'பூவரசு' மரமல்ல அது மருந்தகம்..! இயற்கை தந்த வரம்..!

பூவரசு மரமல்ல அது மருந்தகம்..! இயற்கை தந்த வரம்..!
X
பூவரசு மரங்கள் வயல்வெளிகளில் நடப்பட்டிருக்கும். இது சில்லென்ற காற்று கொடுப்பதுடன் இதன் தழைகளை வெட்டி வயலுக்கு உரமாக்கினார்கள்.

பூவரசம் மரம்

சிறுவயதில் பூவரசு இலைகளை இரண்டாக கிழித்து அதை சுருட்டி 'பீப்பீ' ஊதிய அனுபவம் நமக்கு இருக்கிறது. அதனால் அந்த மரத்தை 'பீப்பீ மரம்' என்றே சிறுவயதில் அழைத்ததும் உண்டு.

பூவரசு மரத்தின் அனைத்து பாகங்களும் மருத்துவ குணம் கொண்டவை.இலைகள், பூக்கள், காய்கள் என அனைத்தும் மருத்துவ குணம் உள்ளவை. மஞ்சள் நிற பூவரசம் பூக்கள் அரிய மருத்துவ குணங்களை கொண்டவை. ரோசாப்பூவை சாப்பிடுவது போல . இந்த பூக்களை சும்மாவே சாப்பிடலாம்.

"பூவுக்கெல்லாம் அரசன்" என்ற பெயருக்கு ஏற்ப நோய் தீர்ப்பதிலும் இந்த அரசன் கெட்டிக்காரன்தான். நோய்களைத் தீர்க்கும் மாமருந்தாக இருப்பதால் இதன் பெயர் "பூ"அரசு அதாவது பூவரசு என்று அழைக்கப்படுகிறது.

கிராமங்களில் வீடுகளின் முற்றத்திலும், தோட்டங்களிலும் கொல்லைப்புறங்களிலும் பூவரசு மரம் இன்றும் சாதாரணமாக இருப்பதை காணமுடியும். பூவரச மரம் மருத்துவப் பயன் கொண்ட மரமாகும். நூறாண்டுகள் கடந்தும் உயிர்வாழும் மரங்களில் மரங்களுள் பூவரசும் ஒன்னுங்க.

நூறாண்டுகள் கடந்து வாழும் பூவரச மரத்தின் வேர் நாட்பட்ட பெருநோய்களை தீர்க்கும் சக்தியுடையது. அதன் பழுப்பிலை, பூ, விதை, காய், பட்டை முதலியவை பழுத்த புண், கணாக்கடி குத்தல், விட்பாகம், பெருவயிறு, வீக்கம், கரப்பான், சிரங்கு, வெள்ளைப்படுதல் போன்றவைகளைப் குணப்படுத்தும் தன்மை கொண்டது.


கல்லீரல் பலமாக

உடற்செயல்பாட்டுக்கு குளுக்கோஸ் மாதிரி இருப்பது கல்லீரல்தான். நமது உடலில் கல்லீரல் பாதிக்கப்பட்டால் உடலில் பல்வேறு பிரச்னைகள் ஏற்படும். அதனால் கல்லீரல் பாதுகாப்பாக இருக்கவேண்டும். கல்லீரல் பலவீனம் ஆகும்போதுதான் மஞ்சள் காமாலை ஏற்படுகிறது.

பூவரசு மரத்தின் பழுத்த இலையில் இரும்புச் சத்து நிறைந்து காணப்படுகிறது. அந்த பழுத்த இலைகளுடன்1ஸ்பூன் சீரகம் சேர்த்து அரைத்துக் குடித்தால் மஞ்சள் காமாலை நோய் குறையும்.

கல்லீரல் பலப்பட இதைச் செய்யலாம்

பழுத்த பூவரசு இலை - 2

பழுத்த பூவரசன் காய் - 4

சீரகம் - 2 ஸ்பூன்

சோம்பு - 1 ஸ்பூன்,

சின்ன வெங்காயம்-4

பூவரசம் பட்டை - 1 துண்டு

கீழாநெல்லி - 1கைப்பிடி

சிறுநெருஞ்சில் - 5 கிராம்

மேற்சொல்லப்பட்டுள்ள பொருட்களை ஒன்றாகச் சேர்த்து இடித்து, 3கப்'தண்ணீர் விட்டு நன்றாக கொதிக்க வைக்கவேண்டும். அந்த 3 கப் தண்ணீர் சுண்டி அரை கப் அளவுக்கு வரும்வரை காய்ச்சி அதை குடித்து வரலாம். அப்படிச் செய்வதால் கல்லீரல் பலப்படும். கை, கால்களில் ஏற்படும் நடுக்கம் காணாமல் போகும். மஞ்சள் காமாலையை பக்கத்தில் அண்டவிடாது.


காணாக்கடி

பூவரசம் பட்டையை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி நீரில் போட்டு கொதிக்க வைத்து மூன்றில் ஒரு பங்காக வற்றியதும் வடிகட்டிக் குடித்தால் வயிறு சுத்தமாகும். இதனால் காணாக்கடி, நஞ்சு, பெருவயிறு, வீக்கம் போன்றவை குணமாகும்.

முதிர்ந்த பட்டையை அரைத்து அல்லது தேங்காய் எண்ணெயில் போட்டு கொதிக்க வைத்து உதட்டில் ஏற்படும் வெண்புள்ளியின் மீது பூசிவர வெண்புள்ளிகள் மறையும். வைட்டமின் குறைபாட்டால் வரும் குறைபாட்டுக்கு பூவரசம் பட்டை சிறப்பானதாகும்.

பூவரசங்காயை இடித்து சாறு பிழியும்போது வரும் மஞ்சள் நிற சாற்றினை முகத்திலுள்ள கறுப்புத் திட்டுகள், தாலிக்கயிறு அல்லது கழுத்து சங்கிலி உராய்வதால் தோலில் ஏற்படும் கருப்பு பகுதிகளில் தடவி வந்தால் அந்த கருமை நிறம் மாறிவிடும்.

பூவரசு இலையை அரைத்து லேசாக சூடுபடுத்தி அந்த பச்சை பசையை பத்துபோல வீக்கங்களின்மீது பூசியோ அல்லது கட்டியோ வைத்தால் வீக்கம் குறையும். பூவரசு இலைகள் சருகாகிப்போனவுடன் அவைகளைத் தீயில் எரித்து அந்த சாம்பலை தோல் நோய்களுக்குப் பூசினால் தோல் அரிப்பு, நமைச்சல் போன்றவை குணமாகும்.

விஷக் கடிக்கு:

பூவரசு இலைகள் விஷத்தை முறிக்கும் தன்மை உடையது. அதனால், எந்த பூச்சி கடித்தலும் அல்லது விஷ வண்டு கடித்தாலும் பூவரசு இலைகளை சித்த மருத்துவர்கள் விஷம் முறிவுக்கு மருந்தாக பயன்படுத்தி வந்தனர்.

பலவகை நோய் தீரும்

பூவரசம் பூக்களை தண்ணீரில் நன்றாக கொதிக்க வைத்து பாதியாக காய்ந்தவுடன் அதை வடிகட்டி காலை மாலை வேளைகளில் இரண்டு அவுன்ஸ் அதாவது 50மில்லி குடித்து வரவேண்டும். மூன்று நாட்களுக்கு தொடர்ந்து இதுபோல அன்றன்று புதிதாக கஷாயம் தயாரித்து, குடிக்கவேண்டும். அதன் பின்னர் மூன்று நாட்கள் இடைவெளி விட்டு, மறுபடியும் மூன்று நாட்கள் சாப்பிட வேண்டும். இதன் மூலமாக ஏதாவது விஷக்கடி மூலம் ஏற்பட்ட ஊறல்புண்,வீக்கம், அரிப்பு, விஷக்கடியால் ஏற்படும் மயக்கம், சோம்பல்தனம் போன்றவை நீங்கும்.

பொடுகு போகணுமா..?

பூவரசங்காய் – 2, செம்பருத்திப்பூ – 2, பழுத்த பூவரசு இலை – 2 இதையெல்லாம் சேர்த்து நன்றாக அரைத்து தலையில் தேய்த்து குளித்து வர தலையில் இருக்கும் பொடுகு நீங்கும். அதையே சருமத்தில் தேய்த்து குளித்தால் சும்மா சருமம் பளபளப்பாக மாறும்.மேலும் கண் கருவளையம் காணாமல் போகும்.


சொறி, சிரங்குக்கு :

சொறி, சிரங்கு வந்து சொரிந்துகொண்டு அவதிப்படுபவர்கள், பூவரசம் பூவை அரைத்து அவற்றின்மீது பூசி வந்தால் சொறி சிரங்கு குணமாகும். மேலும் பூவாசம்பூ பூசுவதால் சருமம் மென்மையாக மாறும்.

மூட்டு வீக்கம்:

வயதானவர்களுக்கு மூட்டுப்பகுதிகளில் நீர் கோர்த்து வீக்கம் ஏற்பட்டு வலியால் அவதிப்படுவார்கள். அதற்கு பூவரசம் பூவுடன் சம அளவு, பூவரசங்காய் மற்றும் பூவரசம் பட்டை ஆகியவற்றை நன்றாக அரைத்து நல்ல நல்லெண்ணெயில் காய்ச்சி, மூட்டு வீக்கங்களின் மீது பூசிவந்தால் மூட்டுகளில் உள்ள நீர் குறைந்து மூட்டு வீக்கம் குணமடையும்.

காயசித்தி என்றால் என்ன

பூவரசம் மரத்தின் பட்டையை இடித்து சாறு எடுத்து மூன்று மண்டலம் (ஒரு மண்டலம் என்பது 48நாட்கள்) குடித்து வந்தால் காயசித்தி உண்டாகும். இதை ஆண் பெண் இருபாலரும் அருந்தலாம். காயசித்தி எற சொல்லில் காயம் என்பது உடல். உடலை பாதுகாத்து ஆரோக்யமாக வைத்திருந்தால் அதற்கேற்ப நமது அறிவும் சீராக அமையும். அறிவு பெருகி இருந்தால் வாழ்க்கையில் எல்லாம் ஜெயமே. அதுதான் காயசித்தி.சித்தி என்பது வெற்றி.


கருத்தடை மருந்து

பழங்காலத்தில் பெண்கள் கருத்தரிப்பை தடுப்பதற்கு பூவரசம் பட்டையை காயவைத்து பொடி செய்து தேன் கலந்து சாப்பிட்டு வந்துள்ளனர். இது கருத்தடை சாதனத்திற்கு இணையாக இருந்துள்ளது. அதேபோல கருப்பையில் ஏற்படும் கோளாறுகளையும் பூவரசம் பட்டை நீக்கும். ஆண்களுக்கு ஆண்மையை வலுப்படுத்தும் மூலப்பொருளாகவும் இருக்கிறியாது.

பூவரச மரம் தற்போது குறைந்து வருகிறது. கிராமங்களில் கூட அங்கங்கு சில இடங்களில் மட்டுமே உள்ளன. அதனால் மரம் நாடும் ஆர்வலர்கள் மரம் நடும்போது பூவரசு மரங்களையும் நடுவதற்கு ஏற்பாடுகள் செய்யவேண்டும். பூவரசு கழி வெட்டி நட்டுவைத்தாலே முளைத்துவிடும்.

பூவரசு (Thespesia populnea) சிறிய மரவகையைச் சார்ந்தது. வெப்பமண்டலப் பகுதிகளில் பரவலாகக் காணப்படும் இம் மரம், 5-10 மீட்டர் உயரம் வரை வளர்கிறது.இதை கல்லால் பூப்பருத்தி என்றும், புவிராசன், அர்த்தநாரி, ஈஸ்வரம், பம்பரக்காய், பூளம் என்ற வேறு பெயர்களிலும் அழைப்பார்கள்.

சிலப்பதிகாரம், மணிமேகலை போன்ற நூல்களிலும் பூவரசு மரம் பற்றி குறிப்பிடப்பட்டிருக்கிறது. இலங்கையில் உள்ள யாழ்ப்பாணம் மாவட்டத்தின் தென்மேற்குப்பகுதியில் புங்குடுதீவில் பூவரசு மரங்கள் நிறைந்த காடு உள்ளது.

ஏழைகளின் தேக்கு

பூவரசு மரத்தை நமது முன்னோர்கள் நாட்டுத் தேக்கு என்று அளித்தனர். ஏனெனில் அவ்வளவு உறுதியான மரமாகும். ஆனால் உண்மையான தேக்குமரம் விலை உயர்ந்தது. ஆனால் இது கிராமங்களில் எளிதாக கிடைக்கும்.பூவரச மரம் வீடுகளுக்கு நிலவு, கதவு, ஜன்னல், மேசைகள், நாற்காலிகள் மற்றும் ஏர் கலப்பை செய்யவும் பயன்படுத்தினார்கள். அதனால் இது ஏழைகளின் தேக்கு என்றும் செல்லப்பெயரில் அழைக்கப்பட்டது.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!