வளையல் விற்று பிழைக்கும் பெண்ணின் மகன் கலெக்டரானது எப்படி என தெரியுமா?
தனது தாயுடன் ஐ.ஏ.எஸ்., அதிகாரி ரமேஷ் கோலாப்.
ரமேஷ்கோலாப் ஐ.ஏ.எஸ். ஜார்கண்ட் மாநிலத்தில் எரிசக்தித் துறை இணைச் செயலாளராக உள்ளார். இவர் தனது ட்விட்டர் பக்கத்தில் அம்மாவுடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், "நான் கடந்த எட்டு ஆண்டுகளாக ஐ.ஏ.ஏஸ் ஆகப் பணிபுரிந்து வருகிறேன். ஆனால், என்னுடைய அம்மா இன்னமும் வளையல்களை விற்று வருகிறார்." என்று தெரிவித்திருந்தார்.
பத்திரிகையாளர்கள் சும்மா இருப்பார்களா? அந்த அம்மாவை தேடிக் கண்டுபிடித்தார்கள். அவர்கள் சென்றபோது தெருக்களில் வளையல் விற்றுக்கொண்டு தான் இருந்தார் அந்த அம்மா. "இந்த வளையல்களை விற்று வந்த பணத்தில்தான் என் மகனை படிக்க வைத்து கலெக்டராக்க முடிந்தது. எனது உடல்நிலை அனுமதிக்கும்வரை நான் வளையல் விற்பனை செய்வேன். இதேபோல இன்னும் எவராவது படிக்க வேண்டுமானால் என்னால் முடிந்த உதவிகளைச் செய்வேன்"என்றார்.
மகாராஷ்டிரா மாநிலம், சோலாப்பூர் மாவட்டத்தில் உள்ள மஹாகான் என்ற மிகச் சிறிய கிராமத்தைச் சேர்ந்தவர் ரமேஷ் கோலாப். கூரை இல்லாத வானம் பார்த்த சிறு குடிசையில்தான் இவர் பிறந்து வளர்ந்தார். இவருக்கு முன்னதாக ஒரு சகோதரன் பிறந்தார். ரமேஷின் தந்தை மிதிவண்டி நிலையம் ஒன்றை உள்ளூரிலே நடத்தி வந்தார். அந்தக் கடையின் வழியாக வரும் வருமானம், ரமேஷ் உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்கள் நான்கு பேருக்கும் போதுமானதாக இருந்தது ஆரம்ப காலங்களில். இடையில் அவரது தந்தைக்கு ஏற்பட்ட குடிப்பழக்கம் மூலம் குடும்பம் தள்ளாடத் தொடங்கியது.ஒரு வேளை உணவு அதுவும் வயிறு நிறைய கிடைப்பது என்பது வரவர இல்லாமலே அந்த குடும்பத்திற்குப் போயிற்று.
இதனால், ரமேஷின் தாய் விமல் கோலாப் தன்னுடைய குடும்பத்தைக் காப்பற்றுவதற்காக அருகில் உள்ள கிராமங்களுக்குச் சென்று வளையல்களை விற்பனை செய்யத் தொடங்கியுள்ளார். தனது தாயுடன் இணைந்து ரமேஷ் மற்றும் அவரது சகோதரரும் வளையல் வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளனர். இடையில் ரமேஷின் இடதுகால் போலியோவால் பாதிப்படைய தாய் அவரை "நீ வீட்டிலேயே இரு" என்று சொல்லத் தொடங்கினார். வீதிகளில் தன்னுடைய சகோதரரோடு "வளையல் வாங்கலையோ வளையல்" என்று கூவிச் செல்லும் சிறு வயதுக்கே உரிய உற்சாகத் துள்ளல் தாயிடம் கெஞ்சிக் கூத்தாடி கிராமங்களுக்கு அவர்களோடு ரமேஷைச் செல்ல வைத்தது.
அப்பா தான் மிதிவண்டி நிலையத்தில் சம்பாதித்த பணத்தைக் குடித்துச் சீரழித்ததோடு ரமேஷின் அம்மா வளையல் விற்று விட்டு வந்து வீட்டில் வைத்திருந்த பணத்தையும் கேட்டு அடித்துத் துன்புறுத்த ஆரம்பித்தார்.அடி உதை சண்டை இவற்றோடு வளையல் வியாபாரமும் அவ்வப்போது தொடர்ந்து கொண்டுதான் இருந்தது.
ஒரு கிராமத்தில் வளையல் விற்கச் சென்ற போது அங்குள்ள ரேசன் கடையில் பொதுமக்கள் கூடி மண்ணெண்ணெய் கேட்டு போராட்டம் நடத்தி வந்தது ரமேஷின் கண்களில் பட்டது. இவ்வளவுக்கும் மண்ணெண்ணெய் பேரல்கள் இருப்பு இருந்தும் அங்கிருந்த ஊழியர்கள் பொதுமக்களை "சரியாப்போச்சு போங்க போங்க" என்று விரட்டி அடித்துக் கொண்டிருந்தார்கள்."என்னம்மா இதையெல்லாம் யாராவது கேட்க மாட்டார்களா?"என்று அறியாச் சிறுவன் ரமேஷ் தாயைக் கேட்டான்."அதிகாரியாக இருந்தால்தான் இதையெல்லாம் சரி செய்ய முடியும்"என்று சொன்னார் அந்தத் தாய். "அதிகாரி ஆகணும்னா என்னம்மா செய்யணும்?"என்று கேட்டான் ரமேஷ்.
"நல்லா படிக்கணும். வேலைக்குப் போகணும். அப்பதான் அதிகாரியாக முடியும்"என்றார் அந்தத் தாய்.
அப்பாவின் குடிப்பழக்கத்தால் குடல் வெந்து புண் ஆயிற்று. அரசு மருத்துவமனைக்கு அவரை அழைத்துச் சென்றார்கள்.அங்குள்ள பணியாளர்கள் மருத்துவர்கள் சரியாகக் கவனிக்கவில்லை. இதில் மனம் நொந்துபோன ரமேஷ் தாயிடம், "இவர்களையும் கேள்வி கேட்பதற்கு அதிகாரி தான் வரவேண்டுமா?" என்று கேட்டான்."ஆமாம் ரமேஷ்"என்றபோது, "இப்படி எல்லா பதவிகளிலும் உள்ளவர்களை தட்டிக் கேட்க கூடிய அந்தப் பெரிய அதிகாரி யார் அம்மா?" என்று கேட்டான்."கலெக்டர் ரமேஷ். மாவட்டத்தில் உள்ள எல்லா அதிகாரிகளையும் விரட்டி வேலை வாங்கக் கூடியவர் அவர் ஒருவரே" என்றார் அந்தத் தாய். அன்றைக்கு ரமேஷின் மனதில் உருவான வைராக்கியம்... "எப்படியும் நான் கலெக்டராக வேண்டும்" என்பது தான்.
தனது கிராமத்தில் தொடக்கப்பள்ளி மட்டுமே இருந்ததால், மேற்கொண்டு படிப்பைத் தொடர தனது உறவினர் வீட்டுக்குச் சென்று தங்கி தனது படிப்பைத் தொடர்ந்தார் ரமேஷ். ரமேஷின் நேர்மையான குணமும் படிப்பின் மீதான அர்ப்பணிப்பும் ஆசிரியர்களிடையே அவருக்கு நற்பெயரை வாங்கிக் கொடுத்தது.
2005-ஆம் ஆண்டு தனது 12-ஆம் வகுப்புக்கான மாதிரித்தேர்வுகள் நடந்துகொண்டிருந்தபோது ரமேஷின் தந்தை இறந்துவிட்டதாக அவருக்குச் செய்தி கிடைத்தது. ஆனால், அவர் தங்கியிருந்த பார்ஷி பகுதியிலிருந்து தனது கிராமத்துக்கு வர அவரிடம் பணம் இல்லை. மாற்றுத்திறனாளிக்கான சலுகைகள் அவருக்கு இருந்ததால், அன்றைக்கு அவருக்கான பேருந்துக் கட்டணம் ரூ 2. இந்தக் குறைந்தபட்ச பணம்கூட இல்லாமல் தவித்தார். பிறகு அக்கம்பக்கத்தினரிடம் நிலைமையைச் சொல்லி ஒரு வழியாக பணத்தைப் புரட்டி கிராமத்தை வந்தடைந்தார்.
அப்பா இல்லாத நிலையில் தன்னுடைய படிப்பு தொடரத்தான் வேண்டுமா என்ற கேள்வி ரமேஷ் மனதில் எழுந்தது. "வளையல் இருக்கிறது. மனதில் நம்பிக்கை இருக்கிறது. உன்னிடம் வைராக்கியம் இருக்கிறது. எனவே தொடர்ந்து படித்து முன்னுக்கு வா.." தன்னுடைய தாயின் வற்புறுத்தலால் பொதுத்தேர்வுகளை எழுதினார். எழுதியது மட்டுமல்லாமல் அந்தத் தேர்வில் 88.5 சதவிகிதம் மதிப்பெண்களையும் பெற்றார்.
பள்ளிப்படிப்பை முடித்ததும் பொருளாதார நெருக்கடியால் அவரால் பட்டப்படிப்பைத் தொடர முடியாத நிலை ஏற்பட்டது. இதனால், தன்னுடைய சூழலுக்கு ஏற்றவகையில் டி.எட் படித்தார். அதேநேரம் திறந்தநிலை பல்கலைக்கழகங்களின் வழியாக பட்டப்படிப்பை மேற்கொண்டார். படிப்புகளை முடித்த பின்னர் 2009-இல் ஆசிரியராக அவருக்குப் பணி கிடைத்தது. அவரது குடும்பத்தினருக்கு இந்தப் பணி 'மிகப்பெரிய கனவு நிஜமாகியது' போன்ற உணர்வைக் கொடுத்தது.
ஆனால், ரமேஷ் விரும்பியது இதனை அல்ல. வறுமைக்கோட்டுக்குக்கீழ் இருந்தும் உதவி கிடைக்காத பலரின் நிலை, ஏழைக் குடும்பங்களுக்கு மண்ணெண்ணெய் வழங்காமல் திருட்டுத்தனமாக விற்கும் ரேஷன் கடைக்காரர்களின் அடாவடித்தனம் அவர் மனக்கண்முன் வந்து போனது. போதாததற்கு அரசாங்க மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவரது தந்தைக்கு மருத்துவர்கள், பணியாளர்கள் அதிகக் கவனம் கொடுக்காமல் அலட்சியமாக இருந்த கோபமும் அவருக்குள் கனலாக இருந்தது.
தனது கனவை நோக்கிய முதல் படியை 2009-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் எடுத்துவைத்தார். தாய் பெற்றுத் தந்த கடன்தொகையை எடுத்துக்கொண்டு யு.பி.எஸ்.சி. தேர்வுக்குத் தயாராக தனது கிராமத்திலிருந்து புனேவுக்குச் சென்றார். தனது ஆசிரியர் பணியிலிருந்து ஆறு மாதங்கள் விடுப்பும் எடுத்தார்.
பயிற்சி வகுப்புகளுக்குச் செல்லும் அளவுக்கு ரமேஷிடம் பணம் இல்லாததால் ஆசிரியர் ஒருவரின் உதவியுடன் தொடர்ந்து படித்துள்ளார். இந்தத் தேர்வுக்குத் தான் தகுதியானவனா? என்னால் இந்தத் தேர்வில் வெற்றிபெற முடியுமா? போன்ற கேள்விகள் அவருக்குள் இருந்தாலும் தன்னால் முடியும்; முடிக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்து, தொடர்ந்து படித்துள்ளார். இந்தச் சமூகத்தில் சில சமூக விரோதிகளின் செயல்கள் அவரை மனதளவில் தூண்டிக் கொண்டே இருந்தது."படி... படி... அப்போதுதான் நீயும் ஒரு அதிகாரி ஆகி இந்தச் சமூக அவலங்களைத் தட்டிக் கேட்க முடியும்"
2010-ஆம் ஆண்டு நடைபெற்ற யு.பி.எஸ்.சி. தேர்வில் பங்கேற்றார். ஆனால், அவரால் வெற்றிபெற முடியவில்லை.
இதனிடையே, தனது கிராமத்தில் நண்பர்களின் உதவியுடன் சிறிய கட்சி ஒன்றையும் தொடங்கினார். பஞ்சாயத்து அளவில் நடந்த தேர்தலில் அவரது தாயார் போட்டியிட்டார். இதன் மூலமாவது அடக்கி ஒடுக்கப்பட்ட மக்களுக்கு ஏதாவது செய்ய முடியும் என்று நம்பினார். போட்டியின் முடிவுகள் அக்டோபர் 23, 2010 அன்று வெளிவந்தது. ஆனால், அவரது தாய் இதில் வெற்றி பெறவில்லை. இந்தத் தோல்வி அவருக்கு இன்னும் அதிக உத்வேகத்தைக் கொடுத்தது. அதேநாளில் "நான் இந்தக் கிராமத்தைவிட்டு வெளியேறுகிறேன். ஆனால் என் மனதில் உள்ள கனல் அப்படியேதான் இருக்கிறது. அது என்றும் வெளியேறாது. அணையாது. எல்லோரையும் தட்டிக் கேட்கும் நியாயமான உயர் அதிகாரியாகத்தான் மீண்டும் கிராமத்துக்கு வருவேன்"என்று கூறிவிட்டுப் புறப்பட்டார்.
ஆசிரியர் பணியை விட்டு எஸ்.ஐ.சி தேர்வை எழுதி அதில் வெற்றிபெற்றார். இதனால், அவருக்கு உதவித்தொகை கிடைத்தது. தனது செலவுகளைக் கவனித்துக்கொள்ள சுவரொட்டிகளை வரைதல் உட்பட பல பணிகளைச் செய்தார். மறுபக்கம், தீவிரமாகப் படித்தார். அதற்கு அடுத்த ஆண்டு நடந்த தேர்வில் வெற்றிபெற்று ஐ.ஏ.எஸ்., ஆக தேர்ந்தெடுக்கப்பட்டார். அகில இந்திய அளவில் 287-ஆவது இடத்தைப் பிடித்தார்.
எம்.பி.எஸ்.சி. தேர்விலும் மாநிலத்தில் முதலிடத்தைப் பிடித்தார். ரமேஷின் வெற்றியை அவரது கிராமமே கொண்டாடியது. முதலில் ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள கோடெர்மா எனும் மாவட்டத்தில் ஆட்சியராகப் பணியாற்ற ஆரம்பித்தார். ஏழைகளுக்கு உதவி செய்யும்போதெல்லாம், தன்னுடைய தான் அனுபவித்த மோசமான காலங்களை நினைவு படுத்திக் கொள்கிறார்!
இன்றைக்கு ஜார்கண்ட் மாநிலத்தின் எரிசக்தித்துறை துணை இயக்குனராக பதவி வகிக்கிற போதும் வளையல் விற்ற அந்தக் காலங்களை ரமேஷ் மறந்துவிடவில்லை; அப்போது அவர் கண்ட காட்சி இன்றைய தன் நிலைக்குக் காரணம் என்பதை அவர் மனசு சொல்லி காட்டிக்கொண்டே இருக்கிறது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu