"அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை"..! ஒரு சின்ன வாழ்க்கை கதைங்க..! படிங்க..!

அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை..! ஒரு சின்ன வாழ்க்கை கதைங்க..! படிங்க..!
X

கணவன் மனைவி -கோப்பு படம்

இந்த உலகில் மரணபரியந்தம் தொடரும் ஒரு உறவு கணவன்- மனைவி உறவு. அந்த உறவுக்குள் புரிதலும் விட்டுக்கொடுத்தலுமே வாழ்வை இனிமையாக்கும்.

கணவன் மனைவி உறவு என்பது உன்னதமான உறவு. ஒரு கணவன் தனது மனைவியையும் குழந்தைகளையும் கண்கலங்காமல் பார்த்துக்கொள்ள நினைப்பதே ஒரு கணவனின் சிறந்த குணத்துக்கு எடுத்துக்காட்டு. விட்டுக்கொடுத்தல் இருந்தால் அங்கு வாழ்க்கை இனிமையாக இருக்கும்,

ஒரு மனைவி ஒரு கணவனை எப்படி புரிந்துகொள்ளவேண்டும் என்பதற்கு இந்த கதையை படிங்க...

திருந்திய மனைவி

அவன் பெயர் குணாளன். அவள் பெயர் சங்கரி . இருவரும் கணவன் மனைவி. அன்று கணவன், மனைவிக்கு இடையே ஒரு சிறிய சண்டை ஏற்பட்டது. அதை ஒரு சண்டை என்று கூட சொல்லமுடியாது. ஒரு சிறிய வாக்குவாதம். அவ்வளவே. சாப்பிட்டுவிட்டு கணவனும், குழந்தைகளும் தூங்கியவுடன்

இனி கணவன் குணாளனுடன் வாழ முடியாது என்று எண்ணி, மனைவி சங்கரி வீட்டை விட்டு வெளியேறினாள். அவள் அவர்கள் வசித்த பகுதியின் தெருக்களில் எங்கு செல்வது என்று தெரியாமல் மனதுக்குள் புலம்பியபடி அங்கும் இங்கும் அலைந்து கொண்டிருந்தாள்.

அப்போது, ​​ஒரு வீட்டுக்குள் இருந்து ஒரு குரல் கேட்டது, அங்கு ஒரு பெண் தனது குழந்தைக்கு கொஞ்சம் சோறு கிடைக்கவேண்டும் என்று சிறிது சோற்றுக்காக கடவுளிடம் பிரார்த்தனை செய்துக்கொண்டிருப்பதைப் பார்த்தாள். சங்கரியின் மனதுக்குள் என்னவோ செய்தது.

சங்கரி இன்னும் சிறிது தூரம் சென்றபோது, ​​வேறொரு வீட்டிலிருந்த ஒரு பெண் தன் மகனை எல்லா துன்பங்களிலிருந்தும் காப்பாற்ற கடவுளிடம் பிரார்த்தனை செய்து கொண்டிருந்தாள். அதுவும் சங்கரியின் மனதுக்குள் வடுவாக பதிந்தது.

அப்படியே நடந்தபோது வேறொரு வீட்டிலிருந்து ஒரு கணவன் தனது மனைவியிடம், ' தயவுசெய்து வீட்டு உரிமையாளரை இன்னும் சில நாட்கள் பொறுத்துக்கொள்ளச் சொல். அதற்கு அவரிடம் அவகாசம் கேள். தினமும் வந்து நம்மைத் தொந்தரவு செய்ய வேண்டாம் என்று கேள்' என்று கைகளைக் கூப்பியபடி கெஞ்சிக்கொண்டிருந்தான். இந்த சம்பவம் சங்கரியின் மனதில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.

இன்னும் சிறிது தூரம் சென்றபோது, ​​ஒரு வயதான பாட்டி தன் பேரனிடம், "பேராண்டி எனக்கு மருந்து வாங்கிவந்து இத்தனை நாட்களாகி விட்டது. நான் மருந்து சாப்பிடாமல் இருக்கிறேன்" என்று சொல்லிக் கொண்டிருந்தாள். பேரன் சாப்பிட்டுக்கொண்டே,​​“பாட்டி, இப்போது மெடிக்கல் ஸ்டோர் ஓனர் கூட நமக்கு மருந்து தருவதில்லை. காரணம் மருந்து வாங்குவதற்கு என்னிடம் பணம் இல்லை” என்று சொல்லிக் கொண்டிருந்தான். அந்த பாட்டி மருந்து சாப்பிடாமல் இருப்பதை எண்ணி சங்கரிக்கு கண்ணீரே வந்துவிட்டது.


இன்னும் சிறிது தூரம் சென்றபோது, ஒரு வீட்டில் இருந்து ஒரு பெண் குரல் கேட்டது, பசியில் வாடும் தன் குழந்தைகளிடம், இன்று உங்கள் அப்பா கண்டிப்பாக உங்களுக்கு சாப்பிட ஏதாவது கொண்டு வருவார். அதுவரை நீங்கள் தூங்குங்கள். அப்பா வந்ததும் அம்மா உங்களை எழுப்புகிறேன் என்று கூறியதைக்கேட்ட சங்கரிக்கு மனதுக்குள் அழுகையே வந்துவிட்டது.

சங்கரி அங்கேயே சிறிது நேரம் நின்றுவிட்டு, நம் முன் மகிழ்ச்சியாகவும் திருப்தியாகவும் இருக்கிறார்கள் என்று நாம் எண்ணிக்கொண்டு இருந்தாலும் அவர்களுக்குள்ளும் ஏதாவது ஒரு கதை இருக்கிறது என்று நினைத்துக்கொண்டு தன் வீட்டிற்குத் திரும்பினாள்.

இப்படி அவர்களுக்குள் எத்தனை வேதனை இருந்தாலும் அவர்கள் அனைவரும் தங்கள் துக்கங்களையும் வலிகளையும் மறைத்துக்கொண்டுதான் வாழ்கின்றனர்.

சங்கரி தன் வீட்டிற்குத் திரும்பினாள். தனக்குச் சொந்த வீடு, குழந்தைகள், நல்ல கணவன் கிடைத்து இருப்பதற்கு கடவுளுக்கு நன்றி சொல்ல ஆரம்பித்தாள்.

மனைவி மீண்டும் வருவாள் என்று கணவன் குணாளன் தூங்காமல் வாசலில் காத்துக்கொண்டு இருந்தான். குணாளன் வாசலில் தூங்காமல் காத்திருப்பதைப்பார்த்த சங்கரி ஓடோடிச் சென்று அவனைக் கட்டிப்பிடித்து சிறுபிள்ளைபோல அழுதாள்.

'நான் தப்பு பண்ணிட்டேன். உங்களை புரிஞ்சிக்காம இருந்துட்டேன். என்னை மன்னிச்சிடுங்க..' என்று அழுத சங்கரியிடம், நீ ஒன்னும் தப்பு பண்ணலை. நானும் உன்னை கோபமா பேசி இருக்கக் கூடாது. அதுக்கு நீயும் என்னை மன்னிச்சுடு' என்று குணாளன் கேட்க

இப்படி ஒரு கணவனை புரிஞ்சிக்காம இருந்துவிட்டோமே என்று மீண்டும் கட்டியணைத்து அழுதாள் சங்கரி.

குணாளன் அவளது கன்னத்தைத் தூக்கி நிமிர்த்தி நெற்றியில் முத்தமிட்டான். சங்கரி அவனது தோளில் சாய்ந்துகொண்டாள்.

ஆம், சில சமயங்களில் சங்கரி தன் கணவனுடன் சண்டையிட்டு இருக்கிறாள். ஆனாலும் குணாளன் அவளை மிகவும் அன்போடு கவனித்துக்கொள்கிறான். குழந்தைகளுக்கும் எந்த குறையும் வைத்ததில்லை. சங்கரியின் வாழ்வில் இதுதான் துயரம் என்று தவறாக நினைத்துக் கொண்டிருந்தாள். ஆனால் ​​தன்னை விட எவ்வளவோ துன்பங்களுடன் மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.என்பதை இப்போது உணர்ந்து கொண்டாள்.

பாடம்

நம் முன் மகிழ்ச்சியாகவும் திருப்தியாகவும் இருக்கும் எல்லோரது வாழ்க்கையிலும் மகிழ்ச்சி மட்டுமே இருக்காது. அவர்களுக்கும் வாழ்க்கையில் சில துன்பங்கள் அல்லது பிரச்சனைகள் இருக்கும். ஆனால் எல்லோரும் தங்கள் பிரச்சனைகளை வெளியே காட்டிக்கொள்ளாமல் மறைத்து புன்னகைக்கிறார்கள். மற்றவர்களின் சிரிப்புக்குப் பின்னால் துக்கமும் கண்ணீரும் மறைந்திருக்கும். கஷ்டங்கள் மற்றும் சோதனைகளைக் கடந்து வாழ்வதுதான் உண்மையான வாழ்க்கை.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!