`முதல்வர் வேட்பாளர்’ அறிவிப்பை எதிர்பார்க்கும் உத்தவ் தாக்கரே?
ராகுலுடன் உத்தவ்தாக்கரே....
மகாராஷ்டிரா முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரே மூன்று நாள் பயணமாக டெல்லி சென்றுள்ளார். அவர் டெல்லியில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி ஆகியோரை சந்தித்து பேசினார். அவருடன் சிவசேனா(உத்தவ்) எம்.பி.சஞ்சய் ராவத்தும் உடன் சென்றார். இச்சந்திப்பை தொடர்ந்து உத்தவ் தாக்கரே தனது மனைவி மற்றும் மகன் ஆதித்ய தாக்கரேயுடன் சென்று காங்கிரஸ் நடாளுமன்ற தலைவர் சோனியா காந்தியை சந்தித்து பேசினார்.
சோனியா காந்தியுடனான சந்திப்பு அரசியல் ரீதியாக மட்டுமல்லாது குடும்ப சந்திப்பதாக இருந்ததாக சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார். இச்சந்திப்பின் போது சரத்பவாரோ அல்லது காங்கிரஸ் தலைவர்களோ உடனிருக்கவில்லை. இச்சந்திப்பின் மூலம் சோனியா காந்தி குடும்பத்துடன் உத்தவ் தாக்கரே தனது நெருக்கத்தை அதிகரித்துக்கொண்டதோடு நேரடி தொடர்பையும் ஏற்படுத்திக்கொண்டார்.
எதிர்காலத்தில் கூட்டணி தொகுதி பங்கீட்டில் எதாவது கருத்து வேறுபாடு ஏற்பட்டாலும் சோனியா காந்தியிடம் நேரடியாக இனி உத்தவ் தாக்கரேயால் பேச முடியும் என்று அரசியல் பார்வையாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். முன்னதாக சரத்பவார் மற்றும் காங்கிரஸ் மூத்த தலைவர் வேணுகோபால் ஆகியோரை சந்தித்து பேசிய உத்தவ் தாக்கரே மகாராஷ்டிரா சட்டமன்ற தேர்தலுக்கான தொகுதி பங்கீடு குறித்து விவாதித்தார்.
தொகுதி பங்கீட்டில் வெற்றிக்கான சாத்தியக்கூறுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும் என்றும், விரிவான ஆய்வுக்கு பிறகு தொகுதி பங்கீட்டை இறுதி செய்யவேண்டும் என்று கேட்டுக்கொண்டார். அதோடு தேர்தல் அறிக்கையை மூன்று கட்சிகளும் சேர்ந்து தயாரிப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
அதோடு தன்னை மகாவிகாஷ் அகாடியின் முதல்வர் வேட்பாளராக நிறுத்தினால் அதனை ஏற்றுக்கொள்ள தயாராக இருப்பதாக உத்தவ் தாக்கரே தெரிவித்தாகவும் தகவல் வெளியானது. ஆனால் மகாவிகாஷ் அகாடி தலைவர்கள் அதனை ஏற்றுக்கொள்ள தயாராக இல்லை என்றும், தேர்தலுக்கு பிறகுதான் முதல்வர் யார் என்பது முடிவு செய்யப்படும் என்றும் மகாவிகாஷ் அகாடி தலைவர்கள் தெரிவித்து விட்டனர் என்று சொல்லப்படுகிறது.
இதனிடையே சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் அதிக தொகுதியில் போட்டியிட இலக்கு நிர்ணயித்து இருக்கிறது. அப்படி அதிக தொகுதியில் போட்டியிடுவதன் மூலம் முதல்வர் பதவியை கைப்பற்ற காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது. மூன்று நாள் பயணத்தின் இறுதி நாளில் டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவாலின் மனைவி சுனிதா, துணை ஜனாதிபதி ஜெக்தீப் தக்னர், மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் ஆகியோரையும் உத்தவ் தாக்கரே சந்தித்து பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu