நிலச்சரிவால் நிலைகுலைந்த வயநாடு உயிரிழப்பு 159ஐ தாண்டுகிறது

நிலச்சரிவால் நிலைகுலைந்த வயநாடு  உயிரிழப்பு 159ஐ தாண்டுகிறது
X

அடித்துச்செல்லப்பட்ட நிலப்பரப்பு சேரும் சகதியுமாக காட்சி தருகிறது.

கேரள மாநிலம் வயநாடு நிலச்சரிவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 159-ஆக உயர்ந்துள்ளது.

கேரளா வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி மண்ணில் புதையுண்ட குழந்தைகள் உட்பட இதுவரை 159 பேர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்த 50 பேர் வரை அடையாளம் காணப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

வயநாட்டில் நேற்று அதிகாலை ஏற்பட்ட நிலச்சரிவு சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. சுமார் 400-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் நிலச்சரிவில் சிக்கியிருக்கின்றன. முற்றிலும் மூன்று கிராமங்கள் மூழ்கி உள்ளன. பல இடங்களில் பாலங்கள் அடித்துச் சென்றதால் மீட்புக் குழுக்கள் அந்த இடங்களுக்கு செல்ல முடியாத சூழல் நிலவுகிறது. இந்த நிலையில், நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 159ஆக உயர்ந்திருக்கிறது.

கேரளாவில் நிலச்சரிவால் கடுமையாக பாதிக்கப்பட்ட முண்டகையில் மீட்பு பணியில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ள நிலையில், வான்வழியாக ஹெலிகாப்டர் சென்றாலும், தரையிறங்குவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.

மேலும், 400-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் நிலச்சரிவில் சிக்கியிருப்பதாகக் கூறப்படுகிறது. தொடர்ந்து மாநில அரசு தேவையான மீட்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. பிரதமர் மோடியும் தேவையான உதவிகளை செய்வதாக முதல்வர் பினராயி விஜயனிடம் உறுதியளித்திருக்கிறார்.

இந்த நிலையில், மாநிலங்களவையில் வயநாடு நிலச்சரிவு குறித்து உரையாற்றிய மத்திய அமைச்சர் ஜே.பி.நட்டா, ``இது கேரளாவுக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த தேசத்துக்கும் ஏற்பட்ட சோகம். பிரதமர் மோடி தலைமையில் கேரளாவில் இந்திய அரசு நிவாரணப் பணிகளுக்கு தேவையான அனைத்தையும் செய்து வருகிறது. மாநில அரசுடன் ஒருங்கிணைந்து பணிகள் நடைபெற்று வருகின்றன. தற்போது, உடல்களை மீட்பதும், காப்பாற்றப்படக்கூடியவர்களைக் மீட்பதும் தான் முதன்மையானது. குறிப்பாக, அவசரகால பதிலளிப்பு முறையை (Emergency Response System) நாம் செயல்படுத்த வேண்டும் " என்று கூறினார்.

கேரளாவின் வயநாட்டில், சூரல் மலை, மேப்பாடி, முண்டகை ஆகிய பகுதிகளில் இன்று அதிகாலை ஏற்பட்ட மிகப்பெரிய நிலச்சரிவு கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. 159உடல்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில் 400-கும் மேற்பட்டோர் நிலச்சரிவில் சிக்கியிருக்கக் கூடும் என்று தெரிவிக்கப்படுகிறது. மீட்புக் குழுவினர் தீவிர பணிகளில் ஈடுபட்டு வரும் அதேவேளையில், பல இடங்களில் முக்கியமான பாலங்கள் நிலச்சரிவில் அடித்துச் செல்லப்பட்டதால் வாகனங்கள் அங்கு செல்ல முடியாத சூழல் ஏற்பட்டிருக்கிறது.

இந்த நிலையில் தமிழக முதல்வர் ஸ்டாலின், ``வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவு மற்றும் விலைமதிப்பற்ற உயிர்கள் பறிபோனதைப் பற்றி மிகவும் வேதனையடைந்தேன். இன்னும் பலர் நிலச்சரிவில் சிக்கியிருப்பதை புரிந்துகொள்ள முடிகிறது. அதேசமயம், முழுவீச்சில் நடைபெற்று வரும் மீட்புப் பணிகள் அனைவரையும் காப்பாற்றும் என்று நான் நம்புகிறேன். இந்த நெருக்கடியான நேரத்தில் தேவைப்படும் தளவாட அல்லது மனிதவள ஆதரவை நமது சகோதர மாநிலமான கேரளாவுக்கு வழங்க தமிழக அரசு தயாராக உள்ளது'' என்று அறிவித்திருக்கிறார்.

மேலும், தமிழக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, ``கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 159 பேர் உயிரிழந்ததாக வரும் செய்தி கேட்டு மிகுந்த துயருற்றேன். உயிரிழந்தோர் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கல். மேலும், இந்நிலச்சரிவில் 400-க்கும் மேற்பட்டோர் சிக்கியுள்ளதாகச் செய்திகள் வரும் நிலையில், அனைவரும் பாதுகாப்பாக மீட்கப்பட அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ள வேண்டுமென கேரள அரசையும், மீட்புப் பணிகளில் கேரள மாநில அரசுக்கு தேவைப்படும் அனைத்து உதவிகளையும் செய்துக்கொடுக்குமாறு மத்திய அரசையும் வலியுறுத்துகிறேன். நம் அண்டை மாநில சகோதரர்களுக்கு இத்தகு துயர்மிகு நேரத்தில் உறுதுணையாக இருக்குமாறு தமிழக அரசைக் கேட்டுக்கொள்கிறேன்" என்று ட்வீட் செய்திருக்கிறார்.

Tags

Next Story