அன்று லால்பகதுார் சாஸ்திரி போட்ட விதை, இன்று மோடி உருவத்தில் பூத்திருக்கிறது

அன்று லால்பகதுார் சாஸ்திரி போட்ட விதை, இன்று மோடி உருவத்தில் பூத்திருக்கிறது
X
பிரதமர் மோடியின் முகத்தின் பின்புறத்தில் லால்பகதுார் சாஸ்திரி புன்னகைக்கிறார் என நாட்டுப்பற்றாளர்கள் வர்ணிக்கின்றனர்.

இந்தியாவில் லால்பகதுார் சாஸ்திரிக்கு பின்னர் வலுவான ஒரு பிரதமர் கிடைத்திருக்கிறார் என வர்ணிக்கின்றனர். பாகிஸ்தான் போரின்போது லால் பகதூர் சாஸ்திரி சந்தித்த சவால்களையும், அதனை அவர் எதிர்கொண்ட விதம் வல்லரசு நாடுகளான அமெரிக்கா, ரஷ்யா சீனா ஆகியவற்றிற்கு மிகப்பெரிய செய்தியை அனுப்பியது. அமெரிக்காவும் ரஷ்யாவும் இந்தியாவை இன்று தங்களின் நம்பிக்கையான நண்பனாக காண்கின்றனர்.

இதற்கு அவர்கள் பதிவிட்ட ஒரு சம்பவத்தை உதாரணம் காட்டலாம்.

1965ம் ஆண்டு இந்தியாவுக்கு சோதனையான காலகட்டம். அப்போது நேரு இறந்து ஒருவருடமே ஆகியிருந்தது. இந்தியாவில் இனி சரியான தலைவர் இல்லை. இந்தியா சீனப்போரில் பெரும் அடிபட்டு கிடக்கின்றது என எதிரிகள் திட்டமிட்டு இந்தியாவினை சரிக்க போர் தொடுத்தனர். அதனை தங்கள் அடியாள் பாகிஸ்தான் மூலமாக செய்தார்கள். பின்னணியில் இருந்தது சீனா.

அப்போது அமெரிக்காவும் பாகிஸ்தான் பக்கம் தான் இருந்தது. அமெரிக்காவின் பலமான பேட்டர்ன் டாங்கிகள் பாகிஸ்தானுக்கு கொடுக்கப்பட்டது. அந்த டாங்கிகள் உடைக்க முடியாதவை என பெயர் பெற்றவை. அந்த பலத்தில் தான் 1965 போரை தொடக்கியது பாகிஸ்தான்.

குஜராத்தின் கட்ச் பகுதி, முழு காஷ்மீர் என என்னென்ன காரணங்களையெல்லாம் சொல்லி போரை தொடங்கியது. அன்று வங்கதேசம் பிரிக்கப்படவில்லை.

1965ம் ஆண்டில் செப்டம்பர் முதல் தேதி பாகிஸ்தானிய படைகள் காஷ்மீருக்குள் நுழைந்தன‌. அப்போது இந்தியாவின் பிரதமர் லால்பகதூர் சாஸ்திரி. அவருக்கு துணையாக இருந்தவர் பெருந்தலைவர் காமராஜர். சீனப் போரை போல இந்தியா சொதப்பும் என எதிர்பார்த்த சீனாவுக்கும் பாகிஸ்தானுக்கும் அது பெரும் அடியாக விழுந்தது. சாஸ்திரி அப்படி ஒரு தைரியம் காட்டினார். அவரும் காமரஜாரும் போர்முனைக்கே சென்றார்கள், வீரர்களை உற்சாகபடுத்தினார்கள். இந்திய ராணுவம் ஊற்சாகமாக போரிட்டது.

ஆனால் பாகிஸ்தானின் டாங்கிபடை பலமாகவே இருந்தது. இந்திய ராணுவம் பாகிஸ்தான் எதிர்பாராத ஒரு காரியத்தை செய்தது. அது பஞ்சாப் வழியாக பாகிஸ்தானுக்குள் ஊடுருவியது. இதனை பாகிஸ்தான் எதிர்பார்க்கவில்லை.

ஒரு முனையுத்தம் இருமுனையாக மாறிற்று. ஆனால் அமெரிக்க பேட்டர்ன் டாங்கிகள் இந்தியாவிற்கு மிகப் பெரிய அபாயமாக உருவெடுத்தன‌. பேட்டர்ன் டாங்கியினை தகர்க்கும் ஏவுகணைகள் அன்று ரஷ்யாவிடம் இருந்தன. இந்தியா கேட்டும் ரஷ்யா தர மறுத்தது.


பஞ்சாபில் போர்களத்தை திறந்து விட்டோமே தவிர பேட்டர்ன் டாங்கிகளை சமாளிக்க இந்தியாவால் முடியவில்லை. இந்திய ராணுவம் மிக சோர்ந்து போன நேரம், இனி பாகிஸ்தான் படைகள் இந்திய பஞ்சாபுக்குள் நுழையலாம் இந்த டாங்கிகளை தகர்க்கும் ஆற்றல் நம்மிடம் இல்லை. அமெரிக்காவும் பாகிஸ்தான் பக்கம் என மனமுடைந்தார்கள்.

ஆனால் இந்த தேசம் புண்ணிய பூமி அல்லவா? யாரோ ஒருவருக்குள் ஒரு வைராக்கிய ஆத்மா இறங்கி ஒரு சக்தியால் மீட்கப்படும் தேசம் அல்லவா? அந்த வீரமிக்க காவல் சக்தி இந்தியாவின் அப்போதைய பீரங்கி படை தலைவர் கிருஷ்ண தியாகராஜன் மேல் இறங்கிற்று. அவரும் அவருடன் இருந்த ஹரியானா வீரர்களும் சில சீக்கியர்களும் முக்கியமாக அந்த அப்துல் ஹமீத் எனும் மாவீரனும் என்ன நடந்தாலும் சரி என தீவிரமாக நின்றார்கள்.

அந்த கிருஷ்ண தியாகராஜன் நெல்லை பாளையாங்கோட்டையினை சேர்ந்தவர். அப்போது அவருக்கு 41 வயதாகியிருந்தது. எதிர்தரப்பில் பர்வேஸ் முஷாரப் நின்றிருந்தார். பின்னாளில் பாகிஸ்தான் ஜெனரலாக ஆட்சி செய்த அதே முஷாரப் அன்று தளபதியாக வந்திருந்தார். சுமார் 160 பேட்டர்ன் டாங்கிகளை அமெரிக்கா கொடுத்திருந்தது. அதில் 100 டாங்கிகளை பாகிஸ்தான் எல்லையில் அந்நாடு நிறுத்தி மிரட்டியது.

இந்திய படைகள் சோர்ந்த நேரம் இந்த கிருஷ்ண தியாகராஜன் தலையிலான குழு எக்காரணம் கொண்டும் பின்வாங்குவதில்லை. தேசத்தை காக்க வீரமரணம் என அங்கே நின்று கொண்டிருந்தது.

அவர்கள் முரட்டுத்தனமாக மோதவில்லை. டேங்க் எதிர்ப்பு ஏவுகணை, வெடிகுண்டு இல்லை என கலங்கவில்லை, இருப்பது உயிர் அது தேசத்துக்காய் போகட்டும் என முடிவெடுத்து விவாதித்தார்கள். அவர்கள் அதிகம் படித்தவர்கள் இல்லை. உலோகவியல் தெரியாது ஆனால் கடுமையாக சிந்தித்த போது சில வியூகங்கள் வந்தன‌.

அப்துல் ஹமீத் ஒரு மல்யுத்த வீரர். அவர் மல்யுத்தத்தம் செய்யும் போது நேரே எதிர்கொள்ள முடியாதவனை பின்னால் இருந்து அடிப்பது ஒரு கலை என்பதை யதார்த்தமாக சொன்னார். கேப்டன் கிருஷ்ணனுக்கு பொறி தட்டியது. பேட்டர்ன் டாங்கிகள் வலுவானவை தான் ஆனால் நிச்சயம் முன்பக்கம் பக்கவாட்டில் வலுவாய் இருக்கலாம், ஆனால் பின்பக்கம்?

அது அமெரிக்க தயாரிப்புத் தான் ஆனால் பலம் முன்பக்கம் கொடுத்திருபார்களே தவிர பின்பக்கம் எப்படி இருக்கும் என தெரியாது. ஒருவேளை பின்பக்கம் பலவீனமாக இருந்து வெடிகுண்டுகளுக்கே சிதறிவிட்டால் எப்படி இருக்கும்? அது உறுதியா இல்லையா என்பது தெரியாது. ஆனால் முயற்சித்து பார்க்கலாம் என கேப்டம் கிருஷ்ணன் முடிவெடுத்தார்.

மறுநாள் அந்த செயலை செய்தார்கள் முஷாரப்பின் தலைமையில் பேட்டர்ன் டாங்கிகள் அணிவகுத்தன. அதன் இடையே ஒரு ஜீப்பில் சில வீரர்களொடு ஊடுருவினார் ஹமீது. அவரும் அரியானா வீரர்களும் யானை நடுவில் புலி பாய்வது போல் பாய்ந்து டாங்கியின் பின்பக்கம் வந்து அடித்தார்கள். அந்த பீரங்கியின் மகா முக்கியமான பலவீனமாக பெட்ரோல் டாங்க் அங்கேதான் இருந்தது.

அதை நெருங்கி வந்து சிறிய வெடிகுண்டால் அதன் மூடியினை உடைத்தார்கள், டாங்கி எரிய ஆரம்பித்தது. யாராலும் அழிக்க முடியாத அமெரிக்க டாங்கிகளின் பலவீனம் பின்னால் இருந்தது. ஆர்ப்பரித்த இந்திய வீரர்கள் அந்த வியூகத்தில் மாறி மாறி அடித்தனர்.

பாகிஸ்தான் ராணுவம் அதிர்ந்தது, அமெரிக்க டாங்கிகள் முறியடிக்கப௪படுகின்றன என்ற தகவல் அறிந்து அமெரிக்கா மிகவும் அவமானப்பட்டது. அந்த தைரியத்தில் இந்திய ராணுவம் மிக பெரிய சாகசத்தை காட்டிற்று.


அப்போது சில வீரர்கள்தான் முன்னணி களத்தில் நின்று நம்பமுடியாத அதிசயத்தை செய்தார்கள். அந்த தாக்குதலை முன் நின்று செய்த ஹமீது 1965 செப்டம்பர் 10ம் தேதி எதிரிகளால் கொல்லப்பட்டார். ஆனாலும் இந்திய வீரர்கள் பெரும் பாய்ச்சலை காட்டினார்கள், சுமார் 60 டாங்கிகள் அழிகப்பட்ட நிலையில் 40 டாங்கிகள் இந்திய ராணுவத்தால் கைப்பற்றப்பட்டன. அதே டாங்கிகளை வைத்து பாகிஸ்தானை திரும்ப தாக்கினர்.

அலறி ஓடியது பாகிஸ்தான். தளபதி முஷாரப் தலைதெறிக்க ஓடினார். இந்தியப் படை பாகிஸ்தானில் லாகூர் வரை முன்னேறிற்று, அடுத்து இஸ்லாமாபாத்தை பிடிக்க வேண்டியது தான் எஞ்சியிருந்தது. பாகிஸ்தான் அரண்டது. அமெரிக்கா, சீனாவை உதவிக்கு வருமாறு அழைத்தது.

பாகிஸ்தானின் அனைத்து காலநிலை நண்பன் சீனா ஒரு அறிக்கை வெளியிட்டது. அதன்படி இந்தியா சீன பகுதிகளை ஆக்கிரமித்தது போல் பாகிஸ்தானை ஆக்கிரமித்து விட்டது. இனி நாங்கள் எங்கள் பகுதியினை மீட்க போர் தொடுப்போம் என மிரட்டியது. இந்திய பிரதமர் சாஸ்திரி அசரவில்லை. எந்தபோர் என்றாலும் சந்திப்போம் என முழங்கினார், சீனாவின் சவாலை எதிர்கொள்ள தயார் என அறிவித்தார்.

இருதேசங்களுடன் போர் எனும் பெரும் பதற்றத்தை இந்தியா எட்டியது. சர்வதேச அழுத்தம் அதிகரித்தது, சாஸ்திரி அசரவில்லை.

ஆனாலும் பல்வேறு நாடுகளின் அழுத்தம் காரணமாக வேறுவழியின்றி "தற்காலிகமாக யுத்தம் நிறுத்துகின்றோம், எங்கள் மண்ணை விட்டு கொடுக்க மாட்டோம், அமைதி பேச்சில் காஷ்மீர் திரும்ப பெறப்படாவிட்டால் வேறு வழியில்லை" எனும் நிபந்தனையோடுதான் சாஸ்திரி போரை நிறுத்தினார். அப்போது தான் 1966 ஜனவரியில் அவருக்கும் பாகிஸ்தானின் அயூப்கானுக்கும் இடையே சோவியத் பேச அழைத்தது, அப்படி சென்ற சாஸ்திரி 7 சுற்று பேச்சுக்களை முடித்தார். எங்கும் காஷ்மீரை விட்டுக் கொடுக்கவில்லை. அந்த பேச்சு வார்த்தையின் போதே உயிரிழந்தார்.

அவர் மட்டும் இறக்காவிட்டால், அன்றே காஷ்மீர் முழுக்க மீட்கப்பட்டிருக்கும். அந்த துரோகத்துக்கெல்லாம் இந்தியா இப்போது எப்படி பழிவாங்குகின்றது என்பது எல்லோரும் அறிந்தது. அதையெல்லாம் இப்போது மோடி செய்து வருகிறார்.

இன்று ரஷ்யா உக்ரைன் போரில், இந்தியா கம்பீரமாக நிற்கும் போது 1965ல் அவர்கள் செய்த எல்லா இந்திய துவேஷத்துக்கும் சாஸ்திரிக்கு செய்த துரோகத்துக்கும் பதிலடியாகவே அது தெரிகின்றது.

தர்மம் சாகாது, தர்மம் ஏதோ ஒருவடிவில் வருமென்பது இன்று மோடி கம்பீரமாக நிற்கும் போது பின்னால் சாஸ்திரி முகமாக தெரிகின்றது. எந்த அமெரிக்கா அன்று பாகிஸ்தானுக்கு பேட்டர்ன் டாங்கிகளை கொடுத்து இந்தியாவினை அழிக்க திட்டமிட்டதோ அதே அமெரிக்கா மோடியினை தங்களின் நம்பிக்கையான நண்பனாக கண்டு இந்தியாவுக்கு எல்லா தொழில்நுட்பமும் விஞ்ஞானமும் ஆயுதமும் தருவோம் எனும் போதே மோடி உருவில் சாஸ்திரி சிரிக்கின்றார். தர்மம் புன்னகைக்கின்றது. இந்த பூமி ஞானகர்ம பூமி . தர்மம் தழைக்கும் பூமி என்பது தெரிகின்றது.

Tags

Next Story
பயிற்சியை முழுமையாக பயன்படுத்தினால் 100 சதவீதம் வேலைவாய்ப்பு பெறமுடியும்..!