திருவனந்தபுரம்- திருச்சி வழியாக ஜம்மு வரை ஜூலை 1 ல் சிறப்பு ரயில்
பைல்
திருச்சி, தஞ்சாவூர், கும்பகோணம் வழியாக ஜம்மு காஷ்மீர் மாநிலம் கத்ராவில் உள்ள மாதா வைஷ்ணவ தேவி கோயிலுக்கு நேரடியாக சுற்றுலா ரயிலை வரும் ஜூலை 1-ம் தேதி முதல் இயக்க இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகம் முடிவு செய்துள்ளது.
பாரத் கவ்ரவ் சுற்றுலா ரயில் வரிசையில் இந்த ரயிலையும் ஜூலை 1-ம் தேதி திருவனந்தபுரம், கொச்சுவேலியில் காலை புறப்பட்டு திருச்சி, தஞ்சாவூர் மற்றும் கும்பகோணத்திற்கு அன்று மாலை வந்து சேரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அங்கிருந்து ஆன்மிக சுற்றுலாப் பயணிகளை ஏற்றிக் கொண்டு சென்னை வழியாக ஜூலை 3-ம் தேதி ஹைதராபாத் நகரில் டெக்கான் சார்மினார், கோல்கொண்டா, ஜூலை 5-ம் தேதி ஆக்ராவில் தாஜ்மகால், மதுராவில் கிருஷ்ணர் பிறப்பிடம், ஜூலை 6-ம் தேதி கத்ராவில் மாதா வைஷ்ணவ் தேவி கோயில் உள்ளிட்ட இடங்களுக்கு அழைத்துச் செல்ல திட்டமிடப்பட்டுள்ளது.
பின்னர், அங்கிருந்து 8-ம் தேதி பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் பொற்கோயில் மற்றும் இந்திய பாகிஸ்தான் எல்லையான இட்டாரி (வாஹா) பார்த்த பின்னர் புதுடெல்லியில் குதுப்மினார், இந்தியா கேட், இந்திராகாந்தி அருங்காட்சியகம், அஷர்தம் கோயில், லோட்டஸ் கோயில் ஆகிய இடங்களுக்கு அழைத்துச் செல்லப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னர் இந்தச் சிறப்பு சுற்றுலா ரயில் அடுத்த மாதம் 12-ம் தேதி மாலை கும்பகோணம் மற்றும் தஞ்சாவூருக்கு மீண்டும் வந்தடைகிறது. இந்த ரயிலில் சுற்றுலா பயணிகளுக்கு மட்டுமே அனுமதி. ஒரு நபருக்குச் சாதாரண படுக்கை வசதி ரூ. 22,350-ம், குளிர்சாதன படுக்கை வசதியுடன் ரூ.40,380-ம் எனக் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விபரங்கள் மற்றும் முன்பதிவிற்கு IRCTC இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu