ஒரு மணி நேர பேட்டியில் என்ன பேசினார் பிரதமர் மோடி..?
பிரதமர் மோடி (கோப்பு படம்)
தந்தி டிவிக்கு பிரதமர் மோடி அளித்த பேட்டியில் மிக மிக தேர்ந்தெடுக்கபட்ட வார்த்தைகளை கொண்டு மிக பக்குவமாக அதை எதிர்கொண்டார்.
மோடி என்பவர் உலக தலைவர்களில் ஒருவர். அவர் சொல்லும் ஒவ்வொரு வார்த்தையும் கனமானது. வலுவானது. மகா முக்கியமானது எனும் வகையில் அந்த ஒவ்வொரு வார்த்தையும் கவனிக்கப்பட வேண்டும். அவரிடம் மூன்று வகையான கேள்விகள் தான் முக்கியமாக கேட்கப்பட்டன. அல்லது அவரின் பதிலை மூன்றாக பிரிக்கலாம்.
முதலாவது ஆன்மீக மனம் கொண்ட மோடி. இரண்டாவது இந்தியாவினை வழிநடத்தும் மோடி. மூன்றாவது தமிழகம் மேல் தனி அபிமானம் கொண்ட மோடி. நெறியாளர்களின் கேள்விகளையும் அதை அவர் எதிர்கொண்ட விதமும் இந்த மூன்று பிரிவுகளில் தான் வரும்.
அவரின் ஆன்மீகம் ஆக சிறந்தது. தான் ஒரு இந்துவாக பெருமை கொள்கின்றார். அதுவும் காசியில் அவர் நிலை கொண்ட பின் காசிக்கும் தமிழகத்துக்குமான ஆன்மீக தொடர்பின் ஆழத்தை சுட்டி காட்டுகின்றார்.
காசிக்கும் தமிழகத்துக்குமான பந்தத்தில் இருந்து தமிழை பிடிக்கின்றார். அந்த தமிழ் இந்தியாவின் சொத்து உலகின் மூத்தமொழி. காலத்திற்கு முந்தையது. அதை ஐநா வரை கொண்டு சென்று இன்னும் ஆழமாக உலகெல்லாம் பரப்ப வேண்டும் என்கின்றார்.
அவர் சம்ஸ்கிருத்தத்தை, இந்தியினை, தன் மொழியான குஜராத்தியினை சொல்லாமல் இந்தியாவின் பொக்கிஷம் என தமிழை சொல்வதில் அவரின் மனதின் சத்தியம் வெளிப்படுகின்றது, அவர் மனம் சத்தியமும் தர்மமும் நிறைந்தால் தவிர இப்படி சொல்ல முடியாது.
ராமர்கோயில் 500 வருட தவம் என்பவர். தமிழகத்தின் ராமர் பெயர் தாங்கிய ஊர்கள் முதல், மக்கள் பெயர் வரை சொல்லி சிலாகித்தார். ராமேஸ்வரம், திருவரங்கம் என பல இடங்களின் பெருமைகளை சொல்லி அயோத்தியில் நின்ற சிலிர்க்கும் தருணங்களை சொன்னார்.
அவர் மனதில் எதையும் மறைத்ததாக தெரியவில்லை. அந்நேரம் அவர் பாரத பிரதமராக உலக தலைவராக தெரியவில்லை. அனுமனின் சாயல் கொண்ட அடியாராக அவர் உருகியதை அவர் முகம் காட்டிற்று. ராமர் கோயில் கட்டும் பணி மிகவும் இயல்பாக நடந்தது. நீதிமன்ற உத்தரவுப்படி ஒரு அறக்கட்டளை கட்டிய ஆலயம், அங்கே அரசியலுக்கு இடமில்லை, நடந்தது தெய்வத்தின் செயல் என்ற போது அவரின் ஞானமுகம் வெளிபட்டது.
தமிழகத்தின் பெருமைகளை ஒரு உலக தலைவன் பாரத பெருந்தலைவன் சொல்லும் போது இதுநாள் வரை இதையெல்லாம் சொல்ல யாருமில்லை என்பதும், எப்படியெல்லாம் தமிழகம் வஞ்சிக்கபட்டது என்பதும் புரிந்தது.
நெறியாளர் கேட்ட மகா முக்கியமான கேள்வி உலக அரங்கில், வெளியுறவு கொள்கையில் மோடி அரசின் மாற்றம் என்ன என்பது. மோடி அங்கே சீனாவின் முறுகல், பாகிஸ்தானில் புகுந்து இந்தியா அடித்தது, பாகிஸ்தான் தீவிரவாதிகளை வேட்டையாடியது என தன் அரசின் சாதனைகளை சொல்லவில்லை.
மாறாக உலகில் எல்லோரும் நமக்கு நண்பர்கள். எது நமக்கு நன்மையோ அதன் பொருட்டு நாம் உறவு வலுப்படும் என்றார். எனினும் கொரொனா மருந்து, நிதி உதவிகள் என எந்த நாடுகளெல்லாம் கேட்டதோ அதற்கெல்லாம் உதவினோம் என்று கூறி தனது தலைமைப்பண்புகளையும் நிரூபித்தார்.
நாம் இஸ்ரேல், பாலஸ்தீனம், அமெரிக்கா, ரஷ்யா என எல்லோருக்கும் நண்பன். யாருக்கும் பகையில்லை உறவுக்கு தோள் கொடுப்போம் என மிகவும் அழகாக சொன்னார். இன்னும் பாரதம் விஸ்வகுரு என போற்றப்படும் நிலைக்கு வந்திருப்பதை சொன்னார்.
அவர் இந்தியாவின் ஊழல் மற்றும் போதை மருந்து சவால்களை பற்றி மிக அழகாக சொன்னார். ஊழலை ஒழிப்பது சுதந்திரமான ஈடி. அதோடு போதை ஒழிப்புதுறையும் சேர்ந்து சுயாதீனமாக தன் கடமையினை செய்கின்றது என்றார்.
போதை கடத்தல் பணம் இங்கே பெரிது. அதோடு ஊழலும் சேர்ந்து நாட்டை நாசமாக்க முயல்கின்றன. அதை சம்பந்தபட்ட அமைப்புக்கள் அனுமதிக்காது என மிகவும் உறுதியாக சொன்னார். சந்தடி சாக்கில் தமிழகத்தில் நிலவும் போதை அபாயம் பற்றியும், அதை களையவேண்டிய அவசரம் பற்றியும் மிகவும் தெளிவாக பேசினார்.
அவர் இந்தியாவின் அடிப்படை நிறைவு பற்றி பேசினார். எல்லா மக்களுக்கும் எல்லாமும் கிடைக்க வேண்டும். மின்சாரம், கழிவறை, ஆகியன அடிப்படை தேவையாக இருத்தல் வேண்டும். அதை நிறைவு செய்கின்றோம் என்றார். இது பின் தங்கிய வட மாகாணங்களில் முக்கியமான காரியம். ஏன் பாஜக அசைக்க முடியாத நிலையில் இருக்கின்றது என்றால் இதனால் தான் என்பதையும் சுட்டிக்காட்டினார்.
அவருக்கு தேசிய அளவில் ஒரு தேசிய கட்சி தான் பாஜகவுக்கு போட்டியாக இருக்க வேண்டும் எனும் தேசிய ஜனநாயக மனப்பான்மை இருக்கின்றது. காங்கிரஸ் வலுவான கட்சியாக வரட்டும். அங்கே அருமையான அறிவாளிகள் உண்டு என மன்மோகன் சிங், சசிதரூர் போன்றோரை சுட்டிகாட்டி, இப்படிபட்ட அறிவாளிகளை கொண்டு அவர்கள் எழுந்து வரட்டும் என ஆலோசனைகளை கூறினார்.
திமுக பற்றி அவர் பெரிதாக ஏதும் சொல்லவில்லை. ஆனால் வாரிசுகள் அரசியலுக்கு வருவதற்கும், வாரிசு அரசியலுக்கும் உள்ள வித்தியாசத்தை அருமையாக புரிய வைத்தார். வாரிசுகள் எத்தனை பேர் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். ஆனால் ஒரு குடும்பம் கட்சி நடத்தி, அந்த குடும்பத்தை சேர்ந்தவர்கள் மட்டுமே பதவிக்கு வர வேண்டும். கட்சியில் மற்றவர்களை பதவிக்கு வரவிடாமல் தடுத்து, தன் குடும்ப உறுப்பினர்களுக்கு மட்டும் பதவி தருவது அழகல்ல.
அதனைத் தான் பா.ஜ.க., எதிர்க்கிறது என்றும் பிரதமர் சுட்டிக்காட்டினார். அவர் தகுதிக்கு என்ன சொல்ல வேண்டுமோ அதை மக்களே தீர்ப்பளிப்பார்கள் என பொறுப்பாக சொன்னார். உலக அரங்கில் இந்தியாவின் நிலை. இந்தியா அடைந்திருக்கும் வளர்ச்சி என அவரின் பேச்செல்லாம் தேசம் பற்றியே ஒருந்தது.
தமிழகத்தினை பொறுத்தவரை அவருக்கு பெரிய அபிமானம் இருக்கின்றது. தனது அரசு என்னென்ன செய்தது என்பதை மக்களும், கட்சியினரும், நிதி அமைச்சரும் சொல்வார்கள் என்பதால் முழுமையாக அப்பக்கம் செல்லாமல் நேரம் கருதி எதிர்கால தமிழகம் பற்றி அழகாக சொன்னார்
அவரின் கணிப்பும் சிந்தனையும் கைதட்ட வைப்பவை. காமராஜருக்கு பின் ஒரு தலைவன் தமிழக தொழில்வளம் பற்றி பெரும் கனவு கொண்டிருப்பது இதுதான் முதல் முறை.
அவர் தமிழகத்தின் மூன்று முக்கிய தொழில்களை வளர்த்தால் போதும் தமிழகம் தானே மேலெழும் என்கின்றார். அது ஆயுத தயாரிப்பு, சுற்றுலா, துறைமுகங்கள்.
உண்மையில் இந்த மூன்றும் மகா முக்கிய தொழில்கள். இதனை சரியாக செய்தாலே டாஸ்மாக் மூட்படும், கல்குவாரி மண்குவாரி அவசியமில்லை, பெரும் பணமும் வரியும் அரசுக்கு கொட்டும், பெரும் வேலைவாய்ப்பும் பெருகும். தமிழகம் நல்ல பட்டதாரிகளின் முன்னோடி, திறமையானவர்கள் மிகுந்திருக்கும் மாகாணம், படிப்பும் திறமையும் கொண்டோர் ஏராளம். மிக நுணுக்கமான அடித்தளமும் உண்டு.
அதாவது சென்னையில் டாங்கி தொழிற்சாலை, திருச்சியில் துப்பாக்கி தொழிற்சாலை இன்னும் கோவைபக்கம் விமான உதிரி பாக தயாரிப்பு என பல உண்டு. அப்படியே மகேந்திரகிரி, குலசேகரபட்டினம் என பிரமாண்ட திட்டங்கள் உண்டு. கூடங்குளம், கல்பாக்கம் என அணுவுலைகள் உண்டு. இந்த ஆயுத தயாரிப்பினை விரிவுபடுத்த தமிழகத்தை விட பொருத்தமான இடம் இல்லை. 2030ல் ஆயுத ஏற்றுமதியில் முதல் 10 இடங்களுக்குள் தேசம் வரவேண்டும் எனும் மோடியின் கனவு மெய்ப்பட தமிழகம் சரியான இடம்.
அவர் இன்னும் இதனை விஸ்தரிக்க வேண்டும் என்கின்றார், இதனால் இனி ராணுவ கனரக வாகனங்கள், பீரங்கிகள், துப்பாக்கிகள் செய்யும் இடமாக தமிழகம் வளரும். கோவை விமான தயாரிப்பில் முக்கியமாகும். இன்னும் ரகசியம் காக்கப்படும். அணுசக்தியில் இயங்கும் நீர்மூழ்கிகள் சில கப்பல்களெல்லாம் தமிழக கரைகளில் கட்டப்படும். குலசேகரபட்டினம் வான்வெளி பலத்தை கொடுக்கும். இப்படி மிகப்பெரிய பாதுகாப்பு கருவிகளை செய்யும் மகா முக்கிய இடமாக மாறும். அதுதான் என் கனவு என்கின்றார். இன்னும் சுற்றுலா என்பது கவனிக்கதக்கது. அதில் தமிழகம் போல் இன்னொரு மாநிலம் வரமுடியாது. அற்புதமான கோயில்கள், அழகான சிற்பங்கள், மிக பெரும் வாழ்வு வாழ்ந்த இனத்தின் தடங்கள், வியக்க வைக்கும் சிற்பங்கள், சித்தர்கள் தலம், மகா பழமையான காலங்களின் தொன்மம் என உலகம் உலகின் பழமையான இடமாக தமிழகத்தை பார்க்கின்றது. செஞ்சி கோட்டை போன்ற அற்புதமான கோட்டைகளெல்லாம் உண்டு. மிக சிறந்த சுற்றுலா மையமாக தமிழகத்தை மாற்ற முடியும். அதை தன்னால் செய்ய முடியும் என்கின்றார் மோடி. திராவிட அரசுகள் தமிழகத்தின் சுற்றுலாவினை பெருக்கவில்லை, அப்படி பெருக்கினால் இந்து கொயில்களின் பெருமைகள் இன்னும் பல தொன்மங்கள் இந்துக்களின் தமிழகமாக அதை காட்டிவிடும் என அஞ்சினார்கள். மோடி அதை உடைக்கின்றார். இங்கு ஆன்மீக சுற்றுலா வரலாற்று சுற்றுலா பெரிய வருமானம் கொடுக்கும் என்கின்றார். அப்படியே கடல் என்பது மீன்பிடிக்க மட்டுமல்ல, அது தொழில் வளர்க்க என்பது மோடியின் திட்டம், அவ்வகையில் ஒரு பக்கம் முழுக்க கடல் கொண்ட தமிழகத்தினை பெரும் துறைமுகமாகக் திட்டமிடுகின்றார். 2047க்குள் இந்தியா வளர்ந்து நிற்கும். அதன் வளர்ச்சியில் தமிழகம் மிகபெரிய இடம் பிடித்து நிற்கும் என தன் உரையினை முடித்தார்.
தன் கட்சியின் தமிழக நிலைபற்றி கேட்டபோது கூட அண்ணாமலை நாட்டுக்கு கிடைத்த பொக்கிஷம், பணம் சம்பாதிக்க அல்லாமல் நாட்டுக்காக பணியாற்ற எங்களோடு நிற்கின்றார் என அவரை ஒரு தேச அடியாராக சுட்டிக் காட்டியதோடு நிறுத்தி கொண்டார். யார்மேலும் பழி இல்லை. எள்முனையேனும் அரசியல் இல்லை. எதிர்கட்சியினை சாட இதுதான் வாய்ப்பு எனும் வஞ்சனை இல்லை. ஒரு மகானின் தோற்றத்தில் பட்டினத்தார் போல காசியும், விவேகானந்தர் போல தேசியமும், வீரசிவாஜி போல பக்தியும் வீரமும், பாரதி போல் பரந்துபட்ட பார்வையும் கொண்டு தன் தகுதிக்கும் மகா உயர்ந்த இடத்துக்குமான வார்த்தைகளோடு முடித்தார்.
மோடி குடும்பம் எனும் வார்த்தை சாதாரணம் அல்ல. நம் வீட்டில் அல்லது ஊரில் மிக மூத்த பக்குவம் அடைந்த ஒரு பெரிய மனிதரோடு பேசியது போல் நிறைவு வந்தது. அவர் அரசியல் பேசவில்லை மாறாக அரசியலால் நாட்டுக்கு என்ன செய்தோம் என்ன செய்ய இருக்கின்றோம் என சொன்னார். எந்த கட்சியினையும் பழிக்கவில்லை அவர்கள் நாட்டுக்காக பணியாற்றினால் இன்னும் நல்லது. ஊழலை ஆதரிக்காமல் உண்மையான மக்கள் பணிசெய்தால் இன்னும் நல்லது என்றார்.
பண்டிதர் நேரு என கவனமாக சொன்னாரே அன்றி அந்த செங்கோல் அவமானப்படுத்தப்பட்டு கைத்தடி என சொல்லபட்டதை வேதனையுடன் கடந்தாரே தவிர யாரையும் குற்றம் சொல்லவில்லை. தமிழக ஆதீனங்களின் பெருமையினை சொன்னாரே வேறு எதைப் பற்றியும் வாய்திறக்கவில்லை.
அவர் பேசும் போதெல்லாம் பாரதியின் வரிகள்தான் காதில் ஒலித்தன. "நாமிருக்கும் நாடு நமதென்பதறிந்தோம்,
இது நமக்கே உரிமையாம் என்பதறிந்தோம்!
பூமியில் எவர்க்கும் இனி அடிமை செய்யோம்!பரி
பூரணனுக்கே அடிமை செய்து வாழ்வோம்"
எனும் தேசிய வரிகளும் "வேதம் நிறைந்த தமிழ்நாடு - உயர்
வீரம் செறிந்த தமிழ்நாடு, கல்வி சிறந்த தமிழ்நாடு - புகழ்க்
கம்பன் பிறந்த தமிழ்நாடு - நல்ல
பல்விதமாயின சாத்திரத்தின் - மணம்
பாரெங்கும் வீசுந் தமிழ்நாடு" எனும் வரிகளும் நினைவுக்கு வந்தன. உலக அரங்கில் ஆயுதம் தயாரிக்கும் முக்கிய மாகாணங்கள் என கருதபடும் அமெரிக்காவின் டெக்ஸாஸ், ரஷ்யாவின் கிழக்கு மாகாணங்கள், சீனாவின் தொழில்பேட்டைகள் போல இந்தியாவில் தமிழகத்தை மாற்றுவேன் என சொல்லி உறுதியேற்கின்றார்.
அவர் தமிழகம் பற்றி பெரும் அபிமானமும், தீர்க்கமும், அது உலக அரங்கில் பெரும் இடம் பெறவேண்டும் எனும் துடிப்பும் காட்டும் போது பாரதியின் இன்னொரு வரிகளே நினைவுக்கு வந்தன. "விண்ணையிடிக்கும் தலையிமயம் - எனும் வெற்பை யடிக்கும் திறனுடையார் - சமர்
பண்ணிக் கலிங்கத் திருள்கெடுத்தார் - தமிழ்ப்
பார்த்திவர் நின்ற தமிழ்நாடு"
அதை சரியாக கணித்திருக்கின்றார் மோடி. இந்த மகானின் காலத்தில் நாம் வாழ்வது ஒரு வரம். ஒரு பெரும் சகாப்தம் வாழும் காலத்தில வாழ்கின்றோம் என்பதும் நமக்கு மிகவும் பெருமை.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu