மல்யுத்த வீராங்கனைகளுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்றே விரும்புகிறோம்: அனுராக் தாக்கூர்
இந்திய மல்யுத்த சம்மேளன தலைவர் பிரிஜ் பூஷன் சரண் சிங்குக்கு எதிராக பாலியல் தொந்தரவு புகார் கூறும் மல்யுத்த வீராங்கனைகள், அவரை கைது செய்ய வலியுறுத்தி தொடர் போராட்டம் நடத்திவருகிறார்கள். போராட்டத்தின் ஒருபகுதியாக தங்களின் பதக்கங்களை கங்கை நதியில் வீசச் சென்றதும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் டெல்லியில் நடைபெற்ற இந்தியா பொருளாதார மாநாட்டின் உரையாடல் நிகழ்வில் மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் பங்கேற்று பேசினார். அப்போது அவர் கூறுகையில்
'மல்யுத்த சம்மேளன தலைவர் பிரிஜ் பூஷனுக்கு எதிராக கூறப்படும் குற்றச்சாட்டுகள் குறித்து அரசு நியமித்த குழுவின் அறிக்கையை தொடர்ந்து அவர் மீது டெல்லி போலீஸ் வழக்குப் பதிவு செய்து விசாரித்துவருகிறது. பாரபட்சமற்ற விசாரணைக்கு ஆதரவாகத்தான் அரசு உள்ளது. மல்யுத்த வீராங்கனைகளுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்றே நாம் அனைவரும் விரும்புகிறோம். ஆனால் உரிய சட்ட நடைமுறைக்குப் பின்பே அது நடக்கும்.
இந்த வழக்கு விசாரணையில் பாரபட்சம் என்ற பேச்சுக்கே இடமில்லை. டெல்லி காவல்துறை விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யும் என்று எதிர்பார்க்கிறோம். விரைவான விசாரணைக்கு ஆதரவாகவே நாங்கள் உள்ளோம்.
பிரிஜ் பூஷன் மீதான குற்றச்சாட்டுகளை விசாரிக்க குழு அமைப்பு, மல்யுத்த சம்மேளன நிர்வாகத்தை கவனிக்க ஒரு குழுவை நியமிக்க இந்திய ஒலிம்பிக் சங்கத்தை கேட்டுக்கொண்டது என மல்யுத்த வீரர், வீராங்கனைகளின் ஒவ்வொரு கோரிக்கையையும் அரசு ஏற்றது. ஒரு வீராங்கனைக்கு எதிராகவோ அல்லது ஒரு பெண்ணுக்கு எதிராகவோ அராஜகம் நடந்தால், உடனடியாக அவருக்கு நீதி கிடைக்க வேண்டும்.
பிரிஜ் பூஷன் தொடர்பாக மல்யுத்த வீராங்கனைகள் குறிப்பிடும் சம்பவங்கள் 7 ஆண்டுகளுக்கு முன் நடந்ததாக கூறப்படுகிறது. அவருக்கு எதிராக எந்த காவல் நிலையத்திலும் வழக்கு பதிவு செய்யலாம் என்று மல்யுத்த வீராங்கனைகளிடம் தெரிவிக்கப்பட்டது. ஆனால் அவர்கள்தான் அரசு தலையிட வேண்டும் என்று கூறினர் என்று தெரிவித்தார்
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu