வயநாட்டில் மூன்று இடங்களில் நிலச்சரிவு..!
வயநாட்டில் ஏற்பட்டுள்ள வெள்ளத்தின் கோரத்தாண்டவம்.
கேரளா மாநிலம் வயநாட்டில் மூன்று இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுளளது. அது தொடர்பான செய்திகளின் தொகுப்பு:
கேரள மாநிலம் வயநாட்டில் தொடர்ச்சியாகப் பெய்துவரும் கனமழையால் சூரல் மலை, மேப்பாடி, முண்டகை ஆகிய பகுதிகளில் இன்று அதிகாலையில் நிலச்சரிவு ஏற்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த நிலச்சரிவில் 19 பேர் சிக்கி உயிரிழந்திருப்பதாகக் கூறப்படுகிறது.
மேலும், நூற்றுக்கணக்கானோர் நிலச்சரிவில் சிக்கியிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. தொடர்ந்து மீட்புக் குழுவினர் தீவிர மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோருக்கு இரங்கல் தெரிவித்திருக்கும் வயநாடு தொகுதியின் முன்னாள் எம்.பி ராகுல் காந்தி, ``வயநாட்டில் மேப்பாடி அருகே ஏற்பட்ட பெரும் நிலச்சரிவால் மிகவும் வேதனையடைந்தேன். தங்கள் அன்புக்குரியவர்களை இழந்து வாடும் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல். சிக்கியவர்கள் விரைவில் பாதுகாப்பாக மீட்கப்படுவார்கள் என்று நம்புகிறேன்.
கேரள முதல்வர் மற்றும் வயநாடு மாவட்ட ஆட்சியர் ஆகியோரிடம் பேசியதில், மீட்புப் பணிகள் நடைபெற்று வருவதாக உறுதியளித்தனர். அனைத்து ஏஜென்சிகளுடனும் ஒருங்கிணைப்பை உறுதி செய்யவும், கட்டுப்பாட்டு அறையை அமைக்கவும், நிவாரணப் பணிகளுக்குத் தேவையான உதவிகளைத் தெரியப்படுத்துமாறும் அவர்களிடம் கேட்டுக் கொண்டேன்.
வயநாட்டுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்யுமாறு மத்திய அமைச்சர்களிடம் கேட்டுக் கொள்கிறேன். மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் நிர்வாகத்துக்கு உதவுமாறு அனைத்து UDF ஊழியர்களையும் நான் கேட்டுக்கொள்கிறேன்" என்று ட்வீட் செய்திருக்கிறார்.
அதேபோல் பிரமர் மோடி, நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் உதவுவதற்காக தற்போது மீட்புப் பணிகள் நடைபெற்று வருவதாகவும், முதல்வர் பினராயி விஜயனிடம் பேசி மத்திய அரசின் அனைத்து உதவிகளையும் அளிக்க உறுதியளித்திருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார்.
கேரள மாநிலம் வயநாட்டில் தொடர் மழையின் தீவிரத்தை தாக்குப்பிடிக்க முடியாமல் 3 இடங்களில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டிருக்கிறது. இந்நிலையில் தேசிய சுகாதார இயக்கம் சார்பில் உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 9656938689 மற்றும் 8086010833 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு தகவல்கள பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
உதவிக்கு வந்த விமானப்படை:
வயநாடு நிலச்சரிவில் மிகப்பெரிய அளவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக பாலங்கள் அடித்து செல்லப்பட்டிருப்பதால், அங்கு மீட்புக்குழுவினர் செல்வதில் சிக்கல் ஏற்பட்டிருக்கிறது. இதனால் விமானப்படை உதவிக்கு வந்துள்ளது. சூலூர் பகுதியில் இருந்து விமானப்படைக்கு சொந்தமான விமானங்கள் செல்கிறது.
வயநாட்டில் கடந்த ஒரு மாதமாக தென்மேற்கு பருவமழை கொட்டித் தீர்த்து வருகிறது. தொடர் கனமழையால் வயநாட்டின் பல பகுதிகளிலும் வெள்ள பாதிப்புகளும் சில உயிரிழப்புகளும் ஏற்பட்டு வந்தன. இந்நிலையில், இன்று அதிகாலையில் வயநாட்டின் மூன்று இடங்களில் அடுத்தடுத்து ஏற்பட்ட மிகப்பெரிய நிலச்சரிவுகள் ஒட்டு மொத்த வயநாட்டையும் புரட்டிப் போட்டிருக்கிறது.
சூரல் மலை, மேப்பாடி, முண்டகை ஆகிய பகுதிகளில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் 107 பேரை சடலமாக மீட்டுள்ளனர். மேலும் பலர் மண்ணுக்குள் புதைந்திருக்கலாம் என்ற அச்சத்தில் தேடி வருகின்றனர். நிலச்சரிவால் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக நூற்றுக்கணக்கான குடும்பங்கள் அந்த பகுதிகளில் இருந்து வெளியேற முடியாமல் சிக்கித் தவித்து வருகின்றனர். பல்வேறு இடர்பாடுகளுக்கு மத்தியில் மீட்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
பயங்கர நிலச்சரிவு பேசிய பேரிடர் மேலாண்மை அதிகாரிகள், "நேற்று காலையிலிருந்தே மழையின் தீவிரம் அதிகமாக இருந்தது. இடைவிடாது தொடர்ந்து பெய்த மழையில் பல பகுதிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வந்தது. மழையின் தீவிரத்தை தாக்குப்பிடிக்க முடியாமல் 3 இடங்களில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டிருக்கிறது.
எவ்வளவு பெரிய பாதிப்பு எவ்வளவு பேர் உயிரிழப்பு என்பதை கணக்கிட முடியாத நிலையில் இருக்கிறது. மனித உடல்கள், மரக்குவியல்கள், சிதைந்த வாகனங்கள் என திரும்பும் பக்கம் எல்லாமே கோரமாக இருக்கிறது . ஹெலிகாப்டர் மற்றும் ராணுவ உதவி தேவைப்படுகிறது. நிலச்சரிவு பாதிப்பின் முழு கோரத்தை அறிய இன்னும் சில மணி நேரங்கள் தேவைப்படும் " என்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu