இருவிழிகள் எழுதும் ஒரு கவிதையே, காதல்..! தேன் சொட்டும் காதல் கவிதைகள்..!

X
Kathal Kavithaikal
By - K.Madhavan, Chief Editor |3 Nov 2022 2:36 PM IST
Kathal Kavithaikal-உருகித்தவிக்கும் உள்ளங்கள் உண்டெனில் அதுவே காதல்..! உள்ளங்கள் எழுதும் மௌன மொழிகளே கவிதை.
Kathal Kavithaikal
காதல், காலங்களுக்கு அப்பாற்பட்டது. மொழி, சாதி,மதங்கள் அறியாதது. காதல் சமரசம் பேசும் பொதுவுடமைக் கொள்கைக் கொண்டது. காதலின் பொது இலக்கணம் ஒரு ஆண்,ஒரு பெண். இந்த இரு இலக்கணங்கள் எழுதும் விரிவாக்கமே உயிர் உருவாக்கல் என்னும் மொழிக்கொள்கை.
- கொஞ்சம் விட்டு விட்டு தான் உன்னை நினைக்கிறேன்...உன்னை முழுவதும் விட்டு விடத் தான் நினைக்கிறேன். ஆனாலும் மரக்கிளையில் தொங்கும் குரங்குபோல விடாமல் துரத்துகிறது, உன் அழகான நினைவுகள்..!
- மை தீட்டி வந்தவளே..என்னை மதி மயங்க வைத்தவளே.. என் மனதைக் கொள்ளையடித்துச் சென்றவளே...! உன் மாய விழிக்குள் என்னை வீழ்த்தியவளே..! வானவில் உன்றன் புருவமானதோ..?! திருத்தேர் உன்றன் உருவமானதோ..?!
- என் இளமை தொலைந்து போனதடி...! உன் அழகினை பார்த்தே..உன் காதலை சொல்வாய் என்று காத்திருந்த காலங்களில் என்னை ஏமாற்றிச் சென்றுவிட்டாய்..! நான் தொலைத்த இளமை மீண்டு வருமா..?
- இரவில் உதிக்கும் சூரிய நீ.. என் இதயத்தேடலின் நிச பொக்கிஷம் நீ..! என் இதய வானின் ஒற்றை நிலவும் நீ..! வரையாத உயிரோவியம்..! என் இதயக்கோவிலின் திருவிளக்கு..! என் வெளிச்சமற்ற வீதிகளின் ஒளிவிளக்கு ..என் மூச்சுள்ளவரை உன் தோள்களில் நான் தூங்க வேண்டும்..!

- நீ நடந்த பாதைகளில்தான் நானும் நடக்கிறேன்.. ஏன் என் பாதச் சுவடுகள் உன் விழிகளுக்கு எட்டவில்லை..என் நடையின் ஓசைகள் உன் செவிகளைத் தீண்டவில்லை..? பரவாயில்லை..உன் பாதச் சுவடுகளிலாவது நான் கடந்து செல்கிறேன்..நீ என் காதலுக்கு முற்றுப்புள்ளி வைத்தாலும்..!
- உன் முந்தானை எனக்கொரு தூளி..அதைக் காற்றில் அசையவிடு..என் உள்ளம் அதில்தான் ஊஞ்சலாடுகிறது..! வார்ததைகள் இல்லாத கவிதைகள் எழுதமுடியும் என்று எனக்கு மெய்ப்பித்த பொய்யாப்புலவரும் நீயே..!
- துணிக்கடை பொம்மை அருகில் நீ நின்றதால் உன்னையும் பொம்மை என்று எண்ணிவிட்டேன்..உன் சிமிட்டல்கள் தான் நீ உயிரோவியம் என்று எனக்கு கட்டியம் கூறின..! நீ கண்சிமிட்டிய அந்த நொடிகளில் என் இதயம் சற்றே நின்று இயங்கியது..!
- உன் நிழலைக் கூட வேறு எவரும் தொடக்கூடாது என்று எண்ணும் என் பைத்தியக்காரத்தனத்துக்கு நீ வைத்த பெயர் கோமாளி..! எனினும் என் அன்புக்கு முன்னே உன் வார்த்தைகள் சுக்குநூறாகின, இன்னும் நான் மர்மச் சிரிப்பில் மௌனமாக நிற்கிறேன்..என் மீதான உன் ஆச்சரியப் பார்வையை நீ இன்னும் விலக்கவில்லை..!
- தூக்கத்திற்கும் விழித்தலுக்குமான எல்லா நொடிகளிலும் வேறு சிந்தனையற்று திரிகிறேனடா..உன் நினைவுகள் என்னைக்கொல்வதால்..! பின் எங்கனம் தூங்குவேன்..? என் விழிகளை ஆக்ரமித்திருப்பவன் நீ மட்டுமே..! நான் உறங்கிவிட்டால் உன் நினைவுகளும் உறங்கிவிடுமோ என்று அஞ்சுகிறேனடா..!
- உனக்கான இதயமிது என்று எனக்குள் உரக்கச் சொல்லிக்கொண்டாலும் என் இதயம் கேட்க மறுக்கிறது..உன்னை நேரில் பார்த்தே ஆகவேண்டும் என்று..! எப்போதடா உன் திருமுகத் தரிசனம் கிடைக்கும்..?!
- நீ நான் என்ற எல்லைகளை என் காதல் கடந்துவிட்டது..ஆமாம் நாம் என்ற ஒற்றைச் சொல் மந்திரமே எனக்குள் ஒலிக்கிறது..! சிவா-சக்தியாய் நீயும் நானும்..!

- நினைவுகளில் உன்னைச் சுமக்கிறேன்..ஆனாலும் எனக்கு பாரமில்லை..! எத்தனையோ கனவுகள் காண்கிறேன்..என் கண்களும் ஓயவில்லை..! ஆனாலும் என் விழிகளுக்கு வேதனையில்லை..! நீ இல்லாத நேரங்கள் மட்டுமே எனக்கு பெரும் சுமையாக இருக்கிறது..! உறக்கத்திலும் உன்னையே சுமக்கும் எனக்கு நிசத்தில் சுமப்பதா கடினம்..! வாழ்க்கை முழுவதும் என் தோள்கள் காத்திருக்கின்றன உன் உன்னை சுகமாக சுமப்பதற்கு..!
- அன்று உன்னை மீண்டும் மீண்டும் பார்க்க வேண்டும் என்று என் தூக்க நாட்களை தொலைத்தேன்..! இன்று உன் நினைவுகளுடன் என் துக்கத்தை மட்டுமே தொலைக்க முற்படுகிறேன்..!
- வசந்த காலத்து மலராக நீ உதித்தாய்..உன்னோடு சரசமிட வண்டினமாய் பறந்து நான் வருகிறேன்..உனக்குள் நான் தேன் குடிக்க..! எனக்காக பூத்த மலரே..செந்தமிழில் கவிதை பாடி செந்தேன் குடிக்க வருகிறேன் காத்திரு..எனக்காக பூத்திரு..!
- நீ நிலவு என்று சொல்ல நீ அஞ்சுகிறேன்..ஒருநாள் என்னை பார்க்காமல் இருப்பாயே என்று..! நட்சத்திரம் என்று சொல்லவும் நான் அஞ்சுகிறேன் நீ மின்னி மறைவாயே என்று..! நீ சூரியன் என்று சொல்லவும் பயப்படுகிறேன்..நீ எறிந்துவிடுவாய் என்று..! நீ மலை என்று கூறவும் துணிவில்லை..நீ கல்லாக நின்றுவிடுவாய் என்று..! நீ கடல் என்று சொல்லவும் விரும்பவில்லை..நீ அலைகளாக ஆர்ப்பரிப்பாய் என்று..! பின் எப்படித்தான் சொல்வதுன்னை என்று என் மனம் என்னிடமே கேட்கிறது..! என்னவளே நீ நீயாக இருந்தால் மட்டுமே போதும் என்பேன்..!

- உண்மை நேசங்களை இழந்துவிட்டு பின்னர் கண்ணீரில் மிதக்காதே..அந்த கண்ணீருக்கும் அர்த்தமில்லாமல் போய்விடும்..! எத்தனை இதயங்கள் உன்னை நேசித்தாலும். அந்த ஒரு உண்மை இதயம் போல் ஆகாது...!
- உன்னை சிறைப் பிடிக்க நினைத்து காதலெனும் வலைகொண்டு தேடித்திருந்தேன்..ஆனாலும் வலைக்குள் சிக்கிக்கொண்டது நான்..உனக்கு ஆயுள் நான் கைதி ஆனேன்..!
- உன் காதல் மதுவின் மயக்கத்தில் வார்த்தைகளைக் கொட்டி உளறுகிறேன்...! அதுதான் கவிதையாம்..!போடுங்கள் ஒரு புத்தகம் என்கிறார்கள் என் உளரலைக் கேட்டவர்கள்..!
- நான் தேடும் முகவரி உன் இதயம் மட்டுமே. ஆனால் உன் இதயத்து முகவரியை வேறு ஒருவருக்கு மாற்றிக் கொடுத்துவிட்டாய் என்பதை எனக்குத் தெரியப்படுத்தவில்லை..ஒருதலையாக உன் இதய முகவரியை நானே எடுத்துக்கொண்டு வலிகளை மட்டுமே சுமந்து திரிகிறேன்..!

- உன் விழிகளின் வெளிச்சங்கள் கூட என் இ(தி)ருட்டு பார்வைக்கு வழிகாட்டுகின்றன..! நீ பேசாத மௌன வார்த்தைகள் கூட என் செவிகள் கேட்டதாக உணர்கின்றன..காற்றில் கரைந்த மொழியாக..! உன் உதடுகள் அசைவுகளில் நான் எழுதும் கவிதைகள் மழைத்துளிகளாக தெறித்து வீழ்கின்றன, முத்துக்களாக..! உனக்காக மட்டுமே துடிக்கும் இந்த இதயம்..!
- இருவருக்கான புரிதல் என்பது புதிர் அல்ல..! புதிரான வாழ்க்கையைக் கூட புரிதலோடு வாழ்வதே காதல்..முள்ளான பாதைகள்கூட எம் நடைபார்த்து மலராக தடம் மாறும்..உண்மைக் காதலிருப்பின்..!
- தமிழ்மொழியினும் மூத்த மொழி ஒன்றுண்டு..அது காதல் மொழி..! ஆமாம்.. மொழி தோன்றா காலத்திற்கு முன்னும் காதல் இருந்ததை மறுக்கவும் முடியுமோ..விழிகள் பேசும் காதல்மொழிகள் காதலர்களுக்கு மட்டுமே புரியும் முதல்மொழி..!
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2
Next Story
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu