ரத்தன் டாடா ஏன் உலகப் பணக்காரர் பட்டியலில் இல்லை?
ஏழை மற்றும் பணக்காரர்களுக்கு இடையிலான வித்தியாசம் மிகப் பெரிய அளவில் இருக்கும் போதும், டாடா குழுமத்தின் மீது மிகப்பெரிய வெறுப்பு இல்லாமல் இருப்பது ஏன்? டாடா குழும நிறுவனங்கள் மக்களை சுரண்டுவதாக பெரிய அளவில் புகார்கள் எழாமல் இருப்பது ஏன்?
உலக அரங்கில் மிகப்பெரிய வியாபார குழுமங்களில் டாடாவும் ஒன்று. ஆனால் டாடா குடும்பத்திலிருந்து ஒருவரின் பெயர் கூட உலக பணக்காரர்கள் பட்டியலில் இடம் பெறாமல் இருப்பது ஏன்? இப்படி பல ஏன்களுக்கு டாடா குழுமத்தின் 150 ஆண்டு கால வரலாறு கொடுக்கும் ஒரே விடை 'சமூகம்' தான்.
`இந்திய சமூகத்துக்கு செலவழித்து இருக்கிறது' டாடா குழுமம். ஒரு சாதாரண வணிக நிறுவனமாக தொடங்கப்பட்ட டாடா குழுமம், நாளடைவில் இரும்பு ஆலை, மின் உற்பத்தி நிறுவனம், நட்சத்திர ஹோட்டல் என எல்லாவற்றையும் இந்தியாவுக்காகவும் இந்தியர்களின் தரத்தை பறைசாற்றவும் கட்டமைத்து சாதித்துக் காட்டியது டாடா.
நிச்சயமாக டாடா குழுமம் தன்னுடைய தொழில்கள் மூலம் லாபம் ஈட்டியது தான். ஆனால் அதிலும் கணிசமான தொகையை மீண்டும் இந்திய சமூகத்துக்கு செலவழித்து இருக்கிறது. உதாரணத்திற்கு பெங்களூரில் கட்டமைக்கப்பட்டுள்ள இந்தியன் இன்ஸ்டிட்டியூட் ஆஃப் சயின்ஸ் என்கிற ஒரே ஒரு நிறுவனத்தை குறிப்பிடலாம். அந்த நிறுவனத்தை தான் திட்டமிட்டபடி, சர்வதேச தரத்தில் கட்டமைக்க தன் சொத்துகள் முழுவதையும் அர்ப்பணித்தார் ஜாம்ஷெட்ஜி டாடா.
இன்று வரை சர் தொராப்ஜி டிரஸ்ட், சர் ரத்தன் டாடா டிரஸ்ட், ஜெ ஆர் டி டிரஸ்ட் என பல்வேறு டிரஸ்டுகள் மூலம் மருத்துவமனைகள், அறிவியல் ஆராய்ச்சி மையங்கள், கலை அரங்கங்கள், நோய் குறித்த ஆராய்ச்சி மையங்கள், பயிற்சிப் பள்ளிகள் என பலதும் கட்டமைக்கப்பட்டு இந்தியாவின் பலதரப்பு மக்களுக்கும் சேவை செய்து வருகிறது டாடா குழுமம்.
டாடா குடும்பத்தில் உள்ள பெரும்பாலான நிறுவனங்களுக்கு டாடா சன்ஸ் என்கிற நிறுவனம் தான் தாய் நிறுவனமாக செயல்பட்டு வருகிறது. அந்நிறுவனம் தான் டிசிஎஸ், டாடா ஸ்டீல், டாடா மோட்டார்ஸ், டாடா பவர், டாடா கெமிக்கல்ஸ்... என பல்வேறு டாடா குழுமத்தின் கணிசமான பங்குகளை வைத்திருக்கிறது.
ஆனால் டாடா சன்ஸ் நிறுவனத்தின் சுமார் 66 சதவீத பங்குகளை மேலே குறிப்பிட்ட பல்வேறு டிரஸ்டுகள் தான் வைத்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. அதாவது, நிறுவனங்களுக்கு கொடுக்கப்படும் ஈவுத் தொகை, டிரஸ்டுகளுக்குத் தான் அதிகளவில் சென்று சேர்கின்றன.
பொதுவாக இது போல தாய் நிறுவனங்களின் பங்குகளை அந்நிறுவனத்தின் நிறுவனர்கள் அல்லது நிறுவன குடும்பங்கள் தான் வைத்திருக்கும். ஆகையால்தான் ஃபேஸ்புக் நிறுவனத்தில் மார்க் ஸுக்கர்பெர்க், டெஸ்லா நிறுவனத்தின் தலைவர் எலான் மஸ்க், பெர்க்ஷயர் ஹதவே நிறுவனத்தின் தலைவர் வாரன் பஃபெட் ஆகியோர் உலகப் பணக்காரர்கள் பட்டியலில் இடம் பிடித்திருக்கிறார்கள்.
இன்று ஒட்டுமொத்த டாடா குழுமத்திலும் 10 பெரும் துறைகளின் கீழ் 30 நிறுவனங்கள், ஆறு கண்டங்களில், 100 உலக நாடுகளில் தன் வியாபாரத்தைச் செய்து வருகின்றன.
2021ஆம் ஆண்டில் டாடா நிறுவனங்களின் ஒட்டு மொத்த வருவாய் 103 அமெரிக்க பில்லியன் டாலரைத் தொட்டுள்ளது. டாடா குழுமத்தில் ஒட்டுமொத்தமாக 8,00,000 -க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர்.
2021 டிசம்பர் நிலவரப்படி டாடா குழுமத்தில் மொத்தம் 29 நிறுவனங்கள் பங்குச் சந்தைகளில் பட்டியலிடப்பட்டு சுமார் 314 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பு கொண்டதாக வர்த்தகமாகி வருகின்றன.
டாடா குழுமம் எத்தனை பெரியது?
இந்திய பங்குச்சந்தையில் டாப் 100 நிறுவனங்களை சந்தை மதிப்பின் அடிப்படையில் பட்டியலிட்டால், டிசிஎஸ், டைட்டன், டாடா மோட்டார்ஸ், டாடா ஸ்டீல், டாடா பவர், டாடா கன்ஸ்யூமர் புரோடக்ட்ஸ்... என பல நிறுவனங்களை பட்டியலிடலாம். அப்படி என்றால் டாடா குழுமம் எத்தனை பெரியது என்பதை காட்சிப்படுத்த இந்த ஒரு தரவு போதுமானது. சுருக்கமாக டாடா குழுமம் முதலாளித்துவத்திற்கு ஒரு புதிய முகத்தை கொடுத்திருக்கிறது என்றால் அது மிகையில்லை.
டாடாக்களை விமர்சிக்கலாம், அவர்களோடு உடன்படலாம் அல்லது முரண்படலாம், ஆனால் நிச்சயமாக அவர்களை புறந்தள்ள முடியாது. இந்திய வணிக வானில் அவர்களுக்குக் கிடைத்திருக்கும் இடம் இனி மற்ற எந்த ஒரு நிறுவனத்திற்கும் கிடைக்குமா என்பது சந்தேகமே.
டாடாக்கள் கடவுளால் ஆசிர்வதிக்கப்பட்டவர்கள் என்று இந்தியாவின் மிகப்பெரிய பங்கு சந்தை முதலீட்டாளரான ராகேஷ் ஜுஜுன்வாலா ஒரு முறை கூறினார். ரத்தன் டாடா, இந்தியாவின் அவசரத் தேவைக்காக உதவிகளைச் செய்து வந்தார். சுகாதார வசதிகள், கல்வி முறையை மேம்படுத்துதல் போன்ற பல விஷயங்கள் மூலம் இந்தியாவின் வளர்ச்சிக்கு அவர் நிறைய பங்களிப்புகளைச் செய்துள்ளார்.
எந்த ஒரு தொழிலதிபருக்கும் இருக்கும் ஆசை, பணக்காரர் பட்டியலில் முதலிடம் பெற வேண்டும் என்பதுதான். பெரும் பணக்கார்கள் பட்டியலில் இடம் பெறாவிட்டாலும், இதயங்களை வென்ற பணக்காரராக இருக்கிறார் டாடா.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu