கன்னியரை கவர காளைகளுடன் மோதும் காளையர் கூட்டம்..! எல்லாம் ஜல்லிக்கட்டுலதாங்க..!
jallikattu tamil-ஜல்லிக்கட்டு (கோப்பு படம்)
ஏறுதழுவல்
Eru Thazhuvuthal-ஏறு தழுவல், மஞ்சு விரட்டு அல்லது சல்லிக்கட்டு (ஜல்லிக்கட்டு) என்பது தமிழர்களின் மரபுவழி விளையாட்டுகளில் ஒன்றாகும். ஏறு என்பது காளை மாட்டைக் குறிக்கும். மாட்டை ஓடவிட்டு அதை மனிதர்கள் அடக்குவது, அல்லது கொம்பைப் பிடித்து வீழ்த்துவதான விளையாட்டு. புதுக்கோட்டை மாவட்டம் ஜல்லிக்கட்டின் "சொர்க்க பூமியாக" கருதப்படுகிறது.
சொந்த ஊரை நோக்கி வரும் வெளியூர்வாசிகள்
தமிழ்நாட்டில் ஆண்டுதோறும் வெளி ஊர்களில் அல்லது வெளி மாநிலங்களில் குடும்பத்துடன் வேலை செய்யும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் பொங்கல் பண்டிகைக்கு ஊர் திரும்பிவிடுவார்கள். ஆண்டு முழுவதும் வெளியூரில் இருக்கும் அவர்களுக்கு ஒரே பண்டிகை பொங்கல் மட்டுமே. குறிப்பாக ஜல்லிக்கட்டு பார்ப்பது அவர்களின் உயிர் மூச்சு.. அந்த அளவுக்கு மிகவும் சிறப்பு வாய்ந்த பாரம்பரிய விளையாட்டாக ஜல்லிக்கட்டு தமிழக மக்களின் வாழ்வோடு பின்னிப்பிணைந்துள்ளது.
ஜல்லிக்கட்டு வரலாறு
ஜல்லிக்கட்டுக்கு ஒரு நீண்ட வரலாறு உண்டு. அது இன்று நேற்று தோன்றியது அல்ல. நீலகிரி மாவட்டம் கரிக்கியூர் கிராமத்தில் மக்கள் காளைகளைத் துரத்தும் காட்சிகள் சுமார் 3500 ஆண்டுகள் பழமையான கல் வெட்டுகளில் பொறிக்கப்பட்டுள்ளது.
மதுரை மாவாட்டத்தில் உள்ள கல்லுட்டு மேட்டுப்பட்டி என்ற கிராமத்தில் 1500 ஆண்டுகள் பழமையான கல் வெட்டும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இப்படி ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முந்தைய வரலாற்றைக் கொண்டது ஜல்லிக்கட்டு.
வீரத்தழும்பு
இந்த வீர விளையாட்டில் வெற்றி தோல்வி என்பதெல்லாம் கிடையாது. இளைஞர்கள் இதில் கலந்துகொள்வதை பெருமையாக நினைப்பார்கள். வீரத்தின் அடையாளமாக காயங்கள் ஏற்பட்டால் அது வீரத்தழும்பாக பெருமை கொள்வார்கள்.
கன்னியரை கவரும் காளைகள்
மணம் முடிக்கும் பெண்கள் ஏறுதழுவும் ஆண்களை திருமணம் முடிப்பதற்கு பெருமைகொள்வார்கள். ஆண்மையின் அடையாளம் வீரம். அந்த வீரத்தை காளைகளிடம் காட்டும் கட்டிளம் காளைகளை இளம்பெண்கள் விரும்புவதில் ஒன்றும் ஆச்சர்யம் இல்லை. காதல் உள்ளத்தோடு கன்னியரைக் கவர, காளைகளும் வீரதீர செயல்புரியத் தயார் ஆவார்கள்.
பரிசுகள்
தொடக்க காலத்தில் காளையின் கொம்பில் தங்கம் பதிக்கப்பட்டு, ஓடும் காளையை பிடித்து, அந்த தங்கப்பட்டையை எடுத்தவர்கள் வெற்றி பெற்றவர்களாக அறிவிக்கப்பட்டு, பரிசு வழங்கப்படும். பல இடங்களில் காளைகளின் கொம்புகளில் 'சல்லிக் காசு' என்னும் இந்திய நாணயங்களைத் துணியில் வைத்து மாட்டின் கொம்புகளில் கட்டிவிடும் பழக்கம் இருந்தது.
மாட்டை அடக்கும் வீரருக்கு அந்தப் பணமுடிப்பு சொந்தமாகும். இந்தப் பழக்கம் பிற்காலத்தில் கைவிடப்பட்டது. காலத்திற்கு ஏற்ப பரிசுகளும் மாறின. இன்று வெற்றி பெறும் வீரர்களுக்கு பைக், தங்க நாணயம், மொபைல் போன், பீரோ, கட்டில் மற்றும் பணம் ஆகியவை பரிசாக அளிக்கப்படுகின்றன. இளைஞர்கள் இதில் கலந்து கொண்டு வெற்றி பெறுவதை பெருமையாக கருதுகிறார்கள்.
வீரத்தின் அடையாளம்
ஜல்லிக்கட்டு என்பது போட்டியாக மட்டுமல்லாமல் வீரம் நிறைந்த மற்றும் பாரம்பரியத்தின் அடையாளமாக கருதப்படுகிறது. காங்கேயம் காளை, புள்ளிகுளம் காளை ஆகிய மாடு இனங்கள் இதில் கலந்துக் கொள்கின்றன. ஜல்லிக்கட்டுக்காகவே, இந்த காளைகள் சிறப்பான உணவு, பயிற்சியுடன் பிரத்யேகமாக வளர்க்கப்படுகின்றன. இந்த காளைகளை அதன் உரிமையாளர்கள் தங்கள் வீட்டு பிள்ளைகளைப் போல பெருமையுடனும் வளர்ப்பது வழக்கம். இந்த ஜல்லிக்கட்டு காளைகளுக்கு அன்றும் இன்றும் என்றுமே தனி மரியாதை உண்டு.
ஜல்லிக்கட்டு காளைக்கு மரியாதை
ஜல்லிக்கட்டு காளை இறந்துவிட்டால் வீட்டில் ஒருவர் இறந்துவிட்டதாகவே துக்கம் அனுசரிப்பார்கள். இன்னும் சொல்லப்போனால், கல்லறை அமைத்து வணங்கி வருபவர்களும் தமிழகத்தில் இருக்கிறார்கள். சிலர் காளைகளை விற்பனை செய்வதும் உண்டு. அப்போது போட்டிப் போட்டு ஜல்லிக்கட்டு காளைகளை மக்கள் வாங்கிச் செல்வார்கள்.
ஜல்லிக்கட்டு நடக்கும் இடங்கள்
தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு குறிப்பிட்ட சில இடங்களில் சிறப்பாக நடைபெறுகிறது. குறிப்பாக மதுரை மாவட்டத்தில் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு உலகப்புகழ் பெற்றது. அதேபோல மதுரை மாவட்டத்தில் அவணியாபுரம், பால்மேடு ஆகிய பகுதிகளிலும், சிவகங்கை மாவட்டத்தில் சிராவயல், காண்டுபட்டி, புதுக்கோட்டை மாவட்டத்தில் திருவாப்பூர், வேடன்பட்டி, சேலம் மாவட்டம் திம்மம்பட்டி, தேனி மாவட்டம் பலவரயான்பட்டி ஆகிய இடங்களில் பிரபலமாக நடத்தப்படுகிறது. இதுபோல தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் நடத்தப்படுகிறது.
எத்தனை வகை
பாரம்பரியம் மற்றும் பண்பாட்டை தொடரும் வகையில் நடத்தப்படும் இந்த நிகழ்வு ஏறு தழுவுதல் என்றும் அழைக்கப்படுகிறது. ஜல்லிக்கட்டு விளையாட்டு பல வகைகளில் நடத்தப்படுகிறது. வாடிவாசல் ஜல்லிகட்டு, மஞ்சுவிரட்டு, வடம் ஜல்லிகட்டு ஆகியவை அதன் வகைகளாகும்.
வாடிவாசல் ஜல்லிக்கட்டு(1) என்பது ஒரு சிறிய இடத்திற்குள் மாட்டை அடக்குவது ஆகும்.
திறந்தவெளி மைதானத்திற்குள் மாட்டை அடக்குவதும் விரட்டி பிடிப்பதும் மஞ்சுவிரட்டு(2) ஆகும்.
ஒரு சிறிய வட்டத்திற்குள் கட்டி வைத்திருக்கும் மாட்டை அடக்குவதோடு போட்டி முடியும் வரை அந்த வட்டத்திற்குள் இருக்க வேண்டும் என்பது வடம் ஜல்லிக்கட்டு(3) எனப்படுகிறது.
மறக்கமுடியா ஜல்லிக்கட்டு புரட்சி
ஜல்லிக்கட்டுப் போட்டியில் மாடுகள் துன்புறுத்தப்படுவதாகவும் இதனால் மாடுகளுக்கு காயங்களும் தேவையற்ற உயிரிழப்பும் ஏற்படுவதாகக் கூறி இந்திய விலங்கு நல வாரியம், பீட்டா (PETA), இந்திய ப்ளூ க்ராஸ் போன்ற அமைப்புகள் 2008ம் ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தக்கூடாது. அதை தடை செய்யவேண்டும் என்று இந்திய நீதிமன்றங்களில் வழக்கு தொடுத்தனர்.
2008ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் ஜல்லிக்கட்டின் ஆதரவாளர்களும் எதிர்ப்பாளர்களும் தொடர்ந்து நீதிமன்றங்களில் வழக்காடி வந்தனர். ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு நிபந்தனைகளுடன் ஜல்லிக்கட்டு நடத்த நீதிமன்றங்கள் அனுமதி அளித்து வந்தன. 2017ம் ஆண்டு ஜல்லிக்கட்டிற்கு ஆதரவாக தமிழ்நாடு முழுவதும் மாணவர்கள் பல நாட்களாக போராட்டங்கள் நடத்தினர். இந்த போராட்டம் உலகம் முழுவதும் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது. பிற நாடுகளில் வசித்த தமிழர்கள் மட்டுமல்லாமல் ஜல்லிக்கட்டை ரசிக்கும் பிற நாட்டவர்கள் கூட போராட்டத்தில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
2023ம் ஆண்டு ஜல்லிக்கட்டு
இந்த ஆண்டும் (2023) ஜல்லிக்கட்டு விழா புதுக்கோட்டை மாவட்டத்தில் கோலாகலமாகத் துவங்கியது. புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வக்கோட்டை அருகே உள்ள தச்சங்குறிச்சி கிராமத்தில் பொங்கல் பண்டிகையையொட்டி ஜல்லிக்கட்டு நடத்த தமிழக அரசு அனுமதியளித்தது. ஆனால், பாதுகாப்பு குறைபாட்டை காரணம் காட்டி முதல் ஜல்லிக்கட்டுப் போட்டி மாவட்ட நிர்வாகத்தால் ஒத்திவைக்கப்பட்டது. இதனால் பொதுமக்கள் போராட்டங்களை முன்னெடுத்தனர். பாதுகாப்பு ஏற்பாடுகள்செய்யப்பட்டப் பின் 2023ம் ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டு தச்சங்குறிச்சி கிராமத்தில் ஜனவரி 8ம் தேதி தொடங்கி சிறப்பாக நடந்து முடிந்தது.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu