ருசியான நெத்திலி மீன் குழம்பு சாப்பிடலாம் வாங்க...

ருசியான நெத்திலி மீன் குழம்பு சாப்பிடலாம் வாங்க...
X

நெத்திலி மீன்குழம்பு ( கோப்பு படம்)

நெத்திலி மீன் குழம்பு ஊற்றி சாப்பிட, ஐ.ஆர்., 20 ராஜபோகம் அரிசியில் சூடாக சமைக்கப்பட்ட சாதம் தான் சிறந்தது.

ஆமாம். எந்த குழம்புக்கு எந்த அரிசி சாதம் சிறந்தது என்பது உணவுப்பிரியர்களையும், சமையல் மாஸ்டர்களையும் கேட்டால் சொல்வார்கள். அவர்களது பரிந்துரை நெத்திலி மீன் குழம்புக்கு ஐ.ஆர்., 20 ராஜபோகம் அரிசி சாதம் தான். அதாவது ராஜபோகம் அரிசி இரண்டு ஆண்டு பழைய நெல்லில், இருமுறை அவியல் போட்டு அரைத்து பிரித்த தரமான அரிசி. கொஞ்சம் விலை அதிகம் தான். ஆனாலும் மார்க்கெட்டில் அதிகம் கிடைக்கிறது. சாதம் சமைப்பது ஈஸி. 20 நிமிடம் ராஜபோகம் அரிசியை ஊற வைத்து குக்கரில் சமைக்கவும். அரிசி சட்டியில் சமைத்து வடிப்பவர்கள், ஊற வைக்க வேண்டியிருக்காது. எனவே சமையல் ஈஸி. அது எல்லோருக்கும் தெரியும். நெத்திலி மீனை எப்படி குழம்பு வைக்கலாம்னு இப்ப பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்

நெத்திலி மீன் - அரைக்கிலோ

சின்ன வெங்காயம் - 15

தக்காளி - 2

பூண்டு - 10 பல்

புளி - சின்ன நெல்லிக்காய் அளவு

தேங்காய் பால் - ஒரு கப்

மல்லித்தூள் - 3 ஸ்பூன்

மிளகாய் தூள் - ஒன்றரை ஸ்பூன்

மஞ்சள் தூள் - அரை ஸ்பூன்

மிளகு - 1 ஸ்பூன்

சீரகம் - 1 ஸ்பூன்

கடுகு, வெந்தயம் - தாளிப்பதற்கு சிறிதளவு

நல்லெண்ணெய் - 5 ஸ்பூன்

கருவேப்பிலை - சிறிதளவு

உப்பு - தேவையான அளவு

செய்முறை

நெத்திலி மீனை சுத்தம் செய்து கொள்ளவும். சின்ன வெங்காயத்தை பொடியாக நறுக்கி வைத்து கொள்ளவும். தக்காளியுடன் மிளகு, சீரகம் சேர்த்து நைஸாக அரைத்து வைத்துக் கொள்ளவும். புளியை ஊற வைத்துக் கொள்ளவும். கால் மூடி தேங்காய் துருவலுடன் ஒரு டம்ளர் தண்ணீர் சேர்த்து நன்கு அரைத்து பிழிந்து பால் எடுத்து வைத்துக் கொள்ளவும்.

கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி கடுகு, வெந்தயம், கருவேப்பிலை போட்டு தாளித்து பூண்டு. சின்ன வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும். இதனுடன் மல்லித்தூள், மிளகாய்த்தூள், மஞ்சள்தூள் சேர்த்து நன்கு பச்சை வாசனை போக இரண்டு நிமிடம் வதக்கவும். பின்பு அதனுடன் தக்காளி விழுதும் சேர்த்து நன்கு பச்சை வாசனை போக இரண்டு நிமிடம் வதக்கி அதனுடன் புளியை கரைத்து ஊற்றவும்.

பின்பு அதனுடன் இரண்டு டம்ளர் தண்ணீர் குழம்பிற்கு தேவையான அளவுக்கு உப்பு சேர்த்து நன்கு கொதிக்க விடவும். பச்சை வாசனை போனவுடன் அதில் தேங்காய் பாலை சேர்க்கவும். குழம்பு நன்கு கொதித்து கெட்டியானவுடன் அதில் நெத்திலி மீனை சேர்த்து ஒரு தடவை கலந்து விடவும்.

குழம்பு ஒரு கொதி வந்தவுடன் கடாயை மூடி அடுப்பை ஐந்து நிமிடம் சிம்மில் வைத்து இறக்கினால் மிகவும் சுவையான நெத்திலி மீன் குழம்பு ரெடி. இப்ப ஊற்றி சாப்பிடுங்க.... ஆஹா பிரமாதமா இருக்கேன்னு நீங்களே சொல்வீங்க.

Next Story
பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க ரஷ்யா சென்ற பிரதமர் மோடி