக்கல்கள் குறையும்.

பாதுகாப்பாக தீபாவளி கொண்டாடுங்க. ஆடு, மாடு. நாய், பூனை, காக்கா, குருவி போன்ற இவங்கெல்லாம் நம்மள நம்பி வாழ்பவர்கள். அவைகளுக்கு எந்த அச்சமும் தீங்கும் ஏற்படாமல் பட்டாசு வெடித்து தீபாவளி கொண்டாடுங்க. அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துகள்.

Tags

Next Story