பிரிவினையை செய்யவே மாட்டேன் - பிரதமர் மோடி திட்டவட்டம்
ஜூன் 1ம் தேதி நடைபெற உள்ள இறுதிகட்ட தேர்தலில் வாரணாசி உள்பட 57 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
வாரணாசியில் பா.ஜ.க. வேட்பாளராக பிரதமர் மோடி களமிறங்கியுள்ளார். இதனிடையே, கடந்த சில நாட்களுக்கு முன் ராஜஸ்தானில் நடந்த பா.ஜ.க. பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசிய கருத்துக்கள் சர்ச்சையாகின. பிரதமர் மோடி பேசியதாவது, உங்கள் சொத்துக்கள் அதிக குழந்தைகளை பெற்றவர்களுக்கு பகிர்ந்து அளிக்கப்படும். ஊடுருவல்காரர்களுக்கு பகிர்ந்து அளிக்கப்படும். உங்களின் கடின உழைப்பால் கிடைத்த பணம் ஊடுருவல்காரர்களுக்கு செல்ல வேண்டுமா? இதை நீங்கள் ஏற்றுக்கொள்வீர்களா? என்றார்.
இந்நிலையில், வாரணாசியில் வேட்புமனு தாக்கல் செய்த பின்னர் பிரதமர் மோடி தனியார் செய்தி நிறுவனத்திற்கு பேட்டியளித்தார்.
அப்போது அவரிடம் கடந்த சில நாட்களுக்குமுன் ராஜஸ்தான் பொதுக்கூட்டத்தில் தெரிவித்த கருத்துகள் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதிக குழந்தைகள் பெற்றவர்கள், ஊடுருவல்காரர்கள் என தெரிவித்த கருத்துகள் குறித்து எழுப்பபட்ட கேள்விகளுக்கு பிரதமர் மோடி பதில் அளித்துள்ளார்.
பிரதமர் மோடி கூறியதாவது, அதிக குழந்தைகள் பெற்றவர்கள் என நான் இஸ்லாமிய மதத்தினரை மட்டும் பேசவில்லை, ஒட்டுமொத்தமாக ஒவ்வொரு ஏழை குடும்பத்தையும் பற்றியே பேசினேன். இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறி விடுவேன். முஸ்லிம் மக்கள் மீதான அன்பை நான் விளம்பரப்படுத்த விரும்பவில்லை. நான் வாக்கு அரசியலுக்காக வேலை செய்பவன் அல்ல. அனைவருக்குமான ஆட்சி என்பதில் நான் நம்பிக்கை கொண்டவன்.
ஒரு குடும்பம் எத்தனை குழந்தைகளை கொண்டிருந்தாலும் குழந்தைகளை அந்த குடும்பமே கவனித்துக்கொள்ள வேண்டும். உங்கள் குழந்தைகளை அரசு கவனித்துக்கொள்ளும் சூழ்நிலைக்கு தள்ளிவிடவேண்டாம். இந்து - முஸ்லிம் பிரிவினையை நான் ஒருபோதும் செய்யமாட்டேன் இது என் உறுதிமொழி. இவ்வாறு கூறியுள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu