தைவானில் இந்திய ஊழியர்களுக்கு சிவப்பு கம்பள வரவேற்பு..!
Job Opportunity in Taiwan- தைவான் வேலைவாய்ப்பு (கோப்பு படம்)
தைவான் தலைநகரான தைபேயில் பல துறைகளில் தொழிலாளர் பற்றாக்குறை நிலவி வருகிறது.
இதை சரி செய்யும் முயற்சியில் இந்திய புலம்பெயர்ந்த தொழிலாளர்களைத் தைவான் நாட்டுக்கு அழைத்து வருவதற்கான ஒப்பந்தத்தில் இந்தியாவும் தைவானும் வெள்ளிக்கிழமை கையெழுத்திட்டுள்ளது.
செமிகண்டக்டர் உற்பத்திக்குப் பெயர் பெற்ற தைவான், பிற தென்கிழக்கு ஆசிய நாடுகளைப் போலவே அதிகப்படியான வயதான மக்கள் தொகையைக் கொண்டுள்ளது. தற்போது வியட்நாம், இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ் மற்றும் தாய்லாந்து போன்ற தென்கிழக்கு ஆசிய நாடுகளிலிருந்து புலம் பெயர்ந்த தொழிலாளர்களை மட்டுமே நம்பி இயங்கி வருகிறது. ஜப்பான் நாட்டில் இந்தப் பிரச்சனை நீண்ட காலமாக இருந்தாலும், தனது வர்த்தகத்தையும், உற்பத்தியையும் பெரிய அளவில் பிறநாடுகளில் வைத்திருக்கும் காரணத்தால் சிறிய அளவிலான புலம் பெயர்ந்த தொழிலாளர்களைக் கொண்டு அந்நாட்டின் பொருளாதாரம் மற்றும் வர்த்தகம் இயங்கி வருகிறது.
ஆனால் தைவானில் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் எண்ணிக்கை மிகவும் குறைவு. வெளிநாட்டில் இருந்து அங்குச் சென்ற தொழிலாளர்கள் முதன்மையாக உற்பத்தித் துறையிலும், முதியவர்களைக் கவனித்துக்கொள்ளும் பணியில் அதிகளவில் பணிபுரிகின்றனர். சமீபத்தில் இஸ்ரேல் அரசு இந்தியாவில் இருந்து கட்டுமானத்துறை முதல் உற்பத்தித்துறை வரையில் பல துறைக்குத் தேவையான ப்ளூ காலர் ஊழியர்களை உத்தரப்பிரதேசம் மற்றும் அதைச் சுற்றியுள்ள மாநிலத்தில் தேர்வு செய்தது. இதைத் தொடர்ந்து தற்போது தைவான் வந்துள்ளது.
இந்தியா மற்றும் தைவான் தூதரகங்களுக்கு இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது எனத் தைவான் தொழிலாளர் அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஆனால் இந்த ஒப்பந்தம் செயல்படுத்துவதற்கான குறிப்பிட்ட விவரங்கள் இன்னும் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை. தைவான் நாட்டின் உற்பத்தி, கட்டுமானம், விவசாயம் மற்றும் பிற தொழில்களில் பணியாளர்களுக்கான தேவை தொடர்ந்து அதிகரித்து வருவதாகவும், இந்தத் தேவையை அந்நாட்டின் மக்கள் தொகையால் பூர்த்தி செய்ய முடியாது என்றும் தைவான் தொழிலாளர் அமைச்சகம் ஒப்புக்கொண்டது.
இந்த நிலையில் தைவான் தொழிலாளர் அமைச்சகம் கூறுகையில், இந்திய தொழிலாளர்களின் தரம் நிலையானது. அவர்கள் கடினமாக உழைக்கிறார்கள் மற்றும் சர்வதேச அளவில் நன்மதிப்பைப் பெற்று இருக்கிறார்கள்’ என்று தெரிவித்துள்ளது. தைவானின் தொழிலாளர் அமைச்சகத்தின் கூற்றுப்படி, தற்போது இருநாட்டுத் தூதரகம் மத்தியில் செய்யப்பட்ட ஒப்பந்தம் வாயிலாக ஆரம்பக்கட்டமாகச் சிறிய அளவிலான ஊழியர்களைப் பைலட் திட்டம் வாயிலாக ஈர்க்கப்பட உள்ளது. இந்தச் சோதனை திட்டம் வெற்றி பெற்றால், அதிகமான இந்தியத் தொழிலாளர்கள் தைவானுக்குள் நுழைய அனுமதிக்கப்படுவார்கள் எனத் தெரிவித்துள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu