எதிர்கால உலகம் இந்தியாவுக்கே..! ஜோபிடன் சொன்னதன் அர்த்தம் புரியுதா?

எதிர்கால உலகம் இந்தியாவுக்கே..!  ஜோபிடன் சொன்னதன் அர்த்தம் புரியுதா?

பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் ஜோ பிடன்(கோப்பு படம்) 

பிரதமர் மோடியை வரவேற்ற ஜோபிடன், எதிர்கால உலகம் இந்தியாவிற்கானது என சொன்னதன் அர்த்தம் இப்போது புரிகிறதா?

இந்தியாவின் அசாம் மாகாணத்தில் டாட்டா நிறுவனம் செமி கண்டக்டர் எனும் குறை கடத்தி மின்னணு ஆலைகளை முதல் முறையாக அமைக்கின்றது. இந்த உலகில் மின்னணு சாதனங்களே இயக்கு சக்தி, போன் முதல் கணிணி செயற்கைகோள் ஏவுகணை, ரேடார், கப்பல் என மின்னணு இல்லாமல் எதுவுமில்லை. இதுவரை இந்த சாதனங்களின் அடிப்படை செல்களான இந்த மின்னணு கடத்திகளும் அதுசார்த்த ஐசி சிப் எனப்படும் மிக நுண்ணிய மின்னணு வடிவங்களும் இந்தியாவில் செய்யபடவில்லை. எல்லாமே இறக்குமதி செய்யப்பட்டன.

இப்போது உலக அரங்கில் ஏற்பட்ட மிகப்பெரிய மாற்றத்தை மோடி அரசு இந்தியாவுக்கு அடித்து கொண்டு வந்து விட்டது. சீனாவினை இனி கட்டம் கட்டியே தீரவேண்டும் என முடிவு செய்த அமெரிக்கா அங்கிருந்து தன் மின்னணு ஆலைகளை வெளியேற்றியது. டிரம்பர் இதனை தொடங்கி வைத்தார்.

அப்போது சீனாவுக்கு ஈடான மனித வளம், இடவசதி, கல்வி என எல்லாம் கொண்ட தேசமாக இந்தியா மட்டும் இருந்தது. ஆனால் சீனாவுக்கு இல்லாத சில துரதிருஷ்டங்கள் இங்கே உண்டு. அது தொழிற்சங்க இம்சைகள், தேர்தல் இத்தியாதிகள், மனித உரிமைகள், தொழிலாளர்களை தூங்க விடும் சலுகை, மிக பலவீனமான சட்டங்கள், அரசியல் கட்சிகள் என ஏகப்பட்ட குளறுபடிகள் இந்தியாவில் உண்டு.

சீனாவில் தேர்தல் இல்லை, அரசு மாறாது. இதனால் வாக்கு அரசியல் அவர்களிடம் இல்லை. இன்னொன்று முரட்டு அதிகாரம் கொண்ட நாடு அது. இப்படியான நிலையிலும் சீனாவினை விரட்ட இந்தியாவினை அமெரிக்கா தேர்ந்தெடுத்த போது மோடி அரசு முடிந்த வரை எல்லா வகையிலும் தேச நலனுக்கு முன்னுரிமை கொடுத்து பல சட்டங்களை கடுமையாக்கியது.

இதன் பின்பே போக்சான் போன்ற நிறுவனங்கள் இந்தியாவிற்குள் வந்தன. இவை எல்லாம் அசம்பிள் எனும் எல்லாம் ஒருங்கிணைக்கும் வேலையினை செய்யுமே தவிர இந்த ஐசி சிப் எனப்படும் அடிப்படை விஷயங்கள், குறை கடத்தி எனப்படும் செமி கண்டக்டெரெல்லாம் சீனாவில் தான் தயாராயின.

இரண்டு வருடங்களுக்கு முன் அமெரிக்க பார்லிமென்டில் இந்த மின்னணு சிப் தொடர்பான சட்டம் ஒன்று வந்தது. அதன்படி அமெரிக்கா பல்லாயிரம் கோடி ஆய்வு செய்து உருவாக்கும் ஐசி சிப்புகளை சீனா போன்ற நாடுகள் எளிதாக அடித்து செல்கின்றன, இதனால் இனி இவ்விவகாரத்தில் கடும் கட்டுப்பாடு அவசியம் என தீர்மானம் நிறைவேற்றியது.

இதன் ராஜ்தந்திர அர்த்தம் இனி சீனா ஐசி சிப் செய்ய அனுமதிக்க கூடாது என்பது. அப்போது நான்சி பெலோசி தான் சபாநாயகர். இதனாலே அவர் தைவான் செல்லும் போது சீனா கொந்தளித்தது. விமானத்தை சுடுவோம் என்றது. பின் படுத்து உறங்கி விட்டது. ஆக விஷயம் இதுதான்

இனி சீனாவில் இருந்து ஐசி சிப்புகளும் தயாரிக்கப்படக் கூடாது மாறாக இந்தியா அந்த இடத்தை பிடிக்கட்டும் என அமெரிக்கா இந்தியாவினை உயர்த்தி கைகாட்டி விட்டது. இதனால் இனி ஐசி சிப்புகள் இந்தியாவில் "மேக் இன் இந்தியா" திடத்தில் தயாரிக்கப்படும்.

இது இப்போது வெறும் "ஐசி சிப்" என கடந்து சென்றாலும் எதிர்காலத்தில் அதாவது ஆறாம் தலைமுறையில் வரும் அதிநவீன கருவிகளுக்கான மின்னணு சிப்பெல்லாம் இனி இந்தியாவில் செய்யப்படும். இன்னும் அழுத்தமாக சொல்ல வேண்டும் என்றால் "ஏஐ" எனப்படும் வருங்கால செயற்கை அறிவின் தாயகமாக இந்தியா உருவெடுக்கும்.

மின்னணு உற்பத்தியில் ஜப்பான், தென்கொரியா, சீனா, தைவானை தாண்டி இனி இந்தியா முதலிடத்தில் வரும். இந்த மின்னணு சாதனம் என்பது சாமான்யம் அல்ல. இரண்டாம் உலகபோரில் நொறுங்கிய ஜப்பானை, போரில் பாதிக்கபட்ட தென்கொரியாவினை இத்தொழில்தான் உயர்த்தியது.

தைவானின் அடிதளமும் இதுதான். இந்தியாவுக்கு இந்த பாய்ச்சல் 1976ல் கிடைத்திருக்க வேண்டும். அப்போது கெடுத்தது யார் என்றால் சந்தேகமின்றி காங்கிரஸ் தான். 1970களில் அமெரிக்காவுக்கு ஒரு திட்டம் இருந்தது. சோவியத்ரஷ்யா, சீனா என ஒரு கம்யூனிசநாடுகளுக்கு போட்டியாக இந்தியா எனும் ஜனநாயக நாட்டை மெலெழுப்பும் திட்டம் இருந்தது. இந்த திட்டம் அமெரிக்க அதிபர் கென்னடிக்கு இருந்தது. பின் நிக்சனுக்கும் இருந்தது. ஆனால் சோவியத்ரஷ்யா மற்றும் சீனாவின் பிடியில் இந்தியாவில் பல கட்சிகள் சிக்கியிருந்ததால், காங்கிரஸ் அதனை எதிர்கொள்ள முடியாமல் வாய்ப்பினை கை விட்டு விட்டது.

இந்திரா காந்தி அஞ்சினார். இதை தொட்டால் தன் உயிருக்கே ஆபத்து வரலாம் ஆட்சிக்கு ஆபத்து வரலாமென தவிர்த்தார். அதன் பின் சோவியத்துக்கும் சீனாவுக்கும் இடையில் புகுந்து அரசியல் செய்தது அமெரிக்கா. சீன அதிபர் மா சேதுங்கும், அமெரிக்க அதிபர் நிக்சனும் சந்தித்தார்கள்.

ஆனாலும் சீனா எப்போதும் அமெரிக்காவுக்கு உகந்த நாடு அல்ல. ஆனால் அமெரிக்காவிற்கு விருப்பமில்லாத ஒன்றை இந்தியா செய்ய வைத்தது என்ற கோபத்தில் அமெரிக்க அதிபர் நிக்சன் இந்திய பிரதமர் இந்திராகாந்தியை திட்டினார். 1990களில் தாராளமயம் வந்த போது இந்திரா காந்தி செய்த தவறுகளின் பாதிப்பு நன்றாய் தெரிந்தது. சீனா வளர்ச்சியில் எங்கோ பாய்ந்து சென்று கொண்டிருக்க, இந்தியா குழம்பி தவித்தது.

2014ல் மோடி வந்த பின்பே காட்சிகள் மாறி தேசம் 1976ல் பெற வேண்டிய மாற்றங்களை இப்போது பெறுகின்றது. இனி இந்தியா மாபெரும் வளர்ச்சியினை இத்துறையில் அடையும்.

இனி இந்திய சொந்த டிவி, கணிப்பொறி திரைகள், பிரமாண்ட டிஜிட்டல் திரைகள் என செய்யும் தேசம் உலகுக்கு வழிகாட்டும். வருங்காலத்தில் போன் முதல் கணிணி வரை எல்லாமே இனி இந்தியாவில் சல்லி விலைக்கு குறையும். ஜப்பான், சீனாவின் இடத்தை இந்தியா இன்னும் 10 ஆண்டுகளில் பிடித்து உலகின் இரண்டாம் மிகபெரிய பொருளாதார நாடு எனும் இடத்தை அடையும்.

அசாமில் மிகபெரிய அளவில் 30 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் முதல் ஆலை அமைக்கப்படுகின்றது, இதற்கு தமிழகத்தின் ஓசூரில் இருந்தும் தொழிலாளர்கள் செல்கின்றார்கள். இந்த தொழிற்சாலை இனி நாடெங்கும் விரிவுபடுத்தபடும். இங்கே மிக நுணுக்கமான ஒரு அரசியலை காணலாம்.

இந்திய வடகிழக்கு மாகாணங்களில் சீனா துாண்டி விட்ட தீவிரவாதம் கொஞ்சமல்ல. அப்படி சீனாவால் பாதிக்கபட்ட இடங்களை கொண்டே சீனாவின் கண்ணை குத்துவது தான் இந்தியா செய்யப்போகும் அதிரடி நடவடிக்கை ஆகும். அப்படியே இந்தியாவின் பின் தங்கிய வடகிழக்கு மாகாணங்கள் இனி பெரும் வளர்ச்சி பெறும்.

அசாமின் பாஜக அரசு அதற்கு பிள்ளையார் சுழியினை அசாமில் இடுகின்றது. கனவிலும் நினைத்து பார்க்கமுடியா மாபெரும் யுகத்தின் உள்ளே தேசத்தை இழுத்து செல்கின்றார் மோடி. கடந்த முறை மோடி அமெரிக்கா சென்ற போது ஜோபிடனும் மோடியும் சந்தித்த போது, எதிர்கால உலகம் இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்குமானது என்றார் ஜோபிடன்.அதன் அர்த்தம் அப்போது பலருக்கு புரியவில்லை, இப்போது புரிந்திருக்கும்.

Tags

Next Story