சந்திரயான்-3 உறக்கத்திலிருந்து எழுந்திருப்பது எப்பொழுது... இஸ்ரோ தகவல்
பைல் படம்
சந்திரயான் 3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் மற்றும் பிரக்யான் ரோவர் தற்போது நிலவில் தூக்கத்தில் இருக்கும் நிலையில் மீண்டும் சூரிய ஒளி வரும்போது இவை இரண்டும் தனது தூக்க நிலையில் இருந்து வெளிவந்து தனது பணிகளை தொடங்கும் என இஸ்ரோ நம்பிக்கை தெரிவித்துள்ளது.
இந்தியாவின் கனவு திட்டமான சந்திரயான் 3 விண்கலம் கடந்த ஜூலை மாதம் 14ஆம் தேதி விண்ணில் ஏவப்பட்டு கடந்த ஆகஸ்ட் மாதம் 23ஆம் தேதி வெற்றிகரமாக நிலவில் சாஃப்ட் லேண்டிங் செய்யப்பட்டது. அதன்படி விக்ரம் லேண்டர் மற்றும் பிரக்யான் ரோவர் இஸ்ரோ திட்டமிட்டபடி நிலவில் தரையிறங்கி மிகப்பெரிய சாதனையை படைத்தது.
அதன்படி இந்தியா நிலவில் தரையிறங்கிய நான்காவது நாடாகவும் தென் துருவப் பகுதியில் தரையிறங்கிய முதல் நாடாகவும் மாறியுள்ளது. இந்த சாதனையை செய்த இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு உலகம் முழுவதும் இருந்து பாராட்டுகளும் வாழ்த்துகளும் குவிந்தது. அதன் பின் திட்டமிட்டபடி விக்ரம் லேண்டர் மற்றும் அதன் உள்ளிருந்த பிரக்யான் ரோவர் தனது பணிகளை துவக்கியது.
இஸ்ரோ விஞ்ஞானிகள் திட்டமிட்டபடி இந்த லேண்டர் மற்றும் ரோவர் ஆகியவை தனது பணிகளை செய்து பூமிக்கு இது குறித்த தகவல்களை அனுப்பி வைத்தது. இந்த லேண்டரும் சரி ரோவரும் சரி சூரிய மின்சக்தியால் இயங்கும் திறன் கொண்டவையாக வடிவமைக்கப்பட்டன. இதனால் இது நிலவில் சூரிய ஒளி இருக்கும் நேரம் மட்டுமே செயல்படும் வகையில் உருவாக்கப்பட்டது.
விக்ரம் லேண்டர் நிலவில் தரை இறங்கிய அடுத்த 14 நாட்களுக்கு அது தரையிறங்கிய இடத்தில் சூரிய ஒளி இருந்தது. அந்த சூரிய ஒளியை பயன்படுத்தி லேண்டரும்,ரோவரும் செயல்பட்டது. நிலவில் 14 நாட்கள் பகலும் 14 நாட்கள் இரவும் இருக்கும். இதை கணக்கிட்டு 14 நாட்கள் தனது பணியை செய்த லேண்டர் மற்றும் ரோவர் சூரிய ஒளி மறையும் தருவாயில் உறக்க நிலைக்கு கொண்டு செல்லப்பட்டது.
தற்போது நிலவில் விக்ரம் லேண்டர் தரை இயங்கிய பகுதி இருள் சூழ்ந்த இரவு நேர பகுதியாக இருப்பதால் லேண்டரும் ரோவரும் உறக்க நிலையில் இருக்கிறது. இதனால் தற்போது அந்த லேண்டர் மற்றும் ரோவர் இஸ்ரோ உடன் தொடர்பு இல்லாமல் இருக்கிறது. இதனால் இஸ்ரோ விஞ்ஞானிகள் அங்கு பகல் வருவதற்காக காத்திருக்கின்றனர்.
இந்நிலையில் இஸ்ரோ விஞ்ஞானிகள் இந்த லேண்டரையும், ரோவரையும் வடிவமைக்கப்படும்போதே மீண்டும் சூரிய ஒளி வரும்போது இது தன்னைத்தானே செயல்படுத்திக் கொள்ளும் வகையில் உருவாக்கியுள்ளனர். அதன்படி தற்போது விக்ரம் லேண்டர் தர இயங்கிய பகுதியில் சூரிய ஒளி எப்பொழுது வரும் என்ற தகவலை தற்போது இஸ்ரோ வெளியிட்டுள்ளது.
அதன்படி வரும் 22 ஆம் தேதி நிலவில் விக்ரம் லேண்டர் தரை இறங்கிய பகுதியில் சூரிய ஒளி வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படியாக சூரிய ஒளி வரும்போது விக்ரம் லேண்டரும் பிரக்யான் ரோவரும் மீண்டும் தன்னை உயிர்ப்பித்துக் கொண்டு தனது ஆய்வுப் பணிகளை நிலவில் தொடங்கும் என எதிர்பார்க்கலாம். திட்டமிட்டபடி அனைத்தும் நடந்து வருவதால் லேண்டரும் ரோவரும் உறக்கத்திலிருந்து விழித்துக் கொள்ளும் என இஸ்ரோ நம்பிக்கை தெரிவித்துள்ளது.
இப்படியாக விக்ரம் லேண்டர், பிரக்யான் விழித்துக் கொண்டால் மீண்டும் தனது ஆய்வு பணிகளை மேற்கொண்டு பூமிக்கு தகவல்களை அனுப்பும் இந்த தரவுகள் இஸ்ரோ விஞ்ஞானிகள் நிலவு குறித்து மேலும் ஆழமான புரிதல்களை மேற்கொள்ள முடியும் என இஸ்ரோ தெரிவித்துள்ளது. இந்த தரவுகள் எதிர்காலத்தில் இஸ்ரோ நிலவிற்கு மனிதர்களை அனுப்பும் போது மிகவும் பயனுள்ளதாக இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu