போராட்டமும், அடக்குமுறையும் - கென்யாவில் நடப்பது என்ன?

போராட்டமும், அடக்குமுறையும் -  கென்யாவில் நடப்பது என்ன?

போராட்டக்களத்தில் இளைஞர்கள் 

ஆப்பிரிக்க நாடான கென்யாவில் வரி உயர்வுக்கு, எதிராக மக்கள் கடந்த மாதம் முதல் போராட்டம் மேற்கொண்டு வருகின்றனர்.

கென்ய நாட்டு மக்கள் வரி உயர்வைக்கண்டித்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களில் பெரும்பாலானவர்கள் இளம் தலைமுறையினர். அவர்களை கட்டுப்படுத்த போலீஸார் பல்வேறு வகையான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். போராட்டத்தில் ஈடுபட்ட மக்களில் இதுவரை 39 பேர் உயரிழந்துள்ளனர். 361 பேர் காயமடைந்துள்ளனர். பலர் மாயமாகி உள்ளனர். இதனை கென்ய மனித உரிமைகள் ஆணையம் உறுதி செய்துள்ளது.

இந்த சூழலில் வரி உயர்வு தொடர்பான மசோதாவை அதிபர் வில்லியம் ரூட்டோ கடந்த வாரம் தள்ளுபடி செய்தார். மேலும், உயிரிழப்புகள் தொடர்பாக முறையான விசாரணை நடத்தப்படும் என்றும் தெரிவித்தார். இதற்கு தனது அரசு காரணம் அல்ல எனவும் அவர் விளக்கம் அளித்திருந்தார். தற்போது அதிபர் ரூட்டோவுக்கு எதிராக சமூக வலைதளங்களில் மக்கள் முழக்கமிட்டு வருகின்றனர்.

அவர் பதவி விலக வேண்டுமென வலியுறுத்தி வருகின்றனர். மக்கள் போராட்டத்தில் பாதுகாப்பு படையினர் துப்பாக்கி சூடு நடத்தியது தவறு என போராட்டக்காரர்கள் தெரிவித்து வருகின்றனர். தற்போது அங்கு வன்முறை வெடித்துள்ளது. இதற்கு பாதுகாப்பு படையின் அடக்குமுறை காரணமாக சொல்லப்படுகிறது.

அதிபர் ரூட்டோ பதவி விலக வேண்டும் என்பது மக்களின் கோரிக்கையில் பிரதானமானதாக உள்ளது. அப்பாவி மக்கள் மீதான தாக்குதலுக்கு அவர் மன்னிப்பு கோர வேண்டும் என்றும் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், ஜூலை 2-ம் தேதி தங்களது கோரிக்கைகளை முன்வைத்து அமைதியான முறையில் மீண்டும் அரசுக்கு எதிராக போராடலாம் என இளைஞர்கள் திட்டமிட்டனர். இது தொடர்பான ஹாஷ்டேகுகள் சமூக வலைத்தளங்களில் ட்ரெண்ட் செய்யப்பட்டது.

கருப்பு நிற ஆடை, கையில் தேசிய கொடி, ரூட்டோ பதவி விலக வேண்டும் என்பதை வலியுறுத்தும் பதாகையுடன் அவர்கள் மீண்டும் போராட்ட களத்தில் இறங்கினர். ஆனால், அதில் கல்வீச்சு, கார் போன்ற வாகனங்களுக்கு தீ வைப்பு என அங்கு நிலைமை மாறியுள்ளது. போலீஸாரும் அதனை தடுக்க கண்ணீர் புகை குண்டுகளை வீசி வருகின்றனர். வன்முறையில் அரசின் தலையீடு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

அந்த நாட்டில் கூடுதல் வரி விதிப்பின் மூலம் சுமார் 2.7 பில்லியன் டாலர்களை ஈட்ட அதிபர் ரூட்டோ தலைமையிலான அரசு திட்டமிட்டது. நாட்டின் நிதி நெருக்கடியை சமாளிக்கும் வகையில் இந்த நகர்வு முன்னெடுக்கப்பட்டது.

அந்த நாட்டில் கடந்த சில ஆண்டுகளாகவே வறட்சி, வெள்ளம் மற்றும் வெட்டுக்கிளி படையெடுப்பு உள்ளிட்ட காரணங்களால் பொருளாதார நிலை மோசமடைந்துள்ளது. வறுமை நிலையும் அங்குள்ளது. மக்களின் வாழ்க்கை முறை மேம்பாடு, வேலைவாய்ப்பு போன்ற சிக்கல்களும் அங்கு உள்ளன. இதோடு கடன் நெருக்கடியிலும் கென்யா தவித்து வருவது குறிப்பிடத்தக்கது. பெரும்பாலான ஆப்பிரிக்க நாடுகளின் நிலை இதுவாகவே உள்ளது.

ஏற்கனவே வறுமையில் தவித்து வரும் மக்களிடமிருந்து அரசின் புதிய வரி உயர்வுக்கு எதிர்ப்பு எழுந்தது. கென்யாவில் உள்ள 47 கவுன்டிகளில் 35-ல் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தலைநகர் நைரோபி என்று இல்லாமல் தேசம் முழுவதும் வீதிகளில் வரி உயர்வுக்கு எதிராக மக்கள் குரல் எழுப்பினர்.

இந்த சூழலில் ஜூன் மாதத்தின் இறுதி வாரத்தில் அந்த நாட்டு நாடாளுமன்றத்தில் ‘நிதி மசோதா 2024’ நிறைவேற்றப்பட்டது. அதை எதிர்த்து நாடாளுமன்றத்தை நோக்கி மக்கள் பேரணி சென்றனர். அதன்போது சிலர் நாடாளுமன்ற வளாகத்துக்குள் நுழைய முயன்றனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸார் துப்பாக்கி சூடு நடத்தியதில் ஐந்து பேர் உயிரிழந்தனர். தொடர்ந்து தேசம் முழுவதும் இதே போக்கை போலீஸார் பின்பற்றி வருவதாக உள்ளூர் மக்கள் தெரிவித்துள்ளனர். மேலும், மக்கள் மீது உக்கிர தாக்குதலை போலீஸார் மேற்கொண்டதாகவும் குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது.

கென்ய நாட்டின் வீதிகளில் மக்கள் போராடி வரும் நிலையில் அங்குள்ள அரசு அலுவலகங்கள், வணிக நிறுவனங்கள் சூறையாடப்பட்டு வருகின்றன. கார் போன்ற வாகனங்களுக்கு தீ வைப்பதும், கல்வீச்சு தாக்குதலும் நடைபெற்று வருகிறது. இது போராட்ட கூட்டத்தில் புகுந்த குண்டர்களின் வேலை என போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் தெரிவித்துள்ளனர்.

மக்களுக்காக பணி செய்வது தான் போலீஸாரின் பணி. ஆனால், கென்யாவில் ஆட்சியாளர்களுக்கு ஆதரவாக அவர்கள் செயல்படுவதை வழக்கமாக கொண்டுள்ளனர் என்கிறார்கள் மக்கள் நல ஆர்வலர்கள். இதன் காரணமாகத் தான் தற்போது போராட்டம் வன்முறையாக வெடித்துள்ளது என்றும் சொல்கின்றனர்.

போராட்டத்தை தடுக்க கென்ய அரசு முன்னெடுக்கும் யுக்தி: வன்முறை சம்பவங்களுக்கு தனியொரு போலீஸ் அதிகாரி மீது குற்றம் சுமத்துவது, உள்நாட்டு பாதுகாப்புக்காக ராணுவத்தை பயன்படுத்துவது, போராட்டத்தில் ஈடுபடும் மக்களை குற்றவாளிகளாக குறிப்பிடுவது, நீதி அமைப்பை தவறாக பயன்படுத்துவது ஆகிய ஐந்து வழிகளில் கென்யாவில் நடைபெறும் போராட்டத்தை அரசு தரப்பு குறிப்பிடுவது வழக்கமாக இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். இதை பல ஆண்டுகளாக ஆட்சியாளர்கள் கடைபிடித்து வருவதாக சொல்லப்படுகிறது.

தீர்வு என்ன? தற்போது போராடி வரும் மக்கள் மீது அதே யுக்தியை பின்பற்றியே அரசு தரப்பு சட்டத்துக்கு புறம்பான செயலை கட்டவிழத்துள்ளது. அதே நேரத்தில் ‘நம் நாடு’ என ‘Gen Z’ தலைமுறையினர் ஒன்றாக இணைந்து மேற்கொண்டுள்ள இந்த போராட்டம் புதிய விடியலை நோக்கியதாக உள்ளது. இந்த இளைஞர்கள் அரசின் யுக்திக்கு கடும் சவால் அளிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அது புதிய மாற்றத்தை நோக்கி கென்ய தேசத்தை அழைத்து செல்லும் என நம்புவோம்.

Tags

Next Story