2000 ரூபாய் நோட்டுகள் வாபஸ் காரணமாக பொருளாதாரம் பாதிக்குமா?

2000  ரூபாய் நோட்டுகள் வாபஸ்  காரணமாக  பொருளாதாரம் பாதிக்குமா?
X
2000 ரூபாய் நோட்டுகளை ரிசர்வ் வங்கி திரும்பப் பெறுவது, நாட்டின் பொருளாதாரத்தில் பாதிப்பை ஏற்படுத்துமா என்ற கேள்வி எழுந்துள்ளது

2000 ரூபாய் நோட்டுகளை ரிசர்வ் வங்கி திரும்பப் பெறுவது, நாட்டின் பொருளாதாரத்தில் பாதிப்பை ஏற்படுத்துமா என்ற கேள்வியும் சில சந்தேகங்களும் மக்களிடம் எழுந்துள்ளது

இது குறித்து பொருளாதார நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். தற்போதைய உயர் மதிப்பிலான ரூ.2000 நோட்டுகளை திரும்பப் பெறுவதாகவும், அவற்றை பொதுமக்கள் வரும் செப்டம்பர் 30ம் தேதி வரை வங்கியில் கொடுத்து வேறு நோட்டுகளாக மாற்றிக் கொள்ளலாம் என்றும் ரிசர்வ் வங்கி நேற்று முன்தினம் திடீரென அறிவித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ரிசர்வ் வங்கியின் இந்த நடவடிக்கைக்கு பெரும்பாலான எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

கடந்த 2016ம் ஆண்டு பழைய ரூ.1000 மற்றும் ரூ.500 நோட்டுகளை ஒன்றிய அரசு திரும்பப் பெற்ற போது பொருளாதாரத்தில் அது மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய நிலையில், ரூ.2000 நோட்டுகளால் ஏற்படும் விளைவுகள் குறித்து நிதி ஆயோக் முன்னாள் துணைத்தலைவர் அரவிந்த் பனாகரியா கூறியதாவது: இந்த நடவடிக்கையால் பொருளாதாரத்தில் எந்த பாதிப்பும் ஏற்படாது.

2000 ரூபாய் நோட்டுக்கு பதிலாக குறைந்த மதிப்புள்ள நோட்டுகள் மாற்றப்படும். அதனால் பண விநியோகம் பாதிக்கப்படாது. தற்போது பொதுமக்களின் கையில் உள்ள பணத்தில் ரூ.2000 நோட்டுகள் 10.8 சதவீதம் மட்டுமே. அதிலும் ரூ.2000 நோட்டுகள் பெரும்பாலும் சட்டவிரோத பரிவர்த்தனைகளுக்கு பயன்படுத்தப்படுகிறது. எனவே மிக குறைவான அளவே ரூ.2000 நோட்டில் பரிவர்த்தனை நடப்பதால் இதனால் பொதுமக்களுக்கு எந்த பாதிப்பும் வராது.

வேறு சில பரிவர்த்தனைக்காக வங்கிக்குச் செல்லும்போது, 2,000 ரூபாய் நோட்டுகளை மக்கள் மாற்றிக் கொள்ளலாம். அதனால் சிரமமும் இல்லை. தற்போது மக்கள் ரூ.500 அல்லது அதற்கும் குறைவான ரூபாய் நோட்டுகளில் பரிவர்த்தனை செய்யப் பழகிவிட்டதால், ரூ.1,000 நோட்டுகளை வெளியிட வேண்டிய அவசியம் இல்லை. உதாரணத்திற்கு அமெரிக்காவை எடுத்துக் கொள்ளுங்கள்.

அங்கு, 2021ம் ஆண்டில் தனிநபர் வருமானம் 70,000 அமெரிக்க டாலர் (சுமார் ரூ.57 லட்சம்). அங்கு அதிகபட்ச கரன்சி மதிப்பு 100 டாலர். அதுவே இந்தியாவில், 2021ல் தனிநபர் வருமானம் சுமார் ரூ.1,70,000. எனவே அமெரிக்காவுடன் ஒப்பிடும் போது, நமது அதிகபட்ச ரூபாய் நோட்டு 243 ஆக இருக்க வேண்டும். எனவே, உயர்மதிப்பு ரூபாய் நோட்டு 500 என்பது நமக்கு சரியானதாக இருக்கும். உயர் மதிப்புள்ள ரூபாய் நோட்டுகளை ஒழிப்பதன் மூலம், எதிர்காலத்தில் சட்டவிரோதமான பரிவர்த்தனைகள் செய்வது மிகவும் கடினமாகும் என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு அவர் கூறினார்.

மார்ச் 2017ல் மக்கள் மத்தியில் கிட்டத்தட்ட 75 சதவீதமாக இருந்த ரூ.2000 நோட்டுகளின் சதவீதம் 2023 மார்ச்சில் 10.8 சதவீதமாகக் குறைந்துள்ளது. இத்தகைய நடவடிக்கைகள் அதிக மதிப்புள்ள ரியல் எஸ்டேட் பரிவர்த்தனைகளில் சட்டவிரோத பணபரிமாற்றங்களை பெருமளவில் குறைக்கும் என்று கோலியர்ஸ் இந்தியாவின் ஆராய்ச்சித் தலைவர் விமல் கூறினார்.

மேற்கு வங்க முதல்வரும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி நேற்று தனது டிவிட்டர் பதிவில், ‘ரூ.2,000 நோட்டுகளை திரும்பப் பெற்றது, மற்றொரு விசித்திரமான மற்றும் துக்ளக் ஆட்சியின் பணமதிப்பிழப்பு நாடகம். இது சாமானிய மக்களை மீண்டும் கடுமையாக தாக்கும். இந்த எதேச்சதிகார அரசாங்கத்தின் இத்தகைய தவறான நடவடிக்கையை எந்த நேரத்திலும் மக்களால் மறக்க முடியாது என்றார்.

காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தனது டிவிட்டரில், ‘2016ல் முதல் முறையாக மேற்கொள்ளப்பட்ட பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் பொருளாதாரத்தில் ஆழமான காயத்தை ஏற்படுத்தினீர்கள். ஒட்டுமொத்த அமைப்புசாரா துறை அழிக்கப்பட்டது, சிறு குறு நிறுவனங்கள் மூடப்பட்டன, கோடிக்கணக்கான மக்கள் வேலை இழந்தனர். இப்போது, 2வது பணமதிப்பிழப்பு… இது முந்தைய தவறை மூடி மறைப்பதற்காகவா? நடுநிலையான விசாரணை மட்டுமே இந்த விஷயத்தின் உண்மையை வெளிப்படுத்தும் என கூறி உள்ளார்.

ஆந்திர முன்னாள் முதல்வரான சந்திரபாபுநாயுடு கூறுகையில், நாட்டில் பெரிய கரன்சி நோட்டுகளால் ஊழல் மற்றும் சட்டவிரோத பரிவர்த்தனை அதிகரித்துள்ளது. ரூ.2 ஆயிரம் நோட்டுகளை வாபஸ் பெறுவதாக . ரிசர்வ் வங்கி எடுத்த முடிவு மகிழ்ச்சியளிக்கிறது. இது பொருளாதாரத்தை மேம்படுத்துவதோடு, நேர்மையுடன் உழைக்கும் நேர்மையானவர்களுக்கு மிகப்பெரிய மதிப்பையும் சேர்க்கும் என்றார்.

முன்னாள் நிதிச் செயலாளர் சுபாஷ் சந்திர கார்க் கூறுகையில், ‘ரிசர்வ் வங்கி ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெறுவது பணமதிப்பிழப்பு நடவடிக்கை அல்ல. செப்டம்பர் 30 வரை ரூ.2000 நோட்டுகள் செல்லும் என்று தான் ரிசர்வ் வங்கி கூறி உள்ளது. ஒரு கரன்சி நோட்டை மதிப்பிழக்கச் செய்யும் அதிகாரம் அரசுக்கு மட்டுமே உள்ளது.

தற்போது ரூ.2000 நோட்டுகளை மக்கள் அதிகளவில் பயன்படுத்தாததால் எந்த பாதிப்பும் வராது. இது பொருளாதாரத்திலும், நிதி அமைப்பின் செயல்பாட்டிலும் எந்த விளைவையும் ஏற்படுத்தாது. ரூ.2,000 நோட்டு அறிமுகம் செய்யப்படுவதற்கு முன்பே, அது விரைவில் வெளியேற்றப்பட வேண்டும் என அதன் விதி வகுக்கப்பட்ட ஒன்றாகும். அதனால்தான் 2018-19ம் ஆண்டில் ரூ.2,000 நோட்டுகள் அச்சடிப்பது முற்றிலும் நிறுத்தப்பட்டது’ என்றார்.

Tags

Next Story
மக்கள் தாங்கள் வரியை செலுத்த வேண்டும் என திருச்செங்கோடு நகராட்சி ஆணையா் வேண்டுகோள்!