இடுக்கி மாவட்ட புதிய கலெக்டராக மதுரை பெண்..!

இடுக்கி மாவட்ட புதிய  கலெக்டராக மதுரை பெண்..!
X

இடுக்கி புதிய கலெக்டர் விக்னேஸ்வரி.

சவால்கள் நிறைந்த இடுக்கி மாவட்டத்தில் மதுரையை சேர்ந்த பெண் ஐ.ஏஸ்.எஸ்., அதிகாரி கலெக்டராக பொறுப்பேற்றுள்ளார்.

இடுக்கி மாவட்ட புதிய கலெக்டராக மதுரையை சேர்ந்த வெள்ளைச்சாமி விக்னேஸ்வரி ஐ.ஏ.எஸ். பொறுப்பேற்றார். பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியில் தொடர்ந்து இடுக்கி மாவட்ட ஆட்சியராக பணிபுரிந்து வந்த ஷீபா, கேரள உயர் நீதிமன்றத்தின் வழிகாட்டுதலின் படி, பணியிட மாற்றம் செய்யப்பட்டார். அந்த இடத்திற்கு புதிய ஆட்சியராக வந்து சேர்ந்திருக்கிறார் நமது மதுரையை பூர்வீகமாகக் கொண்ட, வெள்ளைச்சாமி விக்னேஸ்வரி.

இவர், கேரள மாநில கல்லூரி கல்வி இயக்குனராகவும், கேரள மாநில சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் இயக்குனராகவும், கோட்டயம் மாவட்ட கலெக்டராகவும் பணிபுரிந்தார். இப்போது விக்னேஸ்வரி இடுக்கி மாவட்ட ஆட்சியராக பொறுப்பேற்று இருக்கிறார்.

அவரது கணவரும், எர்ணாகுளம் மாவட்ட ஆட்சியருமான என்.எஸ்.கே உமேஷ்ஷூம், மதுரையை பூர்வீகமாகக் கொண்டவர். கோழிக்கோடு சப்- கலெக்டராக விக்னேஸ்வரி இருந்த போது, வயநாடு மாவட்ட சப் கலெக்டராக இருந்தவர் உமேஷ். காதல் மணம் புரிந்து கொண்ட இருவரும், கடந்த 2015 ஆம் ஆண்டு கேரளா பேட்ஜ் ஐ ஏ எஸ் அதிகாரிகளாக பொறுப்பேற்றவர்கள்.

மதுரையில் உள்ள புகழ்பெற்ற தியாகராஜர் பொறியியல் கல்லூரியில், பி.இ., (சிவில்) பட்டம் பெற்ற விக்னேஸ்வரி, தமிழர்கள் பெருவாரியாக நிறைந்து கிடக்கும் இடுக்கி மாவட்ட ஆட்சியராக வந்திருப்பதை பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்கம் வரவேற்றுள்ளது.

இடதுசாரிகள் கடும் நெருக்கடியை இடுக்கி மாவட்ட ஆட்சியருக்கு தொடர்ந்து கொடுத்து வரும் நிலையில், உறுதிக்கு பெயர் பெற்ற விக்னேஷ்வரி இடுக்கி மாவட்ட ஆட்சியராக பொறுப்பேற்கிறார்.

நில ஆக்கிரமிப்பு விவகாரங்கள் கொடிகட்டி பறக்கும் இடுக்கி மாவட்டத்தில், புதிய மாவட்ட ஆட்சியரின் கடும் நடவடிக்கைகள் எப்படியிருக்கும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

உடுமஞ்சோலை சட்டமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான எம் எம் மணி, பீருமேடு சட்டமன்ற உறுப்பினர் வாளூர் சோமன், தொடுபுழா சட்டமன்ற உறுப்பினர் பி ஜே ஜோசப் உள்ளிட்ட அரசியல் அதிகாரங்கள் நிறைந்த மனிதர்கள் நிறைந்து கிடக்கும் இடுக்கி மாவட்டத்தில், விக்னேஸ்வரியின் பணி கடும் சவாலாகத்தான் இருக்கும்.

முன்பு கலெக்டர் ஆக இருந்த ஷீபா கடும் நடவடிக்கைகளுக்கு பெயர் பெற்றவர். ஒரு மாநில அரசே உயர் நீதிமன்றத்திற்கு சென்று இடுக்கி மாவட்ட ஆட்சியர் ஷீபாவை மாற்ற வேண்டும் என்று வழக்கு தொடுக்கும் அளவிற்கு, ஆளும் இடதுசாரி அரசாங்கத்திற்கு கடும் நெருக்கடியை கொடுத்தவர் ஷீபா.

குறிப்பாக உடும்பன்சோலை சட்டமன்ற உறுப்பினரான எம். எம். மணியின் தம்பி லம்போதரனின் நில முறைகேடு விவகாரங்களை வெளிச்சத்திற்கு கொண்டு வந்ததில் ஷீபாவிற்கு பெரும் பங்கு உண்டு.

இடுக்கி மாவட்டத்தில் பெருவாரியாக வாழும் தமிழ் மக்களுக்கு இருக்கும் சிக்கல்கள் குறித்தான நெடும் பட்டியலோடு, விரைவில் இடுக்கி மாவட்ட புதிய ஆட்சியர் விக்னேஸ்வரியை சந்தித்து முறையிட இருக்கிறோம் என பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பார் ச.பென்னிகுயிக் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!