வாழவைக்கும் வைட்டமின்கள்..!
வைட்டமின்கள் நிறைந்த உணவுகள் (கோப்பு படம்)
வைட்டமின்கள் நிறைந்த உணவை சரியாக எடுத்துக் கொள்ளாவிட்டால் உடல் வளர்ச்சியில் பாதிப்பு ஏற்படும். நோய்களும் சொல்லாமல் கொள்ளாமல் வந்து ஒட்டிக் கொள்ளும். அதனால், என்ன வைட்டமின் குறைந்தால் என்ன நோய்வரும், எவற்றில் அந்த வைட்ட மின்கள் உள்ளன என்பது பற்றி பார்ப்போம் :
வைட்டமின் ஏ’ : இது குறைந்தால் கண் பார்வை மங்கும். நோய் எதிர்ப்பு சக்தி குறையும். கருப்பையில் கரு வளர்வதற்கும், பிறந்த குழந்தை ஆரோக்கியமாக வளரவும் இந்த வைட்டமின் தேவை. எலும்புகளும் பற்களும் வளர இதுதான் முக்கியக் காரணம்.
முருங்கைக் கீரை, பச்சைக் காய்கறிகள், வெண்ணெய், முட்டையின் மஞ்சள் கரு, ஈரல், மீன் எண்ணெய் ஆகியவற்றில் வைட்டமின் ஏ’ அதிகம் காணப்படுகிறது.
வைட்டமின் பி’ : இது குறைந்தால் வயிற்று மந்தமும், அஜீரணமும், ரத்த சோகையும் ஏற்படலாம். பக்கவாதம், இதய பாதிப்பு ஏற்படவும் சாத்தியக் கூறுகள் அதிகம். அத்துடன், வாயில் புண் உண்டாகும். கைக்குத்தல் அரிசி, இறைச்சி, முட்டை, காய்கறிகள் ஆகியவற்றில் இந்த வைட்டமின் அதிகம் உள்ளது.
வைட்டமின் சி: இது குறைந்தவர்கள் மன அமைதி இழப்பர். மேலும், தோற்றத்தில் சிடுமூஞ்சியாக காணப்படுவர். எலும்புகள் பலம் குறையக்கூடும். பல் ஈறு வீங்கி பற்கள் ஆட்டம் காணலாம். பல் ஈறுகளில் இரத்தம் கசியும். தோலில் இரத்தப் போக்கு ஏற்படும்.
ஆரஞ்சுப்பழம், திராட்சை, சமைக்காத பச்சைக் காய்கறிகள், நெல்லிக்காய், எலுமிச்சை, தக்காளி, கொய்யா, உருளை, வெற்றிலை, பப்பாளி ஆகியவற்றில் வைட்டமின் சி அதிகம் உள்ளது.
வைட்டமின் டி’ : வைட்டமின் டி’ இல்லாவிட்டால் எலும்புகள் வலுவிழந்து விடும். பற்கள் கெடக்கூடும். வைட்டமின் டி’ போதிய அளவு இல்லாத குழந்தைகளின் கால்கள் வில் போல் வளைந்துவிடும். வயிறு ஊதும்.
போதுமான சூரிய வெளிச்சம் குழந்தைக்குக் கிடைத்தால் அதன் உடலே வைட்டமின் டி’யை தயாரித்துக்கொள்ளும். முட்டை, மீன், வெண்ணெய் ஆகியவற்றிலும் வைட்டமின் டி’ அதிகம் உள்ளது.
வைட்டமின் ஈ’ : இது குறைந்தால் தசைகள் பலவீனமடையும். மலட்டுத்தன்மையையும் உண்டாக்கும். கோதுமை, கீரை, பச்சைக் காய்கறிகளை அதிகம் சேர்த்தால் வைட்டமின் `ஈ’ சமச்சீர் விகிதத்தில் கிடைக்கும்.
அனைத்து வைட்டமின்களும் நம் உடல் ஆரோக்கியத்திற்கு தேவை எனவே, ஆரோக்கியமான உணவை உண்டு பழகுங்கள். ஆரோக்ய வாழ்வுக்கு பாரம்பரிய உணவு முறை அவசியம் என்பதை அனைவருக்கும் தெரியப்படுத்தி ஆரோக்ய பாரதத்தை உருவாக்குவோம்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu