டெல்லியில் எல்லையிலேயே விவசாயிகளை தடுத்த நிறுத்த போலீசார் தீவிரம்!

டெல்லியில் எல்லையிலேயே விவசாயிகளை தடுத்த நிறுத்த போலீசார் தீவிரம்!

விவசாயிகள் போராட்டம் - கோப்புப்படம் 

டெல்லியில் நாளை மறுதினம் போராட்டம் நடத்த விவசாய சங்கங்கள் திட்டமிட்டுள்ளநிலையில், எல்லையிலேயே தடுத்து நிறுத்த போலீசார் தீவிரம்

மத்திய அரசு கொண்டுவந்துள்ள 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரி டெல்லி-அரியானா எல்லையில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் கடந்த 2020ம் ஆண்டு ஆகஸ்ட் முதல் 2021 டிசம்பர் வரை ஓராண்டுக்கு மேல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தை தொடர்ந்து 3 வேளாண் சட்டங்களையும் மத்திய அரசு ரத்து செய்தது.

இந்நிலையில், வேளாண் விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை உறுதி செய்ய சட்டம் கொண்டுவரவேண்டும், சுவாமிநாதன் கமிஷனின் பரிந்துரைகளை அமல்படுத்தவேண்டும், விவசாயிகள் மற்றும் விவசாயம் சார்ந்த தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம் வழங்கவேண்டும், லகீம்பூர் கேரியில் நடந்த வன்முறையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்கவேண்டும், போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் மீது பதியப்பட்ட வழக்குகளை ரத்து செய்ய வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் போராட்டம் நடத்த சம்யுதா கிஷான் மோச்சா மற்றும் கிசான் மஸ்டோர் மோச்சா ஆகிய விவசாய அமைப்புகள் அழைப்பு விடுத்துள்ளன.

'டெல்லி நோக்கி பேரணி' என்ற பெயரில் நாளை மறுதினம் 13ம் தேதி சுமார் 200 விவசாய அமைப்புகளை சேர்ந்த 15 முதல் 20 ஆயிரம் விவசாயிகள் டெல்லி நோக்கி பேரணியாக வர திட்டமிட்டுள்ளனர். 2 ஆயிரம் முதல் 2 ஆயிரத்து 500 டிராக்டர்களில் டெல்லி-நொய்டா எல்லையில் விவசாயிகள் திரண்டு போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளனர். அதேபோல், உத்தரபிரதேசம், சண்டிகர், பஞ்சாப்பில் இருந்தும் விவசாயிகள் போராட்டத்தில் பங்கேற்க திட்டமிட்டுள்ளனர்.

இதையடுத்து, விவசாயிகள் பேரணியாக வருவதை தடுக்க டெல்லி எல்லையில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. விவசாயிகளை டெல்லி எல்லையிலேயே தடுத்து நிறுத்த போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

டெல்லிக்கு அருகே உத்தரபிரதேசத்தின் டிக்ரி எல்லையிலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும், விவசாயிகள் போராட்டத்தை தடுக்க கான்கிரீட் தடுப்புகள், கம்பி வேலிகள் அமைக்கப்பட்டுள்ளன.

டெல்லி எல்லைகளில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. அரியானாவில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. செல்போன் இண்டர்நெட் சேவை துண்டிக்கப்பட்டுள்ளது. பஞ்சாப் எல்லை சீல் வைக்கப்பட்டுள்ளது.

போராட்டம் அறிவித்துள்ள விவசாய சங்கங்களுடன் மத்திய மந்திரிகள் பியூஷ் கோயல், நித்யானந்த ராய், அர்ஜுன் முண்டா ஆகியோர் நாளை சண்டிகரில் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர். பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டால் விவசாயிகள் போராட்டம் ரத்தாகும் இல்லையேல் நாளை மறுதினம் டெல்லி எல்லையில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபடுவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story