டோல்கேட் கட்டண உயர்வால் விலைவாசி அதிகரிக்கும் அபாயம்; வணிகர் சங்கம் புகார்

டோல்கேட் கட்டண உயர்வால் விலைவாசி அதிகரிக்கும் அபாயம்; வணிகர் சங்கம் புகார்
X

டோல்கேட் கட்டண உயர்வால் விலைவாசி அதிகரிக்கும் வாய்ப்பு ( கோப்பு படம்) 

விலைவாசி உயர்வுக்கு சுங்கச்சாவடி கட்டணம் முக்கிய காரணமாக உள்ளது என வணிகர் சங்கம் புகார் எழுப்பி உள்ளது.

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை செய்தி தொடர்பாளர் ஆல்பர்ட் அந்தோணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

நாட்டில் உற்பத்தியாகும் அனைத்து பொருட்களுக்கும் GST வரி விதித்து மத்திய மாநில அரசுகள் வருவாயை ஈட்டுகின்றன. நாடு முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 1000க்கும் மேற்பட்ட சுங்கச்சாவடிகள் மூலமாக வசூலிக்கப்படும் கட்டணம் சில்லறை வணிகர்களுக்கும் ஏழை, எளிய மக்களுக்கும் சுமக்க முடியாத பாரமாக இருக்கிறது.

தமிழகத்தில் 67 சுங்கச்சாவடிகள் செயல்பட்டு வருகின்றன. சில சுங்கச்சாவடிகள் காலாவதி ஆன பின்பும் கட்டணம் வசூலிக்கப்படுகின்றன. மத்திய அரசும் தேசிய நெடுஞ்சாலை துறையும் காலக்கெடு முடிந்த பின்பும் சுங்கச்சாவடிகளில் சுங்க கட்டணம் வசூலிக்க அனுமதிப்பது ஏன் என்ற கேள்வி எழுகிறது.

மேலும் 60 கிலோ மீட்டருக்கு ஒரு சுங்கச்சாவடி தான் இருக்க வேண்டும் என்று மத்திய அரசு சொல்கிறது. ஆனால் நடைமுறையில் அப்படி இல்லை. ஆண்டுக்கு இரண்டு முறை சுங்க கட்டணத்தை உயர்த்துவதன் மூலம் அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்கிறது. உற்பத்தி பொருட்கள் மற்றும் உணவுப் பொருட்கள் மீது ஜிஎஸ்டி வரி போடும் மத்திய அரசு சுங்க கட்டணமும் விதிக்க வேண்டுமா என்பதை யோசிக்க வேணடும்.

வாகனங்கள் வாங்கும் பொழுது வாகனங்கள் வரி , சாலை வரி , வாகன உதிரி பாகங்களுக்கான வரி, என அனைத்தும் வசூலிக்கப்பட்ட பிறகு இந்த வரியை மக்கள் மீதும் வணிகர்கள் மீதும் திணிக்கப்படுகிறது. சுங்க கட்டண உயர்வால் தயாரிப்பு பொருட்கள் விலை கடுமையாக உயர்கிறது. இந்நிலையில் வரும் செப்டம்பர் 1ஆம் தேதி முதல் 25 சுங்கச்சாவடிகளுக்கு 7-% சதவீதம் வரை கட்டணம் உயர்த்தப்படுகிறது.

இது விலைவாசி உயர்வுக்கு மேலும் வழி வகுக்கும். அன்றாடம் நாம் பயன்படுத்தும் காய்கறி மளிகை பொருட்கள் எண்ணெய் உள்ளிட்ட எல்லா பொருட்களுக்கும் விலை கூடுவதற்கு வாய்ப்பு உள்ளது. உற்பத்தியான பொருட்களை கொண்டு செல்வதற்கு போக்குவரத்து செலவு லாரி வாடகை கூடுவதன் மூலம் எல்லா பொருட்களிலும் விலை உயர்வும் வியாபாரிகள் மீது தான் பழி விழும். சுங்க கட்டண உயர்வு உயர்வின் தாக்கம், அதனால் ஏற்படும் விலை உயர்வால் உருவாகும், பொது மக்களின் கோபத்தை சில்லறை வணிகர்கள் தான் எதிர்கொள்கிறார்கள்.

டீசல், பெட்ரோல், மண்ணெண்ணெய், கச்சா பொருட்கள் விலை உயர்ந்தாலும் அதன் சுமை பொருட்கள் மீது ஏற்றப்பட்டு வணிகர்களுக்கு பாரமாக அமைந்து விடுகிறது.

சுங்கச்சாவடிகளை கட்டுப்படுத்தும் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் மத்திய அரசும் காலாவதியான சுங்கச் சாவடிகள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை. மேலும் சுங்க கட்டன உயர்வு சில்லறை வணிகர்களுக்கு கூடுதல் சுமையாகும் ஏற்கனவே நடைமுறையில் உள்ள வரிகள் ஏற்றப்பட்டு சில்லறை வணிகம் அதால பாதாளத்துக்கு செல்கிறது. இதை உணர்ந்து மத்திய அரசு உடனடியாக சுங்க கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும் என்கின்ற கோரிக்கையை தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை வைக்கிறது. இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Next Story