மருத்துவக் கல்லூரியில் ராக்கிங்.. மாணவி வேடத்தில் சென்று மடக்கிய பெண் காவலர்...

மருத்துவக் கல்லூரியில் ராக்கிங்.. மாணவி வேடத்தில் சென்று மடக்கிய பெண் காவலர்...
X

கல்லூரிக்குள் மாணவி வேடத்தில் சென்று ராக்கிங் செய்தவர்களை கண்டறிந்த பெண் காவலர்.

அரசு மருத்துவக் கல்லூரியில் ராக்கிங் புகார் எழுந்ததைத் தொடர்ந்து பெண் காவலர் ஒருவர் மாணவி வேடத்தில் கல்லூரிக்குள் சென்று குற்றவாளிகளை அடையாளம் கண்டறிந்தார்.

மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரியான மகாத்மா காந்தி நினைவு மருத்துவக் கல்லூரியில் ராக்கிங் நடப்பதாக பல்கலைக்கழக மானியக் குழுவின் உதவி எண்ணுக்கு புகார் வந்தது. அதன் அடிப்படையில், வழக்கும் பதிவு செய்யப்பட்டது. ராக்கிங் நடந்தது பற்றி விரிவாகப் புகாரில் இருந்ததே தவிர, செய்தவர்கள் யார் என்பது குறித்த விவரங்கள் கிடைக்கவில்லை.

ராக்கிங்கில் எத்தனை பேர் ஈடுபட்டார்கள் என்றும் தெரியவரவில்லை. இருப்பினும், ராக்கிங் செய்தவர்களை கண்டறிந்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க காவல் துறை முடிவு செய்தது. அதற்காக விரிவான ஒரு திட்டத்தை ரகசியமாக தயார் செய்தது. அதன்படி, 24 வயதான பெண் காவலர் ஒருவர் கல்லூரிக்கு மாணவி போல அரசு மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

அனைத்து மாணவர்களுடனும் நன்கு பேசிப் பழகி, இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட அனைவரின் விவரங்களையும் அவர் திட்டி உள்ளார். அது மட்டுமல்லாமல், மற்றொரு பெண் காவலர் செவிலியர் போலவும், இரண்டு தலைமைக் காவலர்கள் உணவக ஊழியர்கள் போலவும் பணியில் சேர்ந்து, இந்த ராக்கிங் கொடுமையில் ஈடுபட்ட நபர்களைக் கண்டறிந்து உள்ளனர்.

போலீஸார் மாறுவேடத்தில் கல்லூரிக்குள் நுழைந்து, ராகிங் நடந்ததா? என்பதை உறுதி செய்ததோடு, முக்கியமாக இந்த சம்பவத்தில் தொடர்புடைய 11 மாணவர்களையும் அடையாளம் காண உதவி உள்ளனர். மூத்த மருத்துவ மாணவர்கள், இளநிலை மாணவர்களை தவறாக நடந்து கொள்வது போல செய்ய வற்புறுத்தி ராக்கிங் கொடுமை செய்திருப்பது முழு விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது. விரைவில் விசாரணைக்கு ஆஜராகி, விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. மாணவர்களின் பட்டியல் கல்லூரி நிர்வாகத்துக்கு கிடைக்கப்பெற்றதும், அவர்கள் அனைவரும் மூன்று மாதங்களுக்கு கல்லூரியில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டு உள்ளனர்.

Tags

Next Story
ஈரோடு பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்: கூகுள் நிறுவனத்தின் உதவியுடன் குற்றவாளியை கண்டறியும் முயற்சி