ராஜீவ் காந்தி கொலை வழக்கு: அனைவரும் விடுதலை

ராஜீவ் காந்தி கொலை வழக்கு: அனைவரும் விடுதலை
X
 உச்சநீதிமன்றம்.
30 ஆண்டுகளுக்கு மேலான சிறைவாசம், நன்னடத்தை, ஆகியவற்றை அடிப்படையாக வைத்து பேரறிவாளனை விடுதலை செய்த அதே அதிகாரத்தை பயன்படுத்தி 6 பேரையும் விடுதலை செய்து உத்தரவு

ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் பேரறிவாளன், நளினி உள்ளிட்ட 26 பேருக்கு சென்னை பூவிருந்தவல்லி தடா நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்தது. பின்னர் மேல்முறையீடு வழக்கில் சாந்தன், முருகன், நளினி, பேரறிவாளனுக்கு மட்டும் தூக்கு தண்டனை உறுதியானது.

கடந்த 2000-ம் ஆண்டு நளினியின் தூக்கு தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது. 2014-ம் ஆண்டு பேரறிவாளன், சாந்தன், முருகனின் தூக்கு தண்டனை உச்சநீதிமன்றத்தில் ரத்து செய்யப்பட்டு ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டது.

பின்னர் தம்மை வழக்கில் இருந்து விடுதலை செய்யக் கோரி பேரறிவாளன் உச்சநீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடர்ந்தார். அதேநேரத்தில் பேரறிவாளன் உள்ளிட்ட ராஜீவ் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவிக்கும் 7 பேரையும் விடுதலை செய்யலாம் என தமிழக அரசு முடிவெடுத்தது.

2018ஆம் ஆண்டு, தமிழகத்தின் அப்போதைய அதிமுக அரசால் , படுகொலை வழக்கில் ஆயுள் தண்டனை கைதிகள் 7 பேரையும் சட்டப்பிரிவு 161ன் கீழ் விடுதலை செய்ய ஆளுநருக்குப் பரிந்துரை செய்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழக அமைச்சரவையின் இந்த தீர்மானத்தை மத்திய அரசு கடுமையாக எதிர்த்தது. பேரறிவாளவன் தம்மை விடுதலை செய்யக் கோரிய வழக்கில் தமிழக அரசின் தீர்மானம் முக்கியமானதாக இருந்தது. குறிப்பாக 7 தமிழரை விடுதலை செய்யும் அமைச்சரவை முடிவு மீது கவர்னர் எந்த பரிந்துரையும் செய்யாமல் இருந்ததால் உச்சநீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்தது.

நவம்பர் 11 அன்று, நீதிபதிகள் பி.ஆர்.கவாய் மற்றும் பி.வி. நாகரத்னா ஆகியோர் அடங்கிய பெஞ்ச், குற்றவாளிகள் 30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருந்ததாகவும், படிப்பில், பட்டங்களைப் பெற்றதாகவும் கூறியது.

பேரறிவாளனின் 30 ஆண்டுகளுக்கு மேலான சிறைவாசம், நன்னடத்தை, பரோல் கால செயல்பாடுகள் ஆகியவற்றை அடிப்படையாக வைத்து சிறப்பு அதிகாரம் வழங்கும் அரசியல் சாசனத்தின் 142-வது பிரிவின் கீழ் உச்சநீதிமன்றம் பேரறிவாளனை விடுதலை செய்தது.

இதனடிப்படையில் தங்களையும் விடுதலை செய்ய வேண்டும் என நளினி உள்ளிட்ட எஞ்சிய 6 பேரும் உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தனர். இம்மனு மீது உச்சநீதிமன்றத்தில் விசாரணையில் இருந்தது.

இந்நிலையில், நளினி உள்பட 6 பேரும் தாக்கல் செய்த மனு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, ராஜீவ் காந்தி கொலை வழக்கில் நளினி, முருகன், சாந்தன், ரவிச்சந்திரன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் ஆகிய 6 பேரையும் விடுதலை செய்து உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது.

30 ஆண்டுகளுக்கு மேலான சிறைவாசம், நன்னடத்தை, பரோல் கால செயல்பாடுகள் ஆகியவற்றை அடிப்படையாக வைத்து பேரறிவாளனை விடுதலை செய்த அதே அதிகாரத்தை கொண்டு நளினி உள்பட 6 பேரையும் விடுதலை செய்து உத்தரவிட்டுள்ளது.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!