செயற்கைகோள் மூலம் சுங்க கட்டணம் வசூல்..!
சுங்க கட்டண வசூல் முறை (மாதிரி படம்)
சுங்கக்கட்டணம் வசூலிக்கும் முறையில் மத்திய அரசு பெரிய மாற்றத்தை கொண்டுவர திட்டமிட்டுள்ளது. செயற்கைகோள் மூலமாக சுங்கக்கட்டணம் வசூலிக்கும் முறையை கொண்டுவரவுள்ளது. இதனால் நெடுஞ்சாலையில் நீங்கள் பயணிக்கும் தூரம் வரையிலான கட்டணத்தை மட்டுமே செலுத்தினால் போதும், தற்போதுள்ள நடைமுறைப்படி முழுமையான சாலைக்கான கட்டணம் செலுத்த வேண்டியது இல்லை.
இந்த புதிய முறை, நாடு முழுவதும் சில நெடுஞ்சாலைகளிலும், விரைவுச்சாலைகளிலும் இரண்டு நாட்களுக்கு முன் அமலுக்கு வந்துள்ளது. இதற்காக 2008-ம் ஆண்டின் தேசிய நெடுஞ்சாலை கட்டண விதிகளில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. இதன்படி, வாகனங்களில், செயற்கைக்கோள் இணைப்புக்கான ஆன்-போர்டு யூனிட் எனப்படும் சிறிய ஓ.பி.யு. கருவி வெளிப்புறத்தில் பொருத்தப்படும்.
இந்த கருவி பொருத்தப்பட்ட வாகனம், சுங்க கட்டணம் வசூலிக்கும் சாலைகளில் பயணிக்கும் போது, நாள் ஒன்றுக்கு, முதல் 20 கி.மீ.க்கு கட்டணம் கிடையாது. அதன்பிறகு பயணிக்கும் தூரம், செயற்கைக்கோள் வழியாக கணக்கிடப்பட்டு, 'பாஸ்டேக்' போலவே வங்கிக்கணக்கில் இருந்து சுங்கக் கட்டணம் பிடித்தம் செய்யப்படும்.
ஓ.பி.யு. கருவி வாயிலாக ஜி.பி.எஸ். தொழில்நுட்பத்தில் செயற்கைக்கோளுடன் இணைப்பு ஏற்பட்டு வாகன பயண தூரம் பின் தொடரப்படும். குறிப்பிட்ட தொலைவுகளில் பொருத்தப்படும் கண்காணிப்பு கேமராவின் பதிவுகளும் செயற்கைக்கோளுடன் ஒருங்கிணைக்கப்படும். ஓ.பி.யு. சாதனம் நாளடைவில் அனைத்து வாகனங்களிலும் பொருத்தப்படும் போது சுங்கச்சாவடிகள் தேவையற்றதாகி விடும். அப்போது வாகனங்கள் இடையூறின்றி பயணிக்க முடியும். சுங்கச்சாவடி அமைந்துள்ள பகுதிகளில், தேசிய நெடுஞ்சாலைகளை ஒட்டி வசிக்கும் மக்கள் தினமும் 20 கி.மீ.வரை கட்டணமின்றி சென்று வர வாய்ப்பு ஏற்படும்.
ஆன்-போர்டு யூனிட் (ஓ.பி.யு.) என்ற சிறிய கருவியை, பாஸ்டேக் போலவே, அரசு இணையதளங்களில் வாங்கலாம். புதிதாக விற்பனைக்கு வரக்கூடிய வாகனங்களில் தயாரிப்பு நிறுவனங்களே இதனை பொருத்தி விற்பனை செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu