நிலவில் விழிக்குமா விண்கலன்கள் ஒட்டுமொத்த எதிர்பார்ப்பில் உலகம்
பைல் படம்
நிலவின் தென்பகுதியில், உறக்க நிலையில் உள்ள விக்ரம் லேண்டர், பிரக்யான் ரோவர் மீது சூரிய ஒளிபடத் தொடங்கியுள்ளது. இதனால் லேண்டர் மற்றும் ரோவரை மீண்டும் செயல்பட வைப்பதற்கான ஆயத்தப் பணிகளில் இஸ்ரோ ஈடுபட்டுள்ளது. நிலவு குறித்த ஆய்வுப் பணிக்காக இஸ்ரோ அனுப்பிய சந்திரயான்-3 விண்கலம் கடந்த ஆகஸ்ட் 23ஆம் தேதி வெற்றிகரமாக நிலவின் தென்பகுதியில் தரையிறங்கியது. நிலவு குறித்த பல்வேறு ஆராய்ச்சி தகவல்களை விக்ரம் லேண்டரும், பிரக்யான் ரோவரும் அனுப்பின. இந்தப் பணிகள் அனைத்தும், நிலவின் பகல் நேரத்தில் மேற்கொள்ளப்பட்டன.
பின்னர் நிலவில் இரவு நேரம் தொடங்கியதால், லேண்டரும், ரோவரும் தற்காலிகமாக அணைத்து வைக்கப்பட்டன. தற்போது நிலவின் தென் பகுதியில் இரவு முடிந்த நிலையில், ரோவர் மற்றும் லேண்டர் மீது சூரிய ஒளிபடத் தொடங்கியுள்ளது.
மேலும் 14 நாட்கள் சூரிய ஒளி இருக்கும் என்பதால், சூரிய ஆற்றலை பெற்று ரோவர் மீண்டும் செயல்படக் கூடும் என நம்பப்படுகிறது.
விக்ரம் லேண்டர், ரோவர் ஏற்கனவே ஆய்வுப் பணிகளை நிறைவு செய்துள்ள போதிலும், மீண்டும் செயல்படத் தொடங்கினால், அது இஸ்ரோவுக்கு கூடுதல் ஆய்வுத் தகவல்களை அளிக்க உதவும். லேண்டர் மீண்டும் செயல்படத் தொடங்குமா என இஸ்ரோ விஞ்ஞானிகள் ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளனர்.
நிலவின் தென்துருவ பகுதியில் இரவு நேரத்தில் 200 டிகிரி செல்சியஸ் அளவுக்கு அதீத குளிர் நிலவும் என்பதால், அதை தாங்கும் அளவுக்கு சந்திரயான்-3 விண்கலன்கள் கட்டமைக்கப்படவில்லை என தெரிகிறது. இதனால் விண்கலன்கள் மீண்டும் விழித்தெழுமா என்பது கணிக்க முடியாத ஒன்றாக உள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu