வேற லெவல் குருமான்னு நீங்களே அசந்துபோகும் வெஜ் குருமா..! அசத்துவோம் வாங்க..!

Chapati Kurma Seivathu Eppadi
X

Chapati Kurma Seivathu Eppadi

Chapati Kurma Seivathu Eppadi-குருமான்னா சப்பாத்திக்கு மட்டும்தான் சாப்பிடணுமா? அப்படி என்ன ஒரு கண்டிஷன்? நாம் இட்லிக்கும் தோசைக்கும் சாப்பிடுவோம். அவ்வளவு சுவை..!

Chapati Kurma Seivathu Eppadi-ஹோட்டல் என்னங்க பெரிய ஹோட்டல், நம்ம வீட்டிலேயே சூப்பரா, டேஸ்ட்டா சப்பாத்திக்கு வெஜிடபிள் குருமா வைக்கலாம். அது என்னங்க ஹோட்டல் டேஸ்ட்..? நம்ம வீட்டு டேஸ்ட்டுக்கு பக்கத்தில வரமுடியாதுன்னு நீங்களே சொல்லுவீங்க. எல்லாமே செய்முறைதான் காரணம்ங்க.

இன்னிக்கு நாம் செய்யப்போற வெஜ். குருமா சப்பாத்திக்கு மட்டும் இல்லீங்க. இட்லி, தோசை, ஆப்பம், இடியாப்பம் என்று எந்த உணவுக்கும் சூப்பர் காம்பினேஷன். நம்ம குழந்தைங்க தேடி வந்து சாப்பிடுவாங்க. எல்லோருக்கும்பிடித்தமான குருமாவாக இது இருக்கும். வாங்க செய்து அசத்துவோம்.

தேவையான பொருட்கள் :

பெரிய சைஸ் கேரட் -1

பச்சைப்பட்டாணி - 1 டம்ளர்

உருளைக்கிழங்கு - 1

பீன்ஸ் -5

காளிஃபிளவர் - 1 டம்ளர் ( காய்கறிகளை பொடியாக நறுக்கிக் கொள்ளவேண்டும்)

கசகசா - 1 டீஸ்பூன்

தேங்காய்த்துருவல் -1 டம்ளர்

முந்திரி -10

கடலை எண்ணெய் -தாளிப்புக்கு தேவையான அளவு

பட்டை,சோம்பு,பிரியாணி இலை, லவங்கம் (இவை எல்லாம் தேவைக்கு ஏற்ப )

பச்சை மிளகாய் -3 (கீறியது)

பெரிய வெங்காயம் -2 (பொடியாக நறுக்கியது)

தக்காளி -2 (பொடியாக நறுக்கியது)

இஞ்சி, பூண்டு பேஸ்ட் -1 டீஸ்பூன்

மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்

தனியா தூள் - 1 டீஸ்பூன்

கரம் மசாலா - அரை டீஸ்பூன்

மஞ்சள் தூள் - அரை டீஸ்பூன்

உப்பு - தேவையான அளவு

காய்ச்சிய பால்- 1 டம்ளர்

செய்முறை

1. முதல்ல ஒரு சிறிய பாத்திரத்தில் 1 ஸ்பூன் அளவு, கசகசாவை போட்டு, 1/4 கப் தண்ணீர் ஊற்றி, 30 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.

2. பின்னர் மிக்ஸி ஜாரில் தேங்காய்த்துருவலைப்போட்டு, அதனுடன் முந்திரி, ஊறவைத்த கசகசா இந்த மூன்று பொருட்களையும் ஒன்றாக சேர்த்து மைய அரைத்து விழுதாக எடுத்துக் கொள்ள வேண்டும்.

3. அப்புறமா பொடியாக நறுக்கிய கேரட், பச்சை பட்டாணி,உருளைக்கிழங்கு, பீன்ஸ், காலிபிளவர் போன்ற காய்கறிகள் அனைத்தையும் குக்கரில் போட்டு ஒரு விசில் விட்டு வைத்து வேக வைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். காய்கறி வேகவைத்த தண்ணீரை குருமாவுக்கு தண்ணீர் சேர்க்கும்போது ஊற்றிக்கொள்ளலாம்.அதனால் காய்கறி வேகவைத்த தண்ணீரை கீழே ஊற்றக்கூடாது. அவ்வளவும் சத்து என்பதை அறிக.

4. இப்போது அடுப்பில் ஒரு கடாயை வைத்து, 2 டீஸ்பூன் அளவு கடலை எண்ணெய் ஊற்றி (ஒரிஜினல் கடலை எண்ணெய் குருமாவுக்கு சுவை சேர்க்கும்), எண்ணெயில் சோம்பு, பட்டை, லவங்கம், பிரியாணி இலை, கருவேப்பிலை, போன்றவைகளைப் போட்டு தாளிக்க வேண்டும். அடுத்ததாக, பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயத்தை நன்றாக சிவக்க வதக்கவேண்டும். வெங்காயம் சிவந்த நிறமாக வதங்கியவுடன், கீறிய பச்சை மிளகாயையும் போட வேண்டும். அடுத்ததாக பொடியாக நறுக்கிய தக்காளியையும் சேர்த்து வதக்க வேண்டும். எல்லா கலவையும் சேர்ந்து பேஸ்ட் போல வரும்.

அப்போது , இஞ்சி பூண்டு பேஸ்ட், மிளகாய்தூள், தனியா தூள், கரம் மசாலா, மஞ்சள்தூள் ஆகிய பொருட்களை எல்லாம் ஒன்றாக சேர்த்து, நன்றாக வதக்கவேண்டும். கூடவே தேவையான அளவு உப்பு சேர்த்து, வேக வைத்து தனியாக எடுத்து வைத்துள்ள காய்கறிகளை இதில் கொட்டி, அரைத்து வைத்திருக்கும் தேங்காய், கசகசா விழுதையும் சேர்த்து 5 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க விட வேண்டும். இப்போது கெட்டியான பதத்தில் இருந்தால், காய்கறி வேகவைத்த தண்ணீரை தேவையான அளவுக்கு ஊற்றிக்கொள்ளலாம்.

குருமா, பாய்ந்து ஓடும் தண்ணீர் போல இருந்துவிடக்கூடாது. கிரேவி பதத்தில் இருக்க வேண்டும். கடைசியாக வெஜ் குருமாவை அடுப்பில் இருந்து இறக்குவதற்கு முன்பு, எடுத்து வைத்துள்ள காய்ச்சிய பாலை, குருமாவில் சேர்த்து, இரண்டிலிருந்து மூன்று நிமிடங்கள் மிதமான தீயில் கொதிக்க வைத்து இறக்கவேண்டும். இறக்கிய பின்னர் கொத்தமல்லி தழையை தூவி, பரிமாறினால் சுவையான, சூப்பரான வெஜிடபிள் குருமா தயார்.

செய்து பாருங்க ஹோட்டல் சுவையை விஞ்சும். நிஜமாவே பக்கத்து வீட்டு நித்யா அக்கா ஓடி வருவாங்க. 'என்னடி சாரு..செய்த? வாசனைத் தூக்கறதே' என்று கேட்பாங்க. அவங்களுக்கும் சொல்லிக்கொடுத்து அசத்துங்க, சும்மா அல்ட்ரா மாடர்ன் செஃப் கணக்கா..!!


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2


Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!