76-வது உலக சுகாதார சபைக்கூட்டத்தில் மத்திய அமைச்சர் பேச்சு
பைல் படம்
மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர். மன்சுக் மாண்டவியா, ஜெனீவாவில் நடைபெற்று வரும் 76-வது உலக சுகாதார மாநாட்டின் போது, காசநோய் (டிபி) குறித்த நிகழ்வில் உரையாற்றினார். காசநோயால் ஏற்படும் சர்வதேச சுகாதார சவாலைச் சமாளிக்கும் வகையில், க்வாட் ப்ளஸ் நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகளும் இதில் பங்கேற்றனர்.
காசநோயைத் தடுப்பதற்கான இந்தியாவின் முயற்சிகளை விளக்கிய டாக்டர். மாண்டவியா, இந்த ஆண்டு, இந்தியாவில் உலக காசநோய் தினத்தை ஒட்டி மாநாடு நடைபெற்றதாகக் கூறினார். செப்டம்பரில் நடைபெறவுள்ள காசநோய் குறித்து வரவிருக்கும் ஐ.நா உயர்மட்டக் கூட்டத்தின் முக்கியத்துவத்தைக் குறிப்பிட்ட டாக்டர் மாண்டவியா, இது காசநோயை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான கூட்டு முயற்சி எனக் கூறினார்.
காசநோயைக் கட்டுப்படுத்துவதில் இந்தியாவின் இடைவிடாத முயற்சிகள் குறிப்பிடத்தக்க விளைவுகளைத் தந்துள்ளதாக டாக்டர் மாண்டவியா கூறினார். 2015 முதல் 2022 வரை நாட்டில் காசநோய் பாதிப்பு 13% குறைந்துள்ளதாகவும், இது சர்வதேச குறைப்பு விகிதமான 10%-தை விட அதிகம் எனவும் அவர் கூறினார். இதே காலகட்டத்தில் இந்தியாவில் காசநோய் இறப்பு விகிதம் 15% குறைந்துள்ளதாகவும், சர்வதேச விகிதம் 5.9% எனவும் டாக்டர் மாண்டவியா கூறினார்.
காசநோய்க்கு எதிரான போராட்டத்தில் தடுப்பூசியை உருவாக்குவதன் அவசியத்தை டாக்டர் மாண்டவியா சுட்டிக் காட்டினார். 2030-ம் ஆண்டுக்குள் காசநோயை உலகிலிருந்து அகற்ற முடியும் என்ற நம்பிக்கையை வெளிப்படுத்தி டாக்டர் மாண்டவியா தனது உரையை நிறைவு செய்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu