பிரதமர் மோடி நாளை மறுநாள் கர்நாடகா, மகாராஷ்டிராவில் சுற்றுப்பயணம்

பிரதமர் மோடி நாளை மறுநாள் கர்நாடகா, மகாராஷ்டிராவில் சுற்றுப்பயணம்
X

பிரதமர் மோடி.

பிரதமர் நரேந்திர மோடி, கர்நாடகா மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களில் நாளை மறுநாள் (19 ஆம் தேதி) சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.

கர்நாடகாவின் யாத்கிரி மாவட்டத்திற்கு நண்பகல் 12 மணிக்கு செல்லும் பிரதமர், அங்கு குடிநீர், பாசனம் உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சிப் பணிகளை தொடங்கி வைப்பதுடன் புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார். கலபுராஜி மாவட்டத்திற்கு இரண்டே கால் மணிக்கு செல்லும் பிரதமர், அங்கு நலத்திட்ட உதவிகளை வழங்குவதுடன் தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.

பிறகு மும்பை செல்லும் அவர், மாலை 5 மணியளவில் மும்பையில் பல்முனை வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி முடிவுற்ற திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். 6.30 மணியளவில் மும்பை மெட்ரோவின் இரண்டு வழி ரயில் சேவையை தொடங்கி வைக்கும் பிரதமர், மெட்ரோ ரயிலில் பயணமும் மேற்கொள்கிறார்.

தரமான குடிநீரை அனைத்து வீடுகளுக்கும் குழாய் மூலம் வழங்க வேண்டும் என்ற பிரதமரின் தொலைநோக்கு திட்டத்தை அடிப்படையாக கொண்டு கர்நாடகாவின் யாத்கிரி மாவட்டத்தில் ஜல் ஜீவன் இயக்கத்தின்கீழ் பல கிராமங்களுக்கு குடிநீர் வழங்கும் திட்டத்திற்கு பிரதமர் அடிக்கல் நாட்டுகிறார். இந்த திட்டத்தின்கீழ் 117 எம்எல்டி திறன் கொண்ட நீர் சுத்திகரிப்பு நிலையம் 2,050 கோடி ரூபாய் செலவில் கட்டப்படவுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் சுமார் 2.3 லட்சம் வீடுகள் குழாய் மூலம் குடிநீர் வசதி பெறும்.

இதேபோல் சூரத்-சென்னை விரைவுச்சாலையின் ஒரு பகுதியாக 2,000 ஆறு வழி பசுமை சாலைத் திட்டத்திற்கு பிரதமர் அடிக்கல் நாட்டுகிறார்.

மகாராஷ்டிராவில் 38,800 கோடி ரூபாய் மதிப்பிலான முடிவுற்ற திட்டங்களை தொடங்கி வைப்பதுடன், புதிய திட்டங்களுக்கும் அடிக்கல் நாட்டுகிறார். ரூ.12,600 கோடி மதிப்பில் மும்பை மெட்ரோ ரயில் தடம் 2ஏ மற்றும் 7 –ஐ பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். இந்த நிகழ்ச்சியில் மும்பை 1 மொபைல் செயலியையும் பிரதமர் தொடங்கி வைக்கிறார். மெட்ரோ பயணிகளின் வசதிக்காக இந்த சிறப்பு செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, மலாட், பந்தப், வெர்சோவா, கத்கோபர், பாந்த்ரா, தாராவி, வோர்லி ஆகிய இடங்களில் 17,200 கோடி ரூபாய் செலவில் 7 கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டுகிறார்.

மும்பையில் 3 மருத்துவமனைகளின் மேம்பாட்டுத் திட்டங்களுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டுகிறார். தொடர்ந்து, மும்பையில் ரூ.6,100 கோடி மதிப்பிலான 400 கிலோமீட்டர் சாலைத் திட்டத்தையும் அவர் தொடங்கி வைக்கிறார்.

இதனைத்தொடர்ந்து சத்ரபதி சிவாஜி ரயில் நிலையத்தின் ரூ.1,800 கோடி மதிப்பிலான மறுசீரமைப்புப் பணிகளுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டுகிறார். பின்னர் பங்கேற்கும் நிகழ்ச்சியில் பிரதமரின் ஸ்வநிதி திட்டத்தின் கீழ் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட சாலையோர வியாபாரிகளுக்கு வங்கிக் கடன் தொகையை பிரதமர் விடுவிக்கிறார்.

Tags

Next Story
Weight Loss Tips In Tamil