கர்நாடகாவில் காங்கிரசுக்கு வெற்றியை ஈட்டித் தந்த காரணிகள்

கர்நாடகாவில் காங்கிரசுக்கு வெற்றியை ஈட்டித் தந்த காரணிகள்
X

கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் வெற்றியை கொண்டாடும் தொண்டர்கள்.

கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி பெற்றுள்ள இந்த மிகப் பெரிய வெற்றிக்கான காரணங்கள் என்னென்ன?.

கர்நாடக சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு இந்த வெற்றி எப்படி சாத்தியமானது என்று அலசினால் முதலாவதாக சுட்டிக்காட்டப்பட வேண்டியது காங்கிரஸ் கட்சிக்குள் நிலவும் ஒற்றுமை. கர்நாடக காங்கிரஸில் டி.கே.சிவகுமாருக்கும், சித்தராமையாவுக்கும் கருத்து மோதல்களுக்கு குறைவு இருந்ததே இல்லை. அது முற்றிலும் சரியாகி விட்டதா? என்பது இன்னும் உறுதியாகாத விஷயமே. ஆனாலும் கூட இந்தத் தேர்தலுக்காக அவர்கள் காட்டிய ஒற்றுமை நிச்சயமாக வெற்றிக்கு ஒரு ஆணிவேராகவே இருந்திருக்கிறது.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் சித்தராமையாவின் 75வது பிறந்தநாளை காங்கிரஸ் கட்சி விழாவாகக் கொண்டாடியது. அதில் ராகுல் காந்தி உள்பட பலரும் கலந்து கொண்டனர். அப்போது மேடையில் சித்தராமையாவையும், டி.கே.சிவக்குமாரையும் ஆரத்தழுவச் செய்தார் ராகுல் காந்தி. அது பல்வேறு விமர்சனங்களை ஏற்படுத்தினாலும், தேர்தலுக்கு அவசியமான ஒற்றுமை அந்த மேடையில் உருவாக்கப்பட்டது.

அதன் பின்னர் ராகுல் காந்தி இந்திய ஒற்றுமை யாத்திரை மேற்கொண்ட போதும், இருவரும் ராகுலுடன் ஒன்றாக கலந்து கொண்டனர். உட்கட்சியில் பூசலும், பிளவும் இருந்தால் மக்கள் முன் வலுவான மாற்றை முன்னிறுத்த முடியாது என்பதே டெல்லி மேலிடத்தின் கருத்தாக இருந்தது.

அதனால் கர்நாடகத் தேர்தலை சித்தராமையாவும், டி.கே.சிவக்குமாரும் இணைந்தே முன்னெடுக்க அறிவுறுத்தப்பட்டனர். அதை அப்படியே செய்தனர். இருப்பினும் முதல்வர் வேட்பாளர் விவகாரத்தில் இன்னும் டி.கே.சிவகுமாருக்கு சில அதிருப்தி உள்ளதாகவே தெரிகிறது. எதுவாயினும் தேர்தல் வெற்றிக்கு உழைப்பதில் இருவரும் காட்டிய ஒற்றுமை பலனளித்துள்ளது. பிரசார மேடைகளில் கூட ஒன்றாகத் தோன்றினர். முதல்வர் வேட்பாளர் விவகாரத்தில் மட்டும் பூசல் இருந்ததால் அதைத் தவிர்த்தே பிரசாரத்தை மேற்கொண்டனர்.

இருவரும் இணைந்து மக்கள் குரல் யாத்திரையை மேற்கொண்டனர். அனைத்து மாவட்ட தலைநகரங்களில் ஒன்றாகவும், பின்னர் அவர்கள் தேர்வு செய்த பகுதிகளில் தனித்தனியாகவும் பிரச்சாரம் செய்தனர். கர்நாடக தேர்தல் அறிவிக்கப்படுவதற்கு வெகு காலத்திற்கு முன்னதாகவே காங்கிரஸ் கையில் எடுத்த கோஷம் தான் பாஜக ஆட்சி மீதான 40 சதவீத கமிஷன் அரசு என்ற விமர்சனம். இதனைக் குறிப்பிட்டு மாநிலம் முழுவதும் பரவலாக போஸ்டர்களை ஒட்டியது காங்கிரஸ். ஃபேஸ்புக், ட்விட்டர், வாட்ஸ்அப், துண்டு பிரசுரங்கள் என அனைத்திலும் காங்கிரஸ், 40 சதவீத கமிஷன் அரசு என்ற விமர்சனத்தை முன்னெடுத்தது.

இது தேசிய அளவில் பிரபலமாக்கப்பட்டது. "40% சர்க்கார்" என்ற தலைப்பில், பாஜக ஆட்சியில் நடந்த பல்வேறு துறைகளின் ஊழல்களை காங்கிரஸ் பட்டியலிட்டது. கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை தலைமையிலான பாஜக அரசு, அரசின் திட்டங்களை செயல்படுத்துவதற்கு ஒப்பந்ததாரர்களிடம் 40 சதவீத கமிஷன் கேட்பதாக ஒப்பந்ததாரர் சங்கத்தினர், பிரதமர் மோடிக்குக் கடிதம் எழுதினர். முன்னாள் அமைச்சர் ஈஸ்வரப்பா 40 சதவீதம் கமிஷன் கேட்டதாக குற்றம் சாட்டி, ஒப்பந்ததாரர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார்.

இந்த விவகாரத்தை முன் வைத்து கர்நாடக பாஜக அரசு மீது ஊழல் குற்றச்சாட்டுகளை காங்கிரஸ் கூறியது. கடந்த வாரம் 40 சதவீத கமிஷன் அரசு என்ற பெயரில் இணையதளம் தொடங்கி பொதுமக்களிடம் புகார் மனுக்களை கோரியது காங்கிரஸ். இதைத் தொடர்ந்து முதல்வர் பசவராஜ் பொம்மைக்கு ரேங்க் கார்டு வெளியிட்டு சர்ச்சையை கிளப்பியது அது. பேடிஎம் ஸ்கேனர் போன்று 'பே சிஎம்' எனும் தலைப்பில் முதல்வர் பசவராஜ் பொம்மையின் படத்துடன் போஸ்டரை வெளியிட்டது. இதில் பசவராஜ் பொம்மையின் படம் கியூஆர் கோட் வடிவில் இடம் பெற்றது.

காங்கிரஸ் கட்சியின் இத்தகைய பிரச்சாரம் மக்கள் மத்தியில் எடுபட்டது என்றே சொல்ல வேண்டும். கர்நாடக தேர்தல் பிரச்சார மேடைகளில் பிரதமரோ, அமித்ஷாவோ ஊழல் ஒழிப்பு பற்றி எதுவும் பேசவில்லை. அதை விட முக்கியமான விஷயம் பிரசார மேடைகளில் ஈஸ்வரப்பாவும் இடம் பெற்றார். ஊழலை முன் வைத்தே மல்லிகர்ஜூன கார்கே, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி என முக்கியத் தலைவர்கள் அனைவரும் பிரச்சாரம் செய்தனர்.

கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தல் அறிவிப்பு வெளியாவதற்கு முன்னர் இருந்தே மதச்சார்பற்ற ஜனதா தளத்தை சற்று விலக்கியே வைத்திருந்தது காங்கிரஸ். காரணம் முன் ஏற்பட்ட கசப்பான அனுபவமின்றி வேறேதும் இருக்க முடியாது. இந்தத் தேர்தல் பாஜக - காங்கிரஸ் இடையேயான போட்டியாக மட்டுமே இருக்க வேண்டும் என்பதே காங்கிரஸின் வியூகமாக இருந்தது.

அதனால் மதச்சார்பற்ற ஜனதா தளத்தை வரவேற்கவும் இல்லை, விமர்சிக்கவும் இல்லை. ஒருவேளை கடுமையான விமர்சனங்களை முன்வைத்தால் அது வொக்கலிகா, தலித், முஸ்லிம் வாக்குகளை சிதறடிக்கலாம் என்பதால் இவ்வாறாக தவிர்த்திருக்கலாம். இதனால் தான் தேர்தல் கருத்துக் கணிப்புகள் சில தொங்கு சட்டசபை உருவாகலாம் என்று கூறியிருந்தாலும் கூட மஜதவை நாடுவதாக காங்கிரஸ் சிறு சமிக்ஞை கூட காட்டவில்லை.

அதேபோல் காங்கிரஸ் விலக்கி வைத்த இன்னொரு கட்சி ஏஐஎம்ஐஎம். அசாதுதீன் ஓவைசியின் இந்தக் கட்சியை உ.பி. தேர்தலின் போது பாஜகவின் பி டீம் என்று காங்கிரஸ் வெகுவாக சாடியது. ஆனால் அதுபோன்று எந்த ஒரு பிரசாரத்தையும் இத்தேர்தலில் காங்கிரஸ் செய்யவில்லை. முழுக்க முழுக்க இருமுனை போட்டியாகவே காங்கிரஸ் அணுகியது.

காங்கிரஸ் கட்சி தனது தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்ட 5 அறிவிப்புகள் அக்கட்சிக்கு வாக்குகளை அதிகமாக ஈர்த்தன என்றும் கூறப்படுகிறது. க்ருஹ லக்ஷ்மி திட்டத்தின் கீழ் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.2000 வழங்கப்படும். பெண்களுக்கு இலவச பேருந்து பயணம். யுவா நிதி திட்டத்தின் கீழ் வேலையில்லா பட்டதாரிகளுக்கு குறைந்தது இரண்டாண்டுகள் வரை மாதம் ரூ.3,000 வழங்கப்படும். வேலையில்லா டிப்ளமோ பயின்றவர்களுக்கு ரூ.1,500 வழங்கப்படும். க்ருஹ ஜோதி திட்டத்தின் கீழ் ஒவ்வொரு வீட்டுக்கும் 200 யூனிட்டுகள் வரை இலவச மின்சாரம் வழங்கப்படும். பொதுப்பணித் துறையில் வெளிப்படையான ஒப்பந்தப் புள்ளிகள் கோரப்படும் நடைமுறை அமல்படுத்தப்படும். பொதுப்பணித் துறை, ஊரக வளர்ச்சித் துறை, பாசனத்திட்டம், நகர்ப்புற வளர்ச்சி, மின் துறை அரசு ஒப்பந்தங்களில் முறைகேடு லஞ்சம் கண்டறியப்பட்டால் அவற்றைத் தடுக்க சிறப்புச் சட்டம் இயற்றப்படும். இந்த 5 அறிவிப்புகளும் மக்களை வெகுவாகக் கவர்ந்து.

அதே வேளையில், காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் பஜ்ரங் தளத்தை தடை செய்வோம் என்ற அறிவிப்பு வெளியானது. பாஜகவுக்கு அது நல்லதொரு பிடிமானமாகக் கிடைத்தது. ஆனால், கர்நாடக முன்னாள் முதல்வரும், மூத்த காங்கிரஸ் தலைவருமான வீரப்ப மொய்லி, பஜ்ரங் தள அமைப்பை தடை செய்யும் திட்டம் காங்கிரஸிடம் இல்லை. வெறுப்பை விதைக்கும் அமைப்புகளை தடை செய்யும் அதிகாரம் மாநில அரசுக்கு இல்லை. எங்களின் தேர்தல் அறிக்கையில் வெறுப்பு பிரச்சாரம் செய்யும் அமைப்புகள் குறித்து, உச்ச நீதிமன்றம் தெரிவித்த கருத்துக்களின் அடிப்படையிலே சிலவற்றை குறிப்பிட்டுள்ளோம்.

ஒரு கட்டத்தில் சர்தார் வல்லபாய் படேல் ஆர்.எஸ்.எஸ், அமைப்பை தடை செய்தார். அதனை திரும்ப பெற்றது ஜவஹர்லால் நேரு தான் என்பதை பாஜகவுக்கு நினைவூட்ட விரும்புகிறேன் என்று கூறி காங்கிரஸுக்கு அந்த அறிவிப்பால் எவ்வித பின்விளைவும் ஏற்படாமல் சரி கட்டினார்.

அதன் நீட்சியாகத் தான் இன்று கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் வெற்றிக்காக அக்கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி சிம்லாவில் உள்ள பழமையான அனுமன் கோயிலான ஜக்கு கோயிலுக்குச் சென்றதையும் பார்க்கலாம்.

கர்நாடக தேர்தல் வரலாற்றில் 73.19% என்ற வாக்குப்பதிவில் ஒரு புதிய மைல்கல். அதற்கு காங்கிரஸின் மேற்கூறிய வியூகங்கள் எல்லாம் ஒரு காரணம் எனக் கூறப்படுகிறது. கர்நாடகா அரசியல் வரலாற்றில் கடந்த 38 ஆண்டுகளில் எந்த ஒரு கட்சியும் தொடர்ந்து இரண்டு முறை ஆட்சி அமைத்ததில்லை. அது தான் இப்போதும் நடந்திருக்கிறது போன்ற விமர்சனங்கள் வந்தாலும் கூட இந்த தேர்தல் வெற்றி கர்நாடகத்திற்கு மட்டுமானது என்பதைவிட அடுத்து வரவிருக்கும் மக்களவைத் தேர்தலுக்கான முன்னோட்டமாகவும் இருக்கலாம் என்பதே அரசியல் வல்லுநர்களின் கருத்தாக உள்ளது.

Tags

Next Story
Weight Loss Tips In Tamil