'ஒமிக்ரான் ஒன்றுமில்லை' -ஒட்டுமொத்த மருத்துவ உலகமும் கூறினாலும் இந்தியா அச்சப்படுவது ஏன்? (ஒரு மருத்துவ அலசல்..)

ஒமிக்ரான் ஒன்றுமில்லை -ஒட்டுமொத்த மருத்துவ  உலகமும் கூறினாலும்  இந்தியா அச்சப்படுவது ஏன்? (ஒரு மருத்துவ அலசல்..)
X
'ஒமிக்ரான்' பெரும் பாதிப்பை ஏற்படுத்தாது என உலக நிபுணர்கள் முதல் உள்ளூர் நிபுணர்கள் வரை உறுதியாக கூறிய பின்னரும் இந்தியாவின் அச்சத்திற்கான காரணங்களை டாக்டர்கள் பட்டியலிடுகின்றனர்.

''ஒமிக்ரான் வைரஸ் ஒன்றுமில்லை. சாதாரணமாக வந்து விட்டு போய் விடும்'' என ஒட்டுமொத்த உலகமும் கூறி விட்ட நிலையிலும் இந்தியா அலற காரணம் என்ன என்பது குறித்து டாக்டர்கள் பட்டியலிட்டு வருகின்றனர்.

தென்ஆப்பிரிக்காவில் ஒமிக்ரான் வைரஸ் கண்டறியப்பட்ட நிலையில், அது வேகமாக பரவும் ஆனால், வீரியம் குறைந்தது என்ற தகவலும் உடனே வெளிப்பட்டது. முதலில் மிரண்ட உலக சுகாதார மையமும் ஒமிக்ரான் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தாது என்பதை ஒத்துக் கொண்டனர். லண்டனில் ஒமிக்ரானுக்கு முதல் இறப்பு பதிவான போது, அவர் ஒமிக்ரானால் இறந்தார் ? என்பதற்கு ஆதாரம் இல்லை என்று ஒரு பிரிவினரும், இறந்தவர் உடலில் ஒமிக்ரான் வைரஸ் கண்டறியப்பட்டது என ஒரு சிலரும் கூறி குழப்பத்தை அதிகரித்தனர். ஆனால் அதன் பின்னர் இங்கிலாந்து முழுக்க ஒமிக்ரான் பரவினாலும் அதிகமான பாதிப்புகளை ஏற்படுத்தவில்லை.

அமெரிக்க அதிபர் ஜோபிடன் ஒமிக்ரான் மட்டுமல்ல, கொரோனா தொற்றும் ஒரு நீண்டகால பிரச்னையாக இருக்காது என உறுதிபட கூறியுள்ளார். அமெரிக்காவிலும் ஒமிக்ரான் இறப்புகள் பதிவானதாக மருத்துவத்துறை நேரடியாக தெரிவிக்கவில்லை. தென்ஆப்பிரிக்காவின் சுகாதாரத்தலைமை, 'எங்களையே ஒமிக்ரான் ஒன்றும் செய்யவில்லை. இந்தியா போன்ற நாடுகள் ஒமிக்ரானை மிக எளிதாக கடந்து விடும். அச்சப்பட வேண்டாம்' என கூறி விட்டனர்.

அதேபோல் இந்தியாவின் எய்ம்ஸ் தலைமை, மருத்துவ கட்டுப்பாட்டு தலைமை, சென்னை ஸ்டான்லி மருத்துவமனை முதல்வர் உட்பட தமிழகத்தின் பல மருத்துவக் கல்லுாரி முதல்வர்கள், டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உட்பட அத்தனை பேருமே ஒமிக்ரான் தொற்று பெரிய பின்விளைவுகளை ஏற்படுத்தாது என உறுதிபட கூறியுள்ளனர்.

எப்போதும் உஷார் நிலையில் இருக்க வேண்டும் என கூறி வரும் நம் தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், 'ஒமிக்ரான் நுரையீரலை தொடவில்லை. எனவே, அதிக அச்சம் வேண்டாம். ஆனால், தடுப்பு நடவடிக்கைகளை முறையாக பின்பற்றியே ஆக வேண்டும்' என கூறியுள்ளார். நமது சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியம், தினந்தோறும், பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் 'தமிழகத்தில் ஒமிக்ரான் எவரெஸ்ட் சிகரம் போல் உயர்ந்து வருகிறது. ஆனால் மக்கள் அச்சப்பட வேண்டாம். மருத்துவத்துறை கட்டமைப்பு வலுவாக உள்ளது.' என கூறி வருகிறார். நமது பாரத பிரதமர் மோடி, ஒமிக்ரானை எதிர்கொள்ள தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மக்கள் அச்சப்பட வேண்டாம் என்ற வார்த்தைகளை பலமுறை பயன்படுத்தி உள்ளார்.

கொரோனா வந்தது முதல் கடந்த மூன்றாண்டுகளாகவே மக்களை கடுமையாக எச்சரித்து வந்த உலக சுகாதார நிறுவன விஞ்ஞானி சவுமியா சுவாமிநாதனே, முதன் முறையாக 'ஒமிக்ரான் பெரிய பின்விளைவுகளை ஏற்படுத்தாது. அதனால் முழு ஊரடங்கு தேவையில்லை. மக்கள் கொரோனாவுடன் வாழப்பழகிக் கொள்ள வேண்டும். கொரோனா நம்முடன் நீண்ட நாள் பயணிக்கும்' என கூறியுள்ளார்.

மருத்துவத்துறையின் பல நிபுணர்கள், கொரோனா முடிவுகாலத்தை நெருங்கி உள்ளது. இதுவரை கண்டறியப்பட்ட வைரஸ்களில் பீட்டா, டெல்டா உருமாற்ற வைரஸ்கள் தான் கடும் பாதிப்பினை ஏற்படுத்தின. ஒமிக்ரானோ அடுத்தடுத்து கண்டறியப்பட்டு வரும், டெலிமிக்ரான், புளோரோனா வைரஸ்கள் ஒமிக்ரானை போல் வீரியம் குறைந்தவை. இனி வரும் உருமாற்றங்கள் வீரியம் குறைந்தே இருக்கும். எனவே, இனிமேல் கொரோனா தொற்று பாதிப்பும், உயிரிழப்புகளும் முடிவுக்கு வரும் காலம் நெருங்கி விட்டது என கூறி வருகின்றனர்.

இந்நிலையில், உலக சுகாதார நிறுவனம் புதிதாக வெளியிட்டுள்ள அறிவிப்பில், 'இந்தியா ஒமிக்ரான் பரவலில் ஆபத்தான நாடுகள் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது. ஒமிக்ரானை அலட்சியப்படுத்தாதீர்கள். இதன் பாதிப்பால் மருத்துவமனையில் சேர்க்கப்படுபவர்களும் இருக்கிறார்கள். உயிரிழப்புகளும் பதிவாகின்றன' என எச்சரிக்கை விடுத்துள்ளது.

உலக சுகாதாரத்துறையும், ஒட்டுமொத்த தலைவர்களும் இவ்வளவு தைரியம் கூறிய பின்னரும், 'இந்தியாவின் சுகாதாரத்துறை பெரும் அச்சத்தில் தான் உறைந்துள்ளது' இதற்கு காரணம் என்ன என்பது குறித்து டாக்டர்கள் சிலரிடம் கேட்டோம், அவர்கள் கூறியதாவது: இதுவரை உலகம் பல்வேறு வைரஸ்களை பார்த்து விட்டது. அம்மை முதல் மலேரியா, டெங்கு, சிக்குன்குனியா, பறவைக்காய்ச்சல், பன்றிக்காய்ச்சல், எபோலா என இன்னமும் பல வைரஸ்கள் நம்முடன் இருந்து வருகிறது.

இந்த வைரஸ்கள் எல்லாம் உடலில் ஒரு குறிப்பிட்ட பாதிப்பை மட்டுமே ஏற்படுத்தும். அதனை மருத்துவ மேலாண்மை மூலம் சரி செய்து விட்டால், குணமடைந்து சென்று விடுவார்கள். எனவே,இதனை கையாள்வது எளிதாக இருந்தது. தற்போது வந்துள்ள கொரோனா அதிவேகமாக உருமாறுகிறது. தவிர கொரோனா பாதிப்பு பல்வேறு பிரச்னைகளை ஏற்படுத்தி வருகிறது. உடலின் அத்தனை உறுப்புகளையும் பாதிக்கிறது. உடல் உறுப்புகளில் ஆறு மாதம் வரை தங்கியிருந்து தொடர் பாதிப்பினை ஏற்படுத்துகிறது. ரத்தக்குழாய்களில் படிகிறது. ரத்தத்தை உறைய வைக்கிறது. இன்னும் பல்வேறு கெட்ட அறிகுறிகளை ஏற்படுத்துகி்றது.

கொரோனா பாதிப்புக்கு உள்ளானவர்களை குணமடைந்து விட்டனர் என அனுப்பி விட முடியாது. குணமடைந்த பின்னர் நோய் தொற்றுக்கு பிந்தைய பாதிப்புகளால் இறந்தவர்களே மிக அதிகம். எனவே, குணமடைந்த பின்னரும் குறைந்த பட்சம் ஆறு மாதம் முதல் 9 மாதம் வரை அவர்களுக்கு மருத்துவ கண்காணிப்பும், சிகிச்சையும் தேவைப்படுகிறது.

இந்தியாவில் சர்க்கரை நோய், ரத்தக்கொதிப்பு, புற்றுநோய், அலர்ஜி (ஒவ்வாமை), வயிற்று உபாதைகள், கல்லீரல் உபாதைகள், நுரையீரல் பிரச்னைகள், இருதய பிரச்னைகள், கிட்னி பிரச்னைகள், கண் பாதிப்பு குறைபாடு கொண்டவர்கள் பல கோடிப்பேர் உள்ளனர். இவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டால் முறையான கண்காணிப்பும், சிகிச்சையும் இல்லாவிட்டால் உயிரிழப்பு வரை கொண்டு சென்று விடும்.

தவிர இரண்டாம் அலையில் இந்தியாவை உலுக்கி எடுத்த டெல்டா இன்னும் நம்மை விட்டு அகலவில்லை. டெல்டா பாதிப்பும் இன்னும் தொடர்கிறது. ஒருவரை கொரோனா பாதித்தால் அது டெல்டாவா, ஒமிக்ரானா என்பதை கண்டறிவதும் கடும் சவாலான விஷயமாக உள்ளது. காரணம் சில நேரங்களில் டெல்டாவும் அமைதியாக இருந்து ஆளை கொன்று விடுகிறது. எனவே, ஒமிக்ரான் பரிசோதனையை உறுதிப்படுத்த நம்மிடம் போதிய கட்டமைப்புகள் இல்லை.

தவிர தடுப்பூசிகளின் நோய் எதிர்ப்புத் திறன் எத்தனை மாதம் என்பது முழுமையாக உறுதிப்படுத்தப்படவே இல்லை என்பது மறுக்க முடியாத உண்மை. தடுப்பூசிகள் பற்றிய பல்வேறு குழப்பங்களே விவாதப்பொருளாக மாறி உள்ளது. இந்த நிலையில், கொரோனா பற்றிய முழுமையான தரவுகள் எதுவும் நம் கையில் இல்லை. இது தான் கொரோனா, இதன் விளைவு இப்படித்தான் இருக்கும். இது தான் சிகிச்சை முறை என்பதை அறுதியிட்டு கூற முடியவில்லை.

இதுவரை மருத்துவ உலகத்தை இப்படி ஒரு வைரஸ் கலங்கடித்ததாக சரித்திரப்பதிவுகள் கூட இல்லை. இவ்வளவு துாரம் மருத்துவ உலகம் வளர்ந்த பின்னரும், இந்த வைரஸ், குழப்பத்தை ஏற்படுத்தியே வருகிறது. இதனால் இவ்வளவு பெரிய மக்கள் தொகை கொண்ட இந்தியாவில், அச்சப்படாமல் எப்படி இருக்க முடியும்? என டாக்டர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

'எது எப்படியோ முயற்சி நம்மிடம், முடிவு இறைவனிடம்' என்ற ரீதியில் தான் தற்போதய சிகிச்சை முறைகள் இந்தியாவில் உள்ளன என்பது மட்டும் திட்டவட்டம். மற்றபடி கொரோனா பற்றி நான் சொல்வது மட்டுமே உண்மை என்று கூறக்கூடிய உறுதியான விஞ்ஞானியோ, டாக்டரோ, மருத்துவ அமைப்புகளோ இதுவரை கண்டறியப்படவில்லை என்பதும் நிதர்சனமான உண்மை. எனவே,ஒமிக்ரான் ஒன்றுமில்லை என்றாலும் அச்சம் தொடர இதுவே காரணம் என டாக்டர்கள் விளக்கம் அளித்தனர்.

Tags

Next Story
100% இத மட்டும் ஃபாலோ பண்ணுங்க.. ஒரே மாசத்துல 10,12 கிலோ எடை குறையலாம்..! ரொம்ப ஈஸியா..! | Easy weight loss diet plan in Tamil