சுங்கச்சாவடி கட்டண வசூல் எவ்வளவு தெரியுமா?
கோப்பு படம்
சாலை வழிப்போக்குவரத்தில் மிகப்பெரிய சங்கடமாக இருப்பது சுங்கச்சாவடிகளும், சுங்கக் கட்டணங்களும் தான். அப்படிப் பார்த்தால், நாடு முழுவதும் மிகச் சரியாக 983 சுங்கச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் பாதிக்கும் மேற்பட்டவை கடந்த ஐந்து ஆண்டுகளில் கட்டப்பட்டவை. இப்படி கிட்டத்தட்ட 983 சுங்கச்சாவடிகள் இயங்கி வரும் நிலையில், இதில் ஐந்து சுங்கச்சாவடிகள், நாள் ஒன்றுக்கு தலா ரு.1 கோடிக்கும் அதிகமாக வசூலித்து வருகின்றன.
உத்தரப்பிரதேசம், மேற்கு வங்கம், ராஜஸ்தான், குஜராத், ஹரியாணா ஆகிய மாநிலங்களில் தலா ஒரு சுங்கச்சாவடிகள் தான் இப்படி நாள்தோறும் கோடிக்கணக்கில் கட்டணத்தை வசூலித்து கல்லாவை நிரப்பி வருபவை.
மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறையின் தரவுகளின்படி, குஜராத் மாநிலத்தில் உள்ள பரதனா சுங்கச்சாவடி, கடந்த 2023 - 24ஆம் நிதியாண்டில், ரூ.475.65 கோடி வசூலித்துள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகளில் இது வசூலித்த தொகை ரூ.2,043.80 கோடியாக உள்ளது.
இதுதான் நாட்டிலேயே அதிக சுங்கக் கட்டணம் வசூலிக்கும் சுங்கச்சாவடி என்றும் அறியப்படுகிறது. அடுத்து ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஷாஜஹான்பூர் சுங்கச்சாவடி. இங்கு கடந்த நிதியாண்டில் ரூ.429.65 கோடி ஈட்டப்பட்டுள்ளது. நாட்டிலேயே இதுதான் இரண்டாவது அதிகபட்ச வசூலாக உள்ளது.
மூன்றாவது இடத்தில் ரூ.4,026 கோடியுடன் ஹரியாணா மாநிலத்தின் கரோண்டாவும், 4வது இடத்தில் ஆண்டுக்கு ரூ.369 கோடியுடன் மேற்கு வங்கத்தின் சுங்கச் சாவடியும், ஐந்தாவது இடத்தில் ஆண்டுக்கு ரூ.364 கோடியுடன் உத்தரப்பிரதேச மாநில சுங்கச் சாவடியும் இடம்பெற்றுள்ளன.
கடந்த 2019 - 20 மற்றும் 2023-24ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் நாடு முழுவதும் இவ்வாறு வாகன ஓட்டிகளிடம் வாங்கப்பட்ட சுங்கக் கட்டணம் ரூ.1.94 லட்சம் கோடி. அதிக சுங்கக் கட்டணம் வசூலித்த மாநிலங்களின் பட்டியலில் உத்தரப்பிரதேசம் முதலிடத்தில் உள்ளது.
இங்கு மட்டும் ரூ.23,736.45 கோடி வசூலிக்கப்பட்டுள்ளது. அதிக பட்சமாக சுங்கச் சாவடிகளைக் கொண்ட மாநிலங்களின் வரிசையில்முதலிடத்தில் இருப்பது ராஜஸ்தான். இங்கு மட்டும் 142 சுங்கச் சாவடிகள் உள்ளன. உத்தரப்பிரதேசத்தில் 102 உள்ளன. கடந்த ஐந்து ஆண்டுகளில் 457 சுங்கச்சாவடிகள் கட்டப்பட்டுள்ளன.
கடந்த 2022 - 23ல் மட்டும் 107 சுங்கச்சாவடிகள் உதயமாகியிருக்கின்றன. இதில், 58 ராஜஸ்தான் மாநிலத்திலும், 57 மத்தியப் பிரதேசத்திலும், 52 உத்தரப்பிரதேசத்திலும் தொடங்கப்பட்டவை.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu