அற்புத மூலிகை வெந்தயம். என்னென்ன நன்மைகள் தெரியுமா?
வெந்தயம் - கோப்புப்படம்
சமையலில் சேர்க்கப்படும் ஓர் பொருள் தான் வெந்தயம். இந்த வெந்தயம் ஆயுர்வேதத்தில் பாரம்பரிய மருத்துவ பொருளாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இது உடல் வெப்பத்தைக் குறைக்க உதவும் என்பது அனைவரும் அறிந்த ஒன்றே.
அத்தகைய வெந்தயத்தை முளைக்கட்ட வைத்து சாப்பிட்டால் இன்னும் ஏராளமான நன்மைகள் கிடைக்கும் என்பது உண்மை. முக்கியமாக இது சர்க்கரை நோய், உடல் பருமன், இதய பிரச்சனைகள், மாதவிடாய் பிரச்சனைகள் போன்றவற்றில் இருந்து தீர்வு கிடைக்க உதவும்.
வெந்தயத்தை முளைக்கட்டி வைத்து சாப்பிடுவதால் கிடைக்க பெறும் நன்மைகள் குறித்து பார்ப்போம்.
சத்துக்கள் : வெந்தயத்தை எந்த வடிவத்தில் எடுத்தாலும், அதனால் ஏராளமான நன்மைகள் கிடைக்கும். ஏனெனில் வெந்தயத்தில் வைட்டமின் சி, புரோட்டீன்கள், நார்ச்சத்து, நியாசின், பொட்டாசியம், இரும்புச்சத்து மற்றும் அல்கலாய்டுகள் போன்றவை ஏராளமாக உள்ளது. மேலும் இதில் டையோஸ்ஜெனின் என்னும் சேர்மம் உள்ளது.
சர்க்கரை நோய்: சர்க்கரை நோய் உள்ளவர்கள், வெந்தயத்தை அப்படியே சாப்பிடுவதற்கு பதிலாக முளைக்கட்ட வைத்து சாப்பிட்டால், உடலில் இரத்த சர்க்கரை அளவை சீராக பராமரிக்கலாம். மேலும் இதுக் குறித்து டைப்-2 நீரிழிவு நோயாளிக்கு 24 வாரங்கள் தினமும் முளைக்கட்டிய வெந்தயம் கொடுக்கப்பட்டு வந்ததில், அந்நோயாளியின் இரத்த சர்க்கரை அளவு குறைந்திருப்பது தெரியவந்தது.
எடை குறைய: தினமும் முளைக்கட்டிய வெந்தயம் உட்கொண்டு வந்தால், உடல் எடையை குறைக்கலாம். இதற்கு வெந்தயத்தில் உள்ள காலக்டோமானன் என்னும் உட்பொருள் தான் காரணம். இது தான் நீண்ட நேரம் பசி எடுக்காமல் இருக்கச் செய்கிறது. வெந்தயத்தில் 75% கரையக்கூடிய நார்ச்சத்துள்ளது. இது வயிற்றை வேகமாக நிரப்பி, எடையைக் குறைக்க நினைப்போருக்கு நல்ல தீர்வைத் தருகிறது.
இதய ஆரோக்கியம்: முளைக்கட்டிய வெந்தயத்தை கொலஸ்ட்ரால் பிரச்சனை உள்ளவர்கள் உட்கொண்டு வந்தால், உடலில் உள்ள அதிகப்படியான கொலஸ்ட்ரால் குறைவதோடு, இதய பிரச்சனைகள் வரும் அபாயமும் குறையும்.
ஆன்டி-வைரஸ்: முளைக்கட்டிய வெந்தயத்தில் ஆன்டி-வைரல் பண்புகள் அதிகம் உள்ளது. இதனால் இதனை தினமும் சிறிது உட்கொண்டு வருபவர்களுக்கு, சளி, இருமல், தொண்டை பிரச்சனைகள் போன்றவை வராமல் இருக்கும்.
ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள்: முளைக்கட்டிய வெந்தயத்தில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் ஏராளமாக உள்ளது. இதனால் ப்ரீ-ராடிக்கல்களால் உடலில் உள்ள செல்கள் பாதிக்கப்படுவது தடுக்கப்பட்டு, குறிப்பிட்ட புற்றுநோய்கள் வருவது தடுக்கப்படும்.
செரிமானம்: நம் முன்னோர்கள், தங்களுக்கு ஏதேனும் செரிமான பிரச்சனைகளான வாய்வுத் தொல்லை, வயிற்று உப்புசம், வயிற்றுப் போக்கு போன்றவற்றிற்கு வெந்தயத்தை முளைக்கட்ட வைத்து சாப்பிடுவார்கள். வேண்டுமானால் முயற்சித்துப் பாருங்கள்.
மாதவிடாய் பிரச்சனைகள்: 40 வயதை எட்டிய பெண்களுக்கு இறுதி மாதவிடாய் நெருங்கிக் கொண்டிருக்கும். அந்நேரத்தில் அவர்கள் மிகுந்த அசௌகரியத்தை உணர்வதோடு, மனநிலையில் ஏற்ற இறக்கம், ஒருவித வெப்ப உணர்வு போன்றவற்றை சந்திப்பார்கள். ஆனால் முளைக்கட்டிய வெந்தயத்தை தினமும் பெண்கள் உட்கொண்டு வந்தால், இப்பிரச்சனைகளால் அவஸ்தைப்படுவதைத் தடுக்கலாம்.
பிரசவம்: பெண்கள் வெந்தயத்தை முளைக்கட்ட வைத்து தினமும் சிறிது உட்கொண்டு வந்தால், பிரசவம் எளிமையாக நடைபெறும். ஆனால் கர்ப்பகாலத்தில் இதனை அளவுக்கு அதிகமாக உட்கொண்டால் பிரச்சனையைத் தான் சந்திக்க வேண்டி வரும்.
தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள்: வெந்தயத்தில் கேலக்டோகோக் என்னும் தாய்ப்பால் உற்பத்தியை அதிகரிக்கும் உட்பொருள் உள்ளது. எனவே பிரசவம் முடிந்த பெண்கள் முளைக்கட்டிய வெந்தயத்தை உட்கொண்டால், தாய்ப்பால் சுரப்பு அதிகரிக்கும்.
வெந்தயத்தை ஒருவர் எந்த வடிவில் உட்கொண்டு வந்தாலும், அவரது பாலுணர்ச்சி அதிகரிக்கம், உடல் திறனை அதிகரிக்கும் என ஆயுர்வேத மருத்துவத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் ஆய்வுகளும் இதனை நிரூபிக்கின்றன.
இப்போது வெந்தயத்தை முளைக்கட்டி வைத்து சாப்பிடுவதால் கிடைக்க பெறும் நன்மைகள் குறித்து புரிந்து கொண்டு, வெந்தயத்தை முளைக்கட்டி வைத்து சாப்பிட்டு பலன் பெறுங்கள்..! மேலும் சிகிச்சை பெற உங்கள் அருகில் உள்ள சித்த மருத்துவர்களின் ஆலோசனையை நாடுங்கள்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu